வைஃபை ஆன் செய்ததும் ஈரோடு சட்டமன்ற கிழக்கு தொகுதியில் திமுகவின் பிரச்சார போட்டோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை. திமுகவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் நிற்கிறது.
இந்த நிலையில் வழக்கமான இடைத்தேர்தல் பாணியை இந்த முறை பின்பற்றாமல் லோக்கல் திமுகவினரை மட்டுமே பிரச்சாரத்தில் களம் இறக்கி உள்ளது திமுக. கிராமம் கிராமமாக அமைச்சர்கள் முற்றுகையிட்டு மக்களுக்கு பல்வேறு பரிசு பொருட்களையும் பணத்தையும் வழங்கும் மற்ற இடைத்தேர்தல் போல் இல்லாமல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெறிச்சோடி காணப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக வீடு வீடாக சென்று மக்களை அமைச்சர் முத்துசாமி, வேட்பாளர் சந்திரகுமார் சகிதம் சந்தித்து வருகிறார். அப்போது மக்கள் பலரும், ‘ஏன் இந்த முறை பொங்கலுக்கு ஸ்டாலின் பணம் கொடுக்கவில்லை? அவரோட பொங்கல் சீதனம் வரும்னு நினைச்சுக்கிட்டிருந்தோம். ஆனா ஏமாத்திப்புட்டாரே?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல ஒவ்வொரு தெருவிலும் இன்னும் எங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என்ற மக்களின் குமுறலையும் அமைச்சர் முத்துசாமியிடம் நேரடியாகவே கொட்டியிருக்கிறார்கள்.

பொங்கல் திருவிழாவை ஒட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கரும்பு, அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டதே தவிர ரொக்கம் வழங்கப்படவில்லை.
எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பொங்கலுக்கு ரொக்கப் பரிசு வழங்க வேண்டும் என திமுக அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி நெருக்கடியை காரணம் காட்டி வழங்க முடியவில்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்.
நிதி அமைச்சரின் இந்த கருத்தை சுட்டிக்காட்டி திமுக அமைச்சர்கள் பலரே தங்களுடைய தனிப்பட்ட வட்டாரங்களில், ’ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குறோம். இந்த தை மாசம் எக்ஸ்ட்ரா ஒரு ஆயிரம் ரூபாய்னு நினைச்சுக்கிட்டு பொங்கலுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கலாம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி எல்லாம் ஏன் முடிவெடுக்கிறார்கள் என்று தெரியலையே’ என்று புலம்பினார்கள்.
இதெல்லாம் முதலமைச்சரின் கவனத்துக்கும் சென்றன. இப்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களின் புலம்பல்களும் முதல்வர் ஸ்டாலினை எட்டி இருக்கின்றன.
இந்த பின்னணியில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார். அதை செயல்படுத்தி தமிழகம் முழுதும் பெண்களை மகிழ்ச்சிப்படுத்துவது தொடர்பான தீவிர ஆலோசனையில் இருக்கிறார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில் முக்கியமானவர்கள்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவோம் என அறிவித்தார்கள். இது திமுகவின் தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமான வாக்குறுதியாக பெண்களை கவர்ந்தது.
2021 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்த பிறகும் கூட இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எல்லாம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது எப்போது என கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு 2023 பட்ஜெட்டில் அப்போதைய நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செப்டம்பர் 2023 முதல் வழங்கப்படும் என அறிவித்தார். இதற்காக ஏழாயிரம் கோடி ரூபாயையும் ஒதுக்கீடு செய்தார். அதன்படியே 2023 செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் முதலமைச்சர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வருமானம் கொண்டவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் பயன் அடைய முடியும். கார், டிராக்டர் சொந்தமாக வைத்திருப்பவர்கள் பயன் அடைய முடியாது, அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயனடைய முடியாது என்று பல தகுதிகள் பிடிஆரால் நிர்ணயிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு புதிது புதிதாக விண்ணப்பங்கள் மக்களால் அளிக்கப்பட்டன. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான உதயநிதி, ‘எல்லா தொகுதிகளிலும் கலைஞர் உரிமைத் தொகை பயனாளிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். என் தொகுதி மக்களும் கேட்கிறார்கள். இதுபற்றியெல்லாம் முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு சென்று விண்ணப்பித்த 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுப்போம்’ என்று அறிவித்தார்.
இந்த நிலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு முக்கிய முடிவெடுத்திருக்கிறார். அதாவது இந்த வருடத்திலேயே மகளிர் உரிமைத் தொகை ரூபாயான ஆயிரம் என்பதை ஆயிரத்து ஐநூறு ரூபாயாக உயர்த்துவது, தகுதியுள்ள புதிய விண்ணப்ப தாரர்களையும் இணைப்பது என்பதுதான் அந்த முடிவு.
அனேகமாக வரும் ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளில் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். உடனடியாக இது செயல்படுத்தப்படும் என்றும் சொல்கிறார்கள். அதாவது வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாகவே பெண்கள் மாதம் 1500 ரூபாய் பெறும் நிலை உருவாகும்.
ஆயிரம் ரூபாய் என்பதே இப்போது கடும் நிதிச் சுமைக்கு இடையில்தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆயிரத்து ஐநூறு ரூபாயாக உயர்த்துவதால் ஏற்படும் நிதிச் சுமையை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாக தலைமைச் செயலாளர், நிதியமைச்சர் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
- டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் வந்து சென்றால், மாற்றம்! திக் திக் அமைச்சர்கள்!
- எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை… ஆனால்! – இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் சண்முகம் பேச்சு!
- திருச்சி முதல் காஷ்மீர் வரை : அகரம் இப்போ சிகரமாச்சு!
- தமிழ்நாட்டில் எதிர்ப்பு, கேரளாவில் ஆதரவு… கம்யூனிஸ்ட்களின் இரட்டை வேடம்… கொதிக்கும் அரசு ஊழியர் சங்க நிர்வாகி!
- 12,000 பேருக்கு வேலை… இளைஞர்களுக்கு குட் நியூஸ்!