digital thinnai is tamil nadu ministers escape from legal action stalin meeting
வைஃபை ஆன் செய்ததும் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்து செய்தியில், இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிட்ட படியே இனிய மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் நிறையவே நடந்திருக்கின்றன.
ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். டிசம்பர் 21 முதல் உயர் நீதிமன்றத் தீர்ப்பால் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தகுதியிழப்பு நடவடிக்கைக்கு உள்ளாகி உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். மேலும், திமுகவின் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விடுதலையை எதிர்த்து சூமோட்டோவாக எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் சுழற்சி முறையில் மதுரை உயர் நீதிமன்றம் சென்றவர், ஜனவரி 3 முதல் மீண்டும் இந்த வழக்குகளை விசாரிக்க இருக்கிறார்.
இந்த நிலையில்தான் ஓரிரு நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் தன் வீட்டில் ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, சூமோட்டா வழக்கை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் திமுகவின் சட்டத்துறை நிர்வாகிகளாக இருக்கும் எம்.பி.க்களும் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர். அரசு வழக்கறிஞர்களும் கலந்துகொண்ட ஆலோசனையில் இவர்களோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
செந்தில்பாலாஜி சிறைக்கு போய் ஆறு மாதத்துக்கு மேல் ஆகிறது, இப்போது பொன்முடியின் அமைச்சர் பதவி போய்விட்டது. நமது சட்டத் துறையின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆலோசனையின் தொடக்கத்தில் கேள்வி கேட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அப்போது மூத்த வழக்கறிஞர், ‘ பொன்முடிக்கு தண்டனை வ்ழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் ஏற்கனவே அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் என்பதும் அந்த பதவிக் காலத்தில்தான் பொன்முடி சொத்து முடக்கம் தொடர்பான கோப்பு கையாண்டிருக்கிறார் என்பதும் சம்பந்தப்பட்ட அந்த கேஸ் ஆவணத்திலேயே இருக்கிறது. ஆனால், அதை நாம் சரியாக கவனிக்காமல் கடைசி நாளன்று நீதிபதி முன்னே சொல்லியிருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான சில சூடான விவாதங்கள் நடந்தன.
ஆலோசனையில் கலந்துகொண்ட மேலும் சில நிர்வாகிகள், ‘நாம் சட்ட ரீதியாக துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். நாமும் சில எதிர்வினைகளை செய்தாக வேண்டும். நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கோடு ஏற்கனவே தொடர்புள்ளவர். அதை அவரிடம் சுட்டிக் காட்டியபோதும், ‘ முன்பே நீங்கள் சொல்லியிருந்தாலும் நான் இவ்வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.
இதை குறிப்பிட்டு அவரை பதவி நீக்கம் செய்யச் சொல்லி குடியரசுத் தலைவரிடம் எம்பி.க்களிடம் கையெழுத்து வாங்கி மனு கொடுப்போம். அதேபோல சனாதன வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஏற்கனவே உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டார். அவரையும் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரலாம்’ என்ற குரல்கள் ஒலித்தன.
அப்போது அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டு, ‘சனாதன வழக்கு பற்றி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது முக்கியம் அமைச்சர்கள் எதிர்கொண்டிருக்கும் வழக்குகள்தான்’ என்று சொல்லியிருக்கிறார்.
நீதிபதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றிய கோரிக்கைக்கு, ‘இதில் நாம் ஆழமாக யோசித்துதான் முடிவெடுக்க வேண்டும்’ என்று பதிலளித்தார் முதல்வர் ஸ்டாலின்.
அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த ஆலோசனையின்போது, ‘அரசு வழக்கறிஞர்கள் இன்னும் சிறப்பாக செயல்படணும். என் வழக்கை ஜட்ஜ் எடுத்து விசாரிக்கிறார். ஆனால் அரசு வழக்கறிஞர் எழுந்து அண்ணாச்சியோட (கே.கே.எஸ்.எஸ்.ஆர்.) வழக்கை ஆர்க்யூ பண்றாரு. அதை நீதிபதியே எடுத்து சொல்லியிருக்கிறார். இப்படி எந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது என்றே கவனிக்காத அளவுக்கு இருக்கலாமா?’ என்று கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரங்களைக் கையாள்வதற்கு சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்று முதல்வரிடம் வேண்டுகோள்கள் வைக்கப்பட்டன.
உடல் நிலை சற்று சரியில்லாத நிலையிலும் சுமார் இரண்டு மணி நேரமாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட முதல்வர், ’எந்த பிரச்சினையும் இல்லாம ஒத்துமையா இருந்து பாத்துக்கங்க’ என்று கூறி ஆலோசனைக் கூட்டத்தை முடித்திருக்கிறார்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர்கள், ‘ஏற்கனவே பல ஆலோசனைகள் நடந்தது. ஆனா சீரியசா எதுவும் ஆக்ஷன் எடுக்கலை. அதனால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கு. இப்பவாவது இந்த ஆலோசனைக் கூட்டத்துல பேசப்பட்டபடி நடவடிக்கை எடுக்குறாங்களானு பாப்போம்’ என்று பேசிக் கொண்டனர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஷாலின் “ரத்னம்” படத்தின் புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்!
digital thinnai is tamil nadu ministers escape from legal action stalin meeting