udhayanidhi stalin deputy cm rumours

டிஜிட்டல்  திண்ணை: உதயநிதி துணை முதல்வர் வதந்தி தானா?

அரசியல்

வைஃபை ஆன் செய்த பின்  திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான  ஸ்டாலின் வெளியிட்டிருக்கும்  பொங்கல் வாழ்த்துச் செய்தி இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்தபடியே வாட்ஸ்அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.  இன்று (ஜனவரி 13) இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்  கனிமொழியோடு  காணொளி வாயிலாக கலந்து கொண்டார்  திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்.

அதே நாளில் அவர் வெளியிட்ட பொங்கல் வாழ்த்துச் செய்தியில்,  ‘அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக  நியமிக்க இருப்பதாக  சிலர் திசை திருப்பும் வேலைகளை செய்து வருகிறார்கள்,  அதற்கு உதயநிதி பதிலளித்து  அந்த வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்து விட்டார்’  என்று  குறிப்பிட்டுள்ளார்.

udhayanidhi stalin deputy cm rumours

ஸ்டாலினுடைய இந்த அறிக்கை திமுக இளைஞரணியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஏனென்றால்  டிசம்பர் 17-ஆம் தேதி  இளைஞர் அணி  இரண்டாவது மாநில மாநாடு என தேதி அறிவிக்கப்பட்ட போது அந்த மாநாட்டில்  பேசுவதற்காக  உரைகளை தயாரித்த திமுக நிர்வாகிகள் பலரும்,  உதயநிதியை துணை முதல்வர் ஆக்க வேண்டும், அவரது உழைப்புக்கு உரிய அரசியல் அங்கீகாரத்தை தர வேண்டும்  என்ற  கோரிக்கையை அந்த  மாநாட்டின் மூலம் வைப்பதற்கு  தயாராகி விட்டார்கள்.

ஆனால், சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் காரணமாக இளைஞர் அணி மாநாடு இருமுறை ஒத்திவைக்கப்பட்டு இப்போது ஜனவரி 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், உதயநிதி துணை முதலமைச்சர் ஆவார் என்று திமுக முகாமிலிருந்தே செய்திகள்  ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டன. இது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில்  உதயநிதியிடம் கேட்கப்பட,  ‘எல்லா அமைச்சர்களுமே முதலமைச்சருக்கு துணையாக தான் இருக்கப் போகிறோம்’ என்று  தனக்கே உரிய பாணியில் நக்கலோடு பதிலளித்துவிட்டு  சென்று விட்டார்.

இந்த நிலையில் தான் இன்று  முதலமைச்சர் ஸ்டாலின்,  உதயநிதி துணை முதல்வர் ஆவது வதந்தி என்று குறிப்பிட்டுள்ளார்.  இது இளைஞரணியினரிடையே விவாதத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

’ஏற்கனவே  இந்தியா முழுவதும் திமுகவை எதிர்த்து பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். குடும்ப ஆதிக்கம் ஒற்றை குடும்ப அரசியல் என திமுக மீது மோடி நேரடியாகவே குற்றம் சாட்டி வருகிறார்.

இந்தசூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு உதயநிதியை துணை முதல்வராக்கினால் இதையே காரணமாக வைத்து திமுகவுக்கு எதிராக பாஜக பிரச்சாரத்தை கூர்மைப்படுத்தும்.

ஏற்கனவே தேர்தலுக்குள் சில அமைச்சர்களை கைது செய்வதற்காக பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில், அவர்களுக்கு நாமாகவே இன்னொரு காரணியை இப்போதைக்கு எடுத்துக் கொடுக்க வேண்டாம்.

ஏற்கனவே சனாதன விவகாரத்தில், உதயநிதி மீது கோபத்தில் இருக்கும் பாஜகவினர், அவருக்கு துணை முதல்வர் பதவியை இப்போது கொடுத்தால் அவரை குறி வைத்து மேலும் நெருக்கடிகளை அளிப்பார்கள்.

எனவே, எப்படி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவி கட்சி தொண்டர்களின் வேண்டுகளுக்கு இணங்க வழங்கப்பட்டதோ, அதேபோல… 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு உதயநிதியை துணை முதல்வர் ஆக்கலாம் என்ற ஆலோசனையின் அடிப்படையில் தான் முதல்வர் இப்போது இதை வதந்தி என்று சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில், அவர் அரசியலுக்கு வந்தார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில், போட்டியிட்டு வென்றார்.

கட்சியினர் விருப்பம் என்ற அடிப்படையில், அமைச்சராகவும் ஆனார். இதே ஃபார்முலாவில் உதயநிதி துணை முதல்வார் ஆவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடக்கும் என்கிறார்கள் இளைஞரணியினரே” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கோலாகலம்!

தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் – அமித்ஷா உறுதி : டி.ஆர்.பாலு பேட்டி!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *