டிஜிட்டல் திண்ணை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்… ஐ.பி.எஸ். Vs ஐ.ஏ.எஸ்.- என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

Published On:

| By Selvam

வைஃபை ஆன் செய்ததும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிய அப்டேட்டுகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சைடு எஃபெக்ட்டுகள் அரசின் நிர்வாக முக்கிய சக்கரங்களான ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் ஆகிய அதிகாரிகள் கூடாரங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த 2023 மே 13 ஆம் தேதி மரக்காணத்தில் கள்ளச்சாராயத்தால் 14 உயிர்கள் பறிபோயின. அப்போது முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ஸ்பாட்டுக்கு சென்றார். விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்த அவர், அங்கேயே ரிவ்யூ மீட்டிங் நடத்தினார்.

அதில் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது மதுவிலக்கு கலால் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், ‘நாங்கள் எஸ்.பி.க்கு பல முறை கள்ளச்சாராயம் பற்றி எச்சரித்து தகவல் அனுப்பினோம். அவர் கண்டுகொள்ளவே இல்லை” என்று கூறினார். அப்போதே அந்த கூட்டத்தில் சலசலப்பானது.

மரக்காணம் கள்ளச்சாராய சம்பவத்துக்காக அப்போதைய விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மரக்காணத்தில் இரு இன்ஸ்பெக்டர்கள், இரு சப் இன்ஸ்பெக்டர்கள், செங்கல்பட்டில் ஒரு இன்ஸ்பெக்டர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள் என சட்டம் ஒழுங்கு காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.

அப்போதே ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் இது லேசான அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஒரு வருடம் கழித்து அதேபோல மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து கள்ளக்குறிச்சியில் 52 பேர் இறந்துவிட்டனர். இந்த விவகாரத்திலும் கள்ளக்குறிச்சி எஸ்.பி. சமய் சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ஏ.எஸ்.பி.யாக இருந்து முதல் முதலில் கள்ளக்குறிச்சியில்தான் அவர் எஸ்.பி.யாக பொறுப்பேற்றார். முதல் பொறுப்பு காலத்திலேயே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் டி..எஸ்பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. எஸ்..எஸ்.ஐ, ரைட்டர் உள்ளிட்ட ஒன்பது சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதுதான் ஐபிஎஸ். அதிகாரிகளின் வாட்ஸ் அப் க்ரூப்புகளில் விவாதமாக வெடித்துள்ளது.

‘மரக்காணம் சம்பவமாகட்டும், கள்ளக்குறிச்சி சம்பவமாகட்டும்…இரண்டுமே மெத்தனால் சம்பந்தப்பட்ட விஷச் சாராய சாவுகள். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலின் வணிகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டியது கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் கடமை.

எந்தத் தொழிற்சாலை எவ்வளவு மெத்தனால் வாங்குகிறார்கள், அதை சரியாக பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் சீரிய இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டியது கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் வேலை மற்றும் மதுவிலக்கு போலீசாரின் வேலை.

ஆனால், மெத்தனால் பரிமாற்றத்தால் நடந்த இந்த மேற்கண்ட இரு சம்பவங்களிலும் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸாரே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கலெக்டர், தாசில்தார், வி.ஏ.ஓ. போன்ற வருவாய் துறை அதிகாரிகள் தண்டிக்கப்படுவதே இல்லை. மரக்காணம் சம்பவத்துக்குப் பின் அப்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் இதுகுறித்து உள்துறை செயலாளர் அமுதாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில் மெத்தனால் உரிமம், பயன்பாடு, பரிமாற்றம் பற்றி ஆய்வு செய்ய வேண்டியது வருவாய் துறை அதிகாரிகளின் பொறுப்பு என குறிப்பிட்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு போலீஸாருக்கு அன்றாடம் நடக்கும் குற்றச் சம்பவங்கள், பொது நிகழ்வுகள், தலைவர்களின் பாதுகாப்பு என்று ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன.அதனால்தான் மதுவிலக்கு போலீஸ் என்ற ஒரு தனி பிரிவே ஏற்படுத்தப்பட்டது.

ஆனபோதும் கள்ளக்குறிச்சி சம்பவத்திலும் ஐ.ஏ.எஸ், மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விடப்பட்டு ஐபிஎஸ், மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸ் அதிகாரிகள் மட்டும்தான் தண்டிக்கப்படுகிறார்கள் என சில சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியிடமே முறையிட்டிருக்கிறார்கள்.

கோட்டையிலும் டிஜிபி அலுவலகத்திலும் இதுவே இப்போது பேச்சாக இருக்கிறது. அரசின் இரு முக்கிய அங்கங்களான ஐ.ஏ.எஸ்- ஐபிஎஸ் ஆகிய முகாம்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் இந்த முரண்பாட்டை முதல்வர் ஸ்டாலின் எப்படி சரி செய்யப் போகிறார் என்ற கேள்வியும் அதிகாரிகள் மத்தியில் எழுந்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“பால் கேன்களுக்கு 12% ஜிஎஸ்டி” – நிர்மலா சீதாராமன்

50% மானியத்தில் கோழிக்குஞ்சு: அமைச்சர் அனிதா அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel