வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் நேரடியாக ஆன் லைனுக்கு வந்து மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய நபர்களைக் குறிவைத்து மத்திய அரசின் வருமான வரித்துறை நடத்திய ரெய்டு மே 26 ஆம் தேதி 40 இடங்களில் தொடங்கிய நிலையில், இன்று (மே 28) மூன்றாவது நாளாக சில இடங்களில் மட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இதற்கிடையே அமைச்சர் செந்தில்பாலாஜி மே 27 ஆம் தேதி தனது சொந்த மாவட்டமான கரூருக்கு வந்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது குறித்து மாவட்ட செயற்குழு கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். பின் கூடைப் பந்து விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பங்கேற்றார். தொழிலாளர் முன்னேற்ற சங்க நிகழ்வில் பங்கேற்றார்.
இன்று (மே 28) கோவை மாவட்டத்துக்குச் சென்ற செந்தில்பாலாஜி அங்கேயும் ரிலாக்ஸ் ஆகவே காணப்பட்டார். கட்சி நிகழ்ச்சிகளிலும், அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்களிலும் கலந்துகொண்டார். கரூரிலும், கோவையிலும் செந்தில்பாலாஜியை பார்த்த அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலர் ரெய்டு பற்றி விசாரித்தனர்.
‘அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பண்றாங்க. அதனால நமக்கு என்ன பிரச்சினை? நமக்கு என்ன வேலை இருக்கோ அதை பார்ப்போம். ரெய்டால நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நீங்க எப்போதும் போல கட்சி வேலையை பாருங்க’ என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார்.
திமுக நிர்வாகிகளை விட இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அதிகமாக டென்ஷனாகியிருக்கிறார். அவர் செந்தில்பாலாஜிக்கு அடிக்கடி தொடர்புகொண்டு பேசி, ‘என்னாச்சு… ரெய்டுல என்ன நடக்குது?’ என்றெல்லாம் விசாரித்திருக்கிறார்.
அவரிடமும், ‘ஒண்ணும் பிரச்சினை இல்லண்ணே… எல்லாமே நார்மல்தான்’ என்று ரிலாக்ஸாகவே சொல்லியிருக்கிறார் செந்தில்பாலாஜி.’
இதேநேரம் இன்று வருமான வரித்துறை இயக்குனர் சிவசங்கரன் கரூருக்கு சென்றிருக்கிறார். முதல் நாள் ரெய்டில் திமுகவினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளை நலம் விசாரித்த சிவசங்கரன் செய்தியாளர்களிடமும் பேசினார்.
அப்போது அவர், ‘வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இன்னும் சில புகார்களையும் பதிவு செய்ய இருக்கிறோம். நாங்கள் பயந்து ஓடிவிடமாட்டோம்’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் மூன்றாம் நாள் ரெய்டு குறித்து வருமான வரித்துறை வட்டாரங்களில் பேசியபோது, ‘செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்ட தொடர்பாளர்களைக் குறிவைத்ததில் நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
நாங்கள் ரெய்டுக்கு சென்றபோது முதலில் செல்போன்களை பறித்து வைப்போம். அதில் சில செல்போன்களில் ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டிங் இருந்துள்ளது. அதில் ரெய்டுக்கு சில மணி நேரங்களுக்கு முன் வந்த அழைப்புகள் பதிவாகியுள்ளன. அதில், ‘இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்துக்கிட்டிருக்கு. எல்லாத்தையும் அப்புறப்படுத்துங்க’ என்பது உள்ளிட்ட ஆர்டர்களை முக்கிய புள்ளி கூறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுமட்டுமல்ல… வாய்ஸ் மெசேஜ் வடிவில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. செந்தில்பாலாஜி வகித்து வரும் துறைகள் தொடர்பான கான்ட்ராக்ட்டுகள் தொடர்பாக மேலிடத்து உத்தரவுகளும் அதற்கான அடுத்தகட்ட நகர்வுகளும் வாய்ஸ் மெசேஜாக இருந்துள்ளன.
இதோடு… ஈரோட்டில் நடத்தப்பட்டு வரும் ரெய்டில் சமீபத்தில் மொத்த எண்ணிக்கையில் லாரிகள் வாங்கப்பட்டதற்கான அடிப்படைத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதெல்லாம் தொகுக்கப்பட்டு விரைவில் நடவடிக்கைகள் தொடங்கும்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
தமிழ்நாடு – ஜப்பான் தொடர்பு: நெகிழ்ந்த ஸ்டாலின்
தவில், நாதஸ்வரம், தேவாரம் முழங்க செங்கோல் பொருத்திய மோடி: அந்த 26 நிமிடங்கள்…