டிஜிட்டல் திண்ணை: கர்நாடக பாஜக தோல்வி… மா. செ‌‌.க்கள் கூட்டத்தில் எடப்பாடி ரியாக்ஷன்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் மே 17ஆம் தேதி நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டப் புகைப்படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென மே17 ஆம் தேதி கூட்டப்பட்டது. கர்நாடக தேர்தல் முடிவுகள், அதிமுகவின் சட்ட விதிகள் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி வெளியிடப்பட்டமை, தமிழ்நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் கள்ளச்சாராய மரணங்கள் இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டு மே 17ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொள்ளவில்லை. அவர் அமெரிக்கா சென்றிருப்பதால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்கிறார்கள் திண்டுக்கல் வட்டார அதிமுகவினர்.

கூட்டத்தில் வழக்கமான வரவேற்புரை வைபவங்கள் முடிந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி சுமார் 40 நிமிடங்கள் பேசியிருக்கிறார். அவரது பேச்சில் முழுக்க முழுக்க கட்சி ரீதியான அம்சங்களே அதிகம் இடம் பெற்றிருந்தன என்கிறார்கள். ‌

எடப்பாடி பேசும்போது, ‘நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கட்சி ரீதியாக நமக்கு இருந்த எல்லா தடைகளும் நீங்கி விட்டன. தேர்தல் ஆணையம் நாம் கொண்டு வந்த கட்சி சட்ட திருத்தங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டது. இந்த நிலையில் இப்போது நமது ஒரே பணி கட்சியை பலப்படுத்த வேண்டியதுதான்.
பூத் கமிட்டிகளை முறைப்படி அமையுங்கள். ஏற்கனவே நான் சொன்னது மாதிரி ஒவ்வொரு பூத்திலும் பெரும்பான்மை சமுதாயத்தினர், தலித் சமுதாயத்தினர், பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கட்சிக்கு வேலை பார்க்கும் ஆக்டிவானவர்களை மட்டுமே பூத் கமிட்டிகளில் நியமனம் செய்யுங்கள். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

ஆகஸ்ட் மாதம் நாம் கூட்ட இருக்கும் மாநாடு எல்லோருக்கும் பதில் சொல்லும் வகையில் இருக்க வேண்டும். நமது கட்சியின் உண்மையான பலம் என்ன என்பதை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கு வெளியேயும் நிரூபிக்கிற வகையில் இருக்க வேண்டும்’ என்று பேசிய எடப்பாடி பழனிச்சாமி…

‘மதுரை மாநாட்டுக்காக இப்போதிலிருந்தே சுவர் விளம்பரங்களை தொடங்குங்கள். நான் இனி எல்லா மாவட்டங்களுக்கும் வரப்போகிறேன். நான் செல்லும் இடங்களில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் சுவர் விளம்பரங்கள் இருக்க வேண்டும். டிஜிட்டல் பேனர்கள் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சுவர் விளம்பரங்கள்தான் மக்களிடம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இப்போதிலிருந்தே சுவர்களை பிடிக்க ஆரம்பியுங்கள்’என்று உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘தமிழ்நாட்டை இப்போது ஆண்டு கொண்டிருக்கிற திமுக அரசு, அரசு ஊழியர்களில் இருந்து அனைத்து தரப்பினரிடமும் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கு பொன்னான வாய்ப்பு.

ஸ்டாலின் செய்யும் ஒவ்வொரு தவறும் நம்மை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும். இப்போது நடக்கிற கள்ளச்சாராய மரணங்கள் பற்றி மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள். அமைச்சர் பிடிஆர் பேசிய ஆடியோ உண்மை தான் என்று ஸ்டாலினுக்கு தெரியும். அதனால் தான் அவரது துறையை மாற்றியிருக்கிறார். திமுக அரசில் இருக்கும் ஒரு அமைச்சரே முதலமைச்சரின் குடும்பம் எவ்வளவு சம்பாதித்திருக்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலமாகவே பேசியிருக்கிறார். இதையும் மக்களிடம் வேகமாக கொண்டு செல்லுங்கள்.

மாவட்டங்களில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்துங்கள். முக்கியமான பிரச்சினைகள் என்றால் நானே நேரில் வந்து ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன்.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல வரும் சட்டமன்றத் தேர்தலிலும் நமக்கு மிகப் பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கட்சிப் பணியாற்றுங்கள். அடுத்த ஆட்சியை நாம்தான் அமைக்க போகிறோம்’ என்று பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கே.பி. முனுசாமி, எஸ். பி. வேலுமணி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோரோடு சில நிமிடங்கள் கலந்தாலோசனை நடத்தி இருக்கிறார் எடப்பாடி. ஆலோசனையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடியிடம் பேசிய கேபி முனுசாமி, ‘இனிமேல் அவங்களால நம்மை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. ஆளும் கட்சியாக இருந்த மாநிலத்திலேயே அவங்க செல்வாக்கு அவ்வளவுதான். தமிழ்நாட்டில் அவங்களுக்கெல்லாம் ஒன்னும் கிடையாது. அதனால் நாம் இனி அப்பர் ஹேண்ட் எடுக்கணும் அண்ணே’என்று கூறியிருக்கிறார்.
அப்போது முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, ‘இப்போது நாம் அப்பர் ஹேண்டில் தான் இருக்கிறோம். நாம் கொண்டு வந்த சட்ட திருத்த விதி மாற்றங்களை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் டெல்லி சென்றபோது கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்மிடம் நல்ல விதமாகத்தான் பேசினார்.
இப்போது நாம் எடுக்கும் முடிவுகள் அதிமுகவை தனிமைப்படுத்தி விடக் கூடாது. 99ல் இருந்து பாஜக கூட்டணியில் இருந்த கலைஞர் அப்போது காங்கிரஸ் தனக்கு தோதாக இருப்பதை உறுதி செய்து கொண்டு தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் கூட்டணி மாறினார். நமக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. பாஜகவை விட்டு வெளியே வந்து விட்டு அனைவராலும் எதிர்க்கப்படக்கூடிய ஒரு இடத்தில் அதிமுகவை நிறுத்தி விடக்கூடாது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.
கர்நாடக தேர்தல் தோல்வி அடைந்தது குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் மகிழ்ச்சியே தென்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பாஜக தோல்வி பற்றி கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் கருத்துகளை கேட்டு அமைதியாக இருந்திருக்கிறார். இது பற்றி வெளிப்படையான கருத்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் வேலுமணியின் கருத்தே எடப்பாடியின் கருத்தாக இருக்கும் என்கிறார்கள் அதிமுக உயர்மட்ட வட்டாரங்களில்” என்ற சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்

விஷச்சாராய மரணம்: அறிக்கை கேட்கும் ஆளுநர்

கர்நாடக வெற்றி: காங்கிரஸை எச்சரித்த பிரசாந்த் கிஷோர்

+1
0
+1
4
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *