டிஜிட்டல்  திண்ணை: இறுக்கும்  ED…  போவதா, வேண்டாமா? குழப்பத்தில்  கதிர் ஆனந்த்

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும்  திமுக எம்பி கதிர் ஆனந்த் நிர்வகித்து வரும் கல்லூரியில் அமலாக்கத்துறை பணம் கைப்பற்றியதாக தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“ஜனவரி 3ஆம் தேதி காலை முதல் வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருக்கும் துரைமுருகன் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடு, அவரது குடும்பத்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, துரைமுருகனின் ஆதரவாளர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் தொடர்பான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனையை ஆரம்பித்தனர்.

இவற்றில் துரைமுருகன் வீடு பூட்டப்பட்டிருந்ததால் அன்று மதியம் 2:30 மணிக்கு மேல்தான் சோதனை தொடங்கப்பட்டது.  அதே நேரம் துரைமுருகன் குடும்பத்தினர் நிர்வகிக்கக்கூடிய கிங்ஸ்டன் கல்லூரி வளாகத்தில் சுமார் இரண்டு நாட்கள் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகள் பணம் என்னும் இயந்திரங்களோடு வரவழைக்கப்பட்டனர். அப்போது இரண்டு கோடி ரூபாய் ரொக்கம் கல்லூரி வளாகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார் கதிர் ஆனந்த். அப்போது வருமானவரித்துறை நடத்திய திடீர் சோதனையில் சுமார் 12 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதுவும் புதிதாக அச்சடிக்கப்பட்ட 200 ரூபாய் நோட்டுகள் அதில் பெரும்பான்மையாக இருந்தன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காகவே இது ஏற்பாடு செய்யப்பட்டது என சந்தேகப்பட்டு வருமான வரித்துறை பதிவு செய்த வழக்கில், அமலாக்கத் துறையும் பின்பு இணைந்து கொண்டது.

இந்த வழக்கில் கதிர் ஆனந்துக்கு சம்மன்கள் தொடர்ந்து அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் ஜனவரி 3ஆம் தேதி அமலாக்கத்துறை நேரடியாக சோதனையில் இறங்கியது. இந்த சோதனை முடிவில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி  கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஃப்ரஷ் சம்மன்  கொடுத்தது அமலாக்கத்துறை.  

இதற்கிடையே  ஜனவரி 4 ஆம் தேதி  இரவு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.  ஜனவரி 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் முகாமிட்டார். அமலாக்கத் துறை ஜனவரி 22ஆம் தேதி ஆஜராக வேண்டும் என கதிர் ஆனந்துக்கு அனுப்பிய சம்மனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகுவது பற்றி முகுல் ரோகத்கி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்களோடு ஆலோசனை நடத்தினார் துரைமுருகன்.

இது பற்றி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் சம்மன் மேல் சம்மன் கைது வளையத்தில் கதிர் ஆனந்த் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம் நடந்தது நடப்பது என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

விசாரணை தேதியான, ஜனவரி 22ஆம் தேதி நெருங்கிவிட்ட நிலையில்…. நேற்று ஜனவரி 20ஆம் தேதி கதிர் ஆனந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அமலாக்கத்துறை  அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கதிர் ஆனந்த் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, ‘இது தொடர்பாக நீங்கள் உங்களது மாநில உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என தெரிவித்துவிட்டனர்.

இந்த சூழலில் தான் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடந்த சோதனையின் போது கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் கல்லூரி வளாகத்தில் 13 கோடியே 70 லட்ச ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்களை காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டன. மேலும் சில ஆவணங்களும் ஹார்ட் டிஸ்க்குகளும் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதேநேரம் உச்சநீதிமன்ற அறிவுரைப்படி உயர்நீதிமன்றத்தை கதிர் ஆனந்த் தரப்பு அணுகவில்லை.

ஜனவரி 22 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் ஆஜராக வேண்டும் என்ற நிலையில்… 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை முதல் துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆகியோர் வழக்கறிஞர்களோடு தீவிர ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது வழக்கறிஞர்கள், அமலாக்கத்துறை விசாரணைக்கு கதிர் ஆனந்த் செல்வதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது, தைரியமாக செல்லலாம் என கருத்து தெரிவித்தனர்.

ஆனால் கதிர் ஆனந்தோ, ‘இந்த விஷயத்தில் அமலாக்கத்துறை மிகவும் சீரியஸாக இருப்பதாகவே கருத வேண்டி உள்ளது. உச்சநீதிமன்ற அறிவுரைப்படி ஒருவேளை உயர்நீதிமன்றத்தை அணுகினால் கூட அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சட்டரீதியாக தடை வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தகவல்கள் வெளி வருகின்றன.

எனவே தகுந்த சட்ட நிவாரணம் இல்லாமல் விசாரணைக்கு ஆஜராவதால் கைது நடவடிக்கை வரை கூட அமலாக்கத்துறை மேற்கொள்ள வாய்ப்புள்ளது’ என்று வழக்கறிஞர்களிடம் கூறியிருக்கிறார்.  

21ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சிவகங்கை மாவட்டம் சென்றிருக்கும் நிலையில் முதல்வரிடமும் ஆலோசனை கேட்கலாம் என துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி  கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகலாமா என்ற ஆலோசனை ஜனவரி 21ஆம் தேதி இரவு வரை, தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share