டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு… இரண்டாவது இடைத் தேர்தல்- திமுகவில் தொடங்கிய ஆலோசனை!

Published On:

| By Selvam

வைஃபை ஆன் செய்ததும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமான செய்தியும்,  பல தலைவர்கள் விடுத்த இரங்கல் செய்தியும் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.   

 “கடந்த 2023 ஜனவரி 4ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக காலமானார். அதையடுத்து 2023 பிப்ரவரி 27ஆம் தேதி அந்த சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.  

அந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவேராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் .

அந்த இடைத்தேர்தலில் முதலில் வேட்பாளராக நிற்பதற்கு தனது உடல் நிலையை காரணம் காட்டி மறுத்தார் இளங்கோவன்.  ‘எனக்கு இனிமே வேண்டாம். எனது இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேண்டுமானால் நிறுத்துங்கள்’ என்று அப்போது அவர் காங்கிரஸ் கட்சியிடமும் கூட்டணி தலைமையான திமுகவிடமும் தெரிவித்தார்.

ஆனால், அப்போதைய அரசியல் சூழலில் இளங்கோவன் தான் வலிமையான வேட்பாளர் என்று கருதிய திமுக அவரையே வேட்பாளராக நிற்குமாறு அன்பு கட்டளையிட்டது.  அதை ஏற்று இளங்கோவனும் பரப்புரை செய்ய இயலாத நிலையில் கூட கஷ்டப்பட்டு பரப்புரை பணிகளில் கலந்து கொண்டார்.

திமுக ஆட்சியில் வந்த முதல் இடைத்தேர்தல் அது என்பதால் ஈரோடு கிழக்கு முழுவதும் திமுக அமைச்சர்களின் ஆரவாரமும் மக்களுக்கு பல்வேறு வகையான பரிசுப் பொருள் விநியோகமும் படுஜோராக  நடைபெற்றன.

அது மட்டுமல்ல அதற்கு முன்பு எந்த இடைத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு,  மக்களை திமுக தடுத்து வைத்து தனது பிரச்சாரத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறது,  மற்ற கட்சியினரின் பரப்புரை பணிகளுக்கு மக்களை செல்ல தடுக்கிறது என்று அதிமுக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை இந்த தேர்தல் களத்தில் எழுப்பியது.

அந்த இடைத்தேர்தலில் இளங்கோவன் மகத்தான வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு சென்றார். ஆனால், தனது சட்டமன்ற கடமையை முழுமையாக ஆற்ற முடியாமல் உடல் நலக் குறைவு காரணமாக டிசம்பர் 14-ஆம் தேதி தனது 75 ஆவது வயதில் அவர் காலமாகிவிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், பெரியார் குடும்ப உறுப்பினர் என்ற அடிப்படையில் இளங்கோவினுடைய மறைவுக்கு அகில இந்திய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அதே நேரம்  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வருகிறது என்பதுதான் அரசியல் கள எதார்த்தம்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே இருக்கும்  நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி இடைத்தேர்தல் எப்படிப்பட்ட சூழ்நிலையில் நடத்தலாம் என விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த சட்டப்பிரிவு 151 ஏ -படி ஒரு  சட்டமன்றத் தொகுதி காலியாகிறது என்றால் அந்த சூழ்நிலைக்கு காரணமான சட்டமன்ற உறுப்பினரின் மீதமுள்ள பதவிக்காலம் ஒரு வருடத்துக்கும் குறைவாக இருந்தால் தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் ஆலோசித்து குறிப்பிட்ட காலத்துக்குள் இடைத் தேர்தலை நடத்துவது கடினம் என தெரிவிக்கலாம் என்று குறிப்பிடுகிறது.

அப்படிப் பார்த்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த இளங்கோவனின் பதவிக்காலம் 2026 மே மாதம் வரை இருக்கிறது. அதாவது முழுமையாக ஒரு வருடம் மற்றும் ஐந்து மாதங்கள் அவருக்கு இன்னும் பதவிக்காலம் இருக்கிறது. எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஈரோடு சட்டமன்ற தொகுதிக்கு புதிய மக்கள் பிரதிநிதியை  தேர்ந்தெடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.

அந்த அடிப்படையில் விரைவில் ஈரோட்டு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.  

இதே நேரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அங்கே மீண்டும் யார் போட்டியிடுவது என்ற கேள்வி திமுக- காங்கிரஸ் என இரண்டு கட்சி வட்டாரங்களிலும் இன்று மாலையிலிருந்து விவாதம் ஆகி வருகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தற்போதைய மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் திமுக தலைமையிடம் தனக்கு இருந்த செல்வாக்கு மூலமாக… மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு தன்னை வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆதரவு  கோரினார்.

அப்போது அவரிடம் திமுக தலைமைக்கு நெருக்கமான ஒருவர், ‘நீங்க எம்பி ஆவறதுல எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனா எம்பி ஆன பிறகு எம்எல்ஏ சீட்ட ராஜினாமா செஞ்சிடுவீங்க. அதுக்கு பதிலா உங்க கட்சியில் இருந்து இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவீங்க. அந்த இடைத்தேர்தலுக்கு 100 கோடி நாங்க தானே செலவழிக்கணும்? ‘என்று சொல்லி நாசூக்காக மறுத்திருக்கிறார்.  

இப்படிப்பட்ட பின்னணியில் மீண்டும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில்… காங்கிரஸ் கட்சிக்காக ஏன் செலவு செய்ய வேண்டும்?  திமுக சார்பிலேயே வேட்பாளர் நிறுத்தப்பட்டால் என்ன? கடந்த இடைத்தேர்தலின் போது இளங்கோவன் என்ற வலிமையான வேட்பாளர் நமக்கு இருந்தார்.

ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சியில் அவரைப் போன்ற ஒரு வேட்பாளர் ஈரோட்டில் இல்லை. எனவே திமுகவே இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது சரியாக இருக்கும் என்ற விவாதங்களும் கொங்கு திமுக நிர்வாகிகளிடம்  ஆரம்பித்து விட்டன.

அதே நேரம் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்,  சட்டமன்ற பொது தேர்தல் நெருங்குகிற நிலையில்… கூட்டணிக்குள் எவ்விதமான சலசலப்புகளும் வேண்டாம் என்பதால் இடைத்தேர்தல் நடக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கே அந்த சீட்டை ஒதுக்குவது என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்களில்.

அதிமுக முகாமிலும் பரபரப்பு அதிகமாகி இருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை போல இந்த இடைத்தேர்தலை புறக்கணித்து ஒதுங்கி விடலாமா… அப்படி ஒதுங்கி விட்டால் கொங்கு மண்டலம் என்ற அடிப்படையில் பாஜக தனது வேட்பாளரை நிறுத்தி அதிமுக வாக்குகளை அறுவடை செய்து விடுமா என்ற கேள்விகளும் அதிமுகவினருக்குள் எழுந்துள்ளன.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் அதை மையமாக வைத்து தமிழ்நாடு அரசியல் களத்தில் பலத்த மாற்றங்கள் இருக்கும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு… என்னென்ன பொருட்கள் விற்பனை?

அரசு ஊழியர்கள் இலங்கைக்கு நிவாரணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel