வைஃபை ஆன் செய்ததும் கலைஞர் கனவு இல்லம் பற்றிய கிராம சபை தீர்மானங்கள் குறித்த செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“2026 சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின். அதில் முக்கியமானதாக கலைஞர் கனவு இல்லம் திட்டம் அமைந்திருக்கிறது.
முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் கலைஞர் கனவு இல்லங்கள் கட்டுவதற்காக ஒரு இல்லத்துக்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இந்த திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு தொடங்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டதால் பயனாளிகள் தேர்வு நடைபெறவில்லை. இதையடுத்து ஜூலை முதல் வாரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் முன்னிலையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இப்படித்தான் நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன.
ஆனால், நடந்ததே வேறு என்கிறார்கள் திமுகவின் கிளைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு கிராம ஊராட்சி தலைவர்கள்.
இது பற்றி அவர்களிடம் பேசிய போது… ’2021 இல் திமுக ஆட்சி அமைத்ததிலிருந்து திமுகவுக்காக வேலை பார்த்த கட்சி தொண்டர்கள், தொடக்க நிலை கட்சி நிர்வாகிகள் ஆகியோருக்கு எந்தவிதமான நலத்திட்ட உதவிகளும் பயன்களும் பெரிய அளவில் சென்று சேரவில்லை.
கலைஞர் ஆட்சி என்றால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான திமுக குடும்பத்தினருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி, மின்சார வாரியத்தில் பணி, போக்குவரத்துத் துறையில் பணி, வருவாய் துறைகளில் கடைநிலை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் கிடைக்கும். ஆனால், கடந்த 3 வருட ஆட்சியில் திமுக தொடக்க நிலை நிர்வாகிகளுக்கும் இதுபோன்ற பலன்கள் இல்லை.
இந்த நிலையில் தான் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தின் மூலம் திமுகவின் ஆதரவாளர்களாக இருக்கக்கூடிய தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கலாம் என்று ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் தொடக்கநிலை நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.
தத்தமது கிராமங்களில் உள்ள திமுக ஆதரவாளர்களுக்கும் அனுதாபிகளுக்கும் கலைஞர் கனவு இல்லத்தை பெற்று தரலாம் என்று திமுக நிர்வாகிகள் முயற்சியும் செய்தனர்.
ஆனால், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பிடிஓ) சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களிடம் ஒரு பட்டியலை கொடுத்து அந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளை டிக் செய்தும் கொடுத்து இவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் ஒதுக்குவதற்கான ஒப்புதலை ஊராட்சி சபை அதாவது கிராம சபை கூட்டம் கூட்டி பெற்று தாருங்கள் என்று கூறி இருக்கிறார்கள்.
அதன்படி அதிகாரிகள் அளித்த பட்டியல் தான் இப்போது தமிழகம் முழுவதும் பயனாளிகள் பட்டியலாக மாறி உள்ளது. அதாவது 2006- 11 திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட பட்டியல். அதற்குப்பின் 2011 – 21 அதிமுக ஆட்சியில் வீடு பெறுவதற்கு தகுதியானவர்களாக அந்தந்த அதிமுக கிளைச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மூலம் தயாரித்துக் கொடுத்த பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் தான் இப்போது கலைஞர் கனவு இல்லம் பெறுவதற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதிலும் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பட்டா இடம் இல்லை, ஊரை விட்டு போய்விட்டனர் என்ற காரணம் காட்டி சில இடங்களில் ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் நிலையில் உள்ளன. ஆனால் திமுக கிளைச் செயலாளர் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுக்கான ஒதுக்கீடாக சில வீடுகளாவது வேண்டும் என்ற கோரிக்கையையும் அதிகாரிகள் புறக்கணித்து விட்டனர்.
ஆக கலைஞர் கனவு இல்லம் என்ற இந்த திட்டம் எந்த வகையிலும் திமுகவின் தொடக்கநிலை நிர்வாகிகளுக்கு அவர்கள் சிபாரிசு செய்யும் பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிகாரிகள் தரப்பில் இது பற்றி விசாரித்த போது, ’எங்களுக்கு மேல் இடத்திலிருந்து வந்த உத்தரவின் படி தான் நாங்கள் பயனாளிகள் பட்டியலை தயாரித்து வருகிறோம். இதில் அரசியல் கட்சியினரின் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது என்பது எங்களது உயர் அதிகாரிகளின் உத்தரவு.
ஏனென்றால் கடந்த 2017- 18 ஆண்டுகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மோசடி நடைபெற்றதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட 24 அதிகாரிகள் மீது தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதனால் கட்சிக்காரர்களின் சிபாரிசு படி செயல்பட்டால் நாங்கள் தான் பிற்காலத்தில் பதில் சொல்ல வேண்டும் என்பதால் ஏற்கனவே அரசிடம் இருக்கும் பட்டியலின் அடிப்படையில் அந்த பட்டியலில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’ என்று விளக்கம் அளிக்கிறார்கள்.
கலைஞர் கனவு இல்லத்தை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ராக்கெட் ப்ராஜெக்ட் ஆக கருதுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் இந்த திட்டத்தால் திமுக நிர்வாகிகளுக்கோ, திமுக அபிமானிகளுக்கோ திமுக ஆதரவாளர்களுக்கோ பெரிய பலன் இல்லாததால் தேர்தல் வேலை செய்யும் அவர்களிடம் இது பெரிய கசப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் கள நிஜம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போட்டோ ஷூட்டுக்கு ரெடியா? – அப்டேட் குமாரு
விக்கிரவாண்டி தேர்தல்: “அதிமுக ஓட்டு எங்களுக்கு தான்” – என்டிஏ கூட்டத்தில் அண்ணாமலை