வைஃபை ஆன் செய்ததும் குடியரசு தின விழாவை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்து வீடியோ காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“2025 ஜனவரி 26 ஆம் தேதி மாலை சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழாவை ஒட்டி ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்து நடைபெற்றது.
இதில் ஆளுங்கட்சியான திமுக, அதன் கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. மாநில அரசும் கலந்து கொள்ளவில்லை.
எடப்பாடிக்கு பதில் ஜெயக்குமார்
எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, தேமுதிக சுதீஷ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம் மதுரை அரிடாபட்டியில் டங்ஸ்டன் கனிமவள சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட்டதற்காக, அந்த கிராம மக்கள் நடத்திய நன்றி அறிவிப்பு விழாவில் கலந்து கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முன்னதாக நேற்று மாலை குடியரசு தின விழாவை ஒட்டி ஆளுநர் ரவி உரையாற்றி ஒரு வீடியோவை வெளியிட்டார். அவரது உரை வரி வடிவத்திலும் வெளியிடப்பட்டது.
ஆளுநரின் திட்டம்… ஸ்மெல் செய்த முதல்வர்
அந்த உரையில் தமிழ்நாடு அந்நிய முதலீடு, கல்வி உள்ளிட்டவற்றில் பின்னோக்கி செல்வதாகவும் தற்கொலை செய்துகொள்ளவர்கள் எண்ணிக்கையில் முதல் இடத்தில் தமிழ்நாடு இருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார் ஆளுநர்.
இந்தியாவிலேயே தான் ஆளுநராக இருக்கும் மாநிலத்தைப் பற்றி குடியரசு தின உரையில் கடுமையான குற்றச்சாட்டுகளை தொடுத்திருந்த முதல் ஆளுநராக பார்க்கப்படுகிறார் ஆர்.என்.ரவி.
இந்த மாத ஆரம்பத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற வந்த ஆர். என். ரவி அந்த உரையை ஆற்றாமல் திரும்பிச் சென்றார். ஆளுநர் உரையில் தான் விருப்பப்படி விஷயங்கள் இல்லாததால்… குடியரசு தின விழாவை ஒட்டி ஆளுநர் சிறப்பு உரை ஒன்றை தயாரித்து இருப்பதாகவும் அதில் தமிழ்நாடு அரசை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் ஜனவரி 25ஆம் தேதி காலையே முதலமைச்சருக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.

இதை ஸ்மெல் செய்த முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று காலையே ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை அரசு ரீதியாகவும் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு வந்தார். அதேநேரம் மதுரை அரிட்டாப்பட்டியில் இருந்து கிராம முக்கியஸ்தர்கள் அமைச்சர் மூர்த்தியுடன் கோட்டையில் முதலமைச்சரை சந்தித்தனர்.
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்டதை ஒட்டி முதலமைச்சருக்கு நன்றி சொல்ல விழா எடுப்பதாகவும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் விண்ணப்பம் வைத்தனர். இதையடுத்து முதலமைச்சர் ஜனவரி 26 ஆம் தேதி மாலையே அந்த விழாவில் கலந்து கொள்வது என முடிவெடுத்தார்.
ஆளுநரின் தகுதியை நிர்ணயித்த ஸ்டாலின்
இதற்கிடையில் ஆளுநர் ஆர். என். ரவியின் குடியரசு தின உரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாநில அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் அறிக்கை விடலாம் என முதலில் ஆலோசிக்கப்பட்டது. அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்களில் யார் ஆளுநருக்கு எதிராக அறிக்கை வெளியிடுவது என ஆலோசனை நடந்தது.

ஆனால் இறுதியில் தமிழக அரசின் அமைச்சரவை பட்டியலில் 34-வது இடத்திலே இருக்கக்கூடிய அமைச்சர் மதிவேந்தன் ஆளுநருக்கு பதில் தரும் அந்த அறிக்கையை வெளியிட்டார்.
ஆளுநர் வாட்ஸ் அப் ஃபார்வர்டுகளை நம்பி தனது குடியரசு தின உரையை தயாரித்து இருப்பதாக அமைச்சர் மதிவேந்தன் மறுப்பு தெரிவித்தார்.
ஆளுநர் வாசித்த குடியரசு தின உரைக்கு முதலமைச்சரோ அல்லது மூத்த அமைச்சர்களோ பதில் அளிப்பார்கள் என ஆளுநர் மாளிகை எதிர்பார்த்து இருந்தது..
ஆனால் ஆளுநரின் தகுதிக்கு தனது அமைச்சரவையில் 34 வது இடத்தில் இருக்கும் அமைச்சர் மூலமாகவே பதில் சொன்னால் போதும் என முடிவெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் மதிவேந்தனை அறிக்கை விட சொல்லியிருக்கிறார்.
இதைவிட ஆளுநருக்கு ஸ்ட்ராங்கான பதில் தர முடியாது என்கிறார்கள் கோட்டை வட்டாரங்களில்” இந்த மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.