வைஃபை ஆன் செய்ததும் நள்ளிரவில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் பாஜக குழுவினரை சந்தித்த படங்களும், தினகரனின் பேட்டியும் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“மார்ச் 11 ஆம் தேதி காலை திருச்சியில் இருந்த தினகரன் அங்கே பாஜக முக்கியப் பிரமுகரின் இல்லத்தில் சென்று அவரை சந்தித்தார். அவரது இல்லத்தில் இருந்தே அண்ணாமலையிடம் வீடியோ கான்ஃபிரன்சில் பேசினார். அன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ‘எவ்வித நிபந்தனையுமின்றி பாஜகவை ஆதரிக்கிறோம்’ என்று அறிவித்தார்.
அதன் பின் மார்ச் 12 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு டிடிவி தினகரனுக்கும் பாஜக குழுவினருக்கும் இடையில் தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது. அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ‘எங்கள் கூட்டணியில் எந்த நிர்பந்தமும் இல்லை. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசி வருகிறோம். முடிவு வந்ததும் தெரிவிக்கிறோம்’ என்றார். டிடிவி தினகரன் பேசும்போதே அங்கே ஓபிஎஸ் சும் ஹோட்டலுக்கு வந்தார்.
இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சம் பற்றி விசாரித்தபோது, ‘டிடிவி தினகரனுக்கு பாஜக தலைவர்களுடன் கடந்த 3 மாதங்களாக நெருங்கிய தொடர்பு உள்ளது. எடப்பாடி பாஜகவோடு சேர மாட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், பாஜக தலைவர்களோடு பேசத் தொடங்கினார் டிடிவி தினகரன்.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பற்றி சில நாட்களாக பேசி வரும் நிலையில் டிடிவி தினகரன் தரப்பில் பாஜகவிடம் வைக்கப்பட்டிருக்கும் நிபந்தனை ஒன்றுதான். அதாவது, ‘எங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும், இன்னின்ன தொகுதிகள் வேண்டும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
முதல் நிபந்தனை… எப்படியாவது வருகிற மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். இரட்டை சிலை சின்னத்தை முடக்கினால் எடப்பாடியால் ஒன்றும் செய்யமுடியாது. இரட்டை இலையின் பலத்தை வைத்துதான் எடப்பாடி இப்படி அனைவரையும் தொடர்ந்து ஓரங்கட்டிக் கொண்டிருக்கிறார். இந்தத் தேர்தலுக்கு மட்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் தேர்தல் முடிந்ததும் அதிமுகவின் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும்’ என்பதுதான் டிடிவி தரப்பில் வைக்கப்பட்ட ஒற்றை நிபந்தனை என்கிறார்கள் அமமுக தரப்பிலேயே.
மேலும் அவர்கள், ‘கடந்த 2019 இல் 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வந்தபோது அமமுக சார்பில் குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தில் கேட்கப்பட்டது. ஆனால் எடப்பாடிக்கு அப்போது டெல்லியில் பாஜக தலைவர்கள் நெருக்கமாக இருந்ததால் தேர்தல் ஆணையத்தை அமமுகவுக்கு எதிராக செயல்பட வைத்தார்.
கடைசியில் கோர்ட்டுக்கு சென்றபோது அங்கேயும் அதிமுக தரப்பில் அமமுகவுக்கு பொதுச் சின்னம் வழங்கக் கூடாது என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. கடைசியில் தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில்… உச்ச நீதிமன்றம் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் வழங்கித் தீர்ப்பளித்தது.
அன்று சட்டமன்ற இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் நின்றால் தனது ஆட்சியின் நிலைத் தன்மை பாதிக்கப்படும் என்று எடப்பாடி பாஜகவின் ஆதரவோடு அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்கப்படுவதை தடுத்து நிறுத்தினார்.
அன்று அவரது முறை. இன்று எங்கள் முறை வந்திருக்கிறது. அன்று அவருக்கு நெருக்கமான பாஜக இன்று எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. அதனால் அவரால் முடிந்ததை அன்று செய்த மாதிரி, எங்களால் முடிந்ததை செய்வோம். இரட்டை இலையை ஒரு தேர்தலுக்கு முடக்கினால், அதன் பின் அதிமுகவில் பெரிய அளவு மாற்றங்கள் நடக்கும்’ என்கிறார்கள் அமமுகவினர்.
இந்த பின்னணியில்தான் திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில், ‘அதிமுகவின் உட்கட்சி தொடர்பான சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடிக்கு கொடுக்கக் கூடாது’ என்று மனு செய்தார். அதன் மீது பதிலளிக்குமாறு எடப்பாடிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு உடனடியாக எடப்பாடி பழனிசாமியும் பதில் மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
‘ஏற்கனவே அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் சூரியமூர்த்தியின் மனுவை ஏற்க கூடாது’ என்று பதில் மனுவில் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால் தேர்தல் ஆணையம் என்னவேண்டுமானாலும் திருவிளையாடல்கள் நடத்தலாம் என்பதால்… அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சலசலப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆனால் எடப்பாடியோ இதற்கெல்லாம் பயப்பட வேண்டாம் என்று தனது நிர்வாகிகளிடம் கூறி வருகிறார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரனும், ஓபிஎஸ் சும் சில முக்கியமான காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதால் தேர்தலுக்குள் மேலும் சில பரபரப்புகள் நடக்கலாம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி தொழிற்சாலை – 5000 பேருக்கு வேலைவாய்ப்பு : டாடா குழுமம் ஒப்பந்தம்!
பாஜகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல்… முக்கிய நபர்கள் யார் யார்?