வைஃபை ஆன் செய்ததும் சட்டமன்ற வீடியோ காட்சிகளும், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்ட காட்சிகளும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அதை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஜனவரி 11ஆம் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமியை தனிப்பட்ட முறையில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
அப்போது அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி சட்டமன்றத்தில் எடப்பாடி வராத நாட்களில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து அவரிடம் கவலையோடு விவரித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

இது பற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘எடப்பாடி பழனிசாமி ஜனவரி 6ஆம் தேதி சட்டமன்றத்துக்கு வந்தார். அதன் பிறகு பத்தாம் தேதி வந்தார். மற்ற நாட்களில் வரவில்லை.
காய்ச்சல் காரணமாக தான் வர இயலாத நாட்களில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய வேண்டாம் என்றும் அவையிலேயே இருந்து திமுகவுக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து பேசுமாறும் எடப்பாடி அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், ஒன்பதாம் தேதி சட்டமன்றத்தில் வேலுமணி எழுந்திருக்க, அவரோடு சேர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமாரும் எழுந்திருந்தார். சுமார் 35க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களோடு கோஷமிட்டுக்கொண்டே வெளியேறினார்கள்.
இதைப் பார்த்து அதிர்ந்த கே.பி.முனுசாமி வேறு வழியின்றி அவரும் எழுந்து வெளியே சென்று இருக்கிறார். அவரோடு 13 சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னால் நின்றனர்.
சட்டமன்ற வளாகத்தில் வேலுமணி நடந்து வந்து கே.பி.முனுசாமியிடம் ஏதோ பேசினார். அப்போது முனுசாமி வருத்தப்பட்டு போங்க போங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தான் வேலுமணி சட்டமன்றத்தில் தனி ஆவர்த்தனம் செய்வதாகவும், அதற்கு உதயகுமாரும் உதவுவதாகவும் எடப்பாடியிடம் கூறியிருக்கிறார் கே.பி.முனுசாமி.
ஏற்கனவே அதிமுகவில் வேலுமணிக்கு தனி ஆதரவு வட்டம் இருப்பதாக தொடர்ந்து பேச்சுகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் மாவட்ட செயலாளர்கள் வேலுமணியின் கோவை வீட்டுக்குச் சென்று அவரை சந்திப்பதும் அவரிடம் ஆலோசனைகள் பெற்று அதன்படியே நடப்பதும் அதிமுகவில் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் தான் பேரவையில் முனுசாமிக்கும் வேலுமணிக்கும் இடையில் நடந்த இந்த உரசல் எடப்பாடி பழனிசாமியிடம் பஞ்சாயத்துக்கு சென்றிருக்கிறது.
இதற்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனது பேச்சு மூலமே ஒரு பதில் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
மா.செ.க்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘ பொங்கல் பண்டிகைக்கு பிறகு 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நான் சுற்றுப்பயணம் வர இருக்கிறேன். சுற்றுப்பயணம் என்றால் வந்து மீட்டிங் பேசி விட்டு செல்வதல்ல. கட்சியின் பூத் கமிட்டி முதல் அனைத்தையும் ஆய்வு செய்யப் போகிறேன். நமக்கு மாணவரணி பலவீனமாக இருக்கிறது என்று ஏற்கனவே நான் சொல்லி உள்ளேன். 27 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாணவர் அணியில் பதவி கொடுங்கள்.

சுற்றுப்பயணத்தை எங்கிருந்து ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்று என்னிடம் நீங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பல நிர்வாகிகள் தங்களது பகுதியில் இருந்தும் தங்களது மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று என்னிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
நான் சுற்றுப்பயணத்தை தம்பி வேலுமணியின் மாவட்டத்தில் இருந்து ஆரம்பிப்பதாக இருக்கிறேன்’ என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவுக்கு வலுவான மாவட்டம் மற்றும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் வென்ற மாவட்டம் என்ற அடிப்படையிலும் வேலுமணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் சுற்றுப்பயணத்தை கோவையில் இருந்து எடப்பாடி ஆரம்பிக்கப் போகிறார். இந்தத் தகவல் அறிந்ததும் வேலுமணி வட்டாரம் மேலும் உற்சாகமாக இருக்கிறது’ என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…