வைஃபை ஆன் செய்ததும் சிவகங்கையில் நடைபெற்ற பன்னீர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம், எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்ட படங்கள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அதிமுகவில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகும் பழனிச்சாமி -பன்னீர்செல்வம் மோதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
மார்ச் 11ஆம் தேதி சிவகங்கையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நடத்தினார். பன்னீர்செல்வத்தை முற்று முழுதாக ஒதுக்கிய பிறகு தென் மாவட்டத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கை நிலை நாட்டுவதற்காகவே சிவகங்கை பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார் எடப்பாடி.
அதே நேரம் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சிவகங்கையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதே 11ஆம் தேதி காலை வலிமையான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

சிவகங்கை பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி சென்னை வந்த நிலையில் இன்று மார்ச் 12ஆம் தேதி அவரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகரான திருப்பத்தூர் உமாதேவன், அமமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் கோமல் அன்பரசன் ஆகியோர் எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கடந்த மார்ச் 9ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருந்தார் எடப்பாடி. அந்த கூட்டத்தில் விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று கூறியிருந்தார்.
பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்படுவதற்குள் பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை சுற்றி இருக்கும் முக்கியமான நிர்வாகிகளை தன் பக்கம் கொண்டு வருவது என்பதை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகிறார் எடப்பாடி.

மேற்குறிப்பிட்ட அனைவரையும் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவாக உருவாக்க வேண்டும் என்று பாஜக இன்னமும் கருதும் நிலையில்… எடப்பாடி பழனிச்சாமியோ அதை தொடர்ந்து நிராகரிக்கிறார். தினகரன், பன்னீர்செல்வம், சசிகலா தவிர அவர்களை சுற்றி இருக்கும் அனைவரையும் அதிமுகவுக்கு கொண்டு வந்து இதுதான் ஒற்றை அதிமுக- ஒருங்கிணைந்த அதிமுக என்று நிலைநாட்ட முயல்கிறார்.
அதற்காகவே அவர் அதிமுகவின் மற்ற கூடாரங்களில் இருப்பவர்கள் எல்லாம் தொடர்பு கொண்டு பேசி அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தனது தலைமையின் கீழ் செயல்பட அழைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த வகையில் பன்னீர்செல்வத்தின் வலதுகரமாக தற்போது இருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தையும் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் நேரடியாகவே தொடர்பு கொண்டனர். ’இனிமே அங்கே இருந்து எந்த பயனும் இல்லை. பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி கட்சியை வெற்றி முகமாக கொண்டு செல்ல வேண்டும். கட்சி வெற்றி பெறும்போது ஏற்கனவே கட்சிக்காக உழைத்த நீங்கள் எல்லாம் அதில் பயன் பெற வேண்டும். வாருங்கள்’ என்று வைத்திலிங்கத்தை எடப்பாடி தரப்பினர் அழைத்து இருக்கிறார்கள்.
வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அவரிடம் சென்று, ‘இரட்டை இலை அங்கே தான் இருக்கிறது. இடைத்தேர்தலில் தோற்றாலும் கட்சியும் சின்னமும் எடப்பாடியிடம் தான் இருக்கிறது . நாங்கள் என்ன செய்யட்டும்’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு வைத்திலிங்கம், ’நான் அங்கே வர முடியாது நீங்கள் மனசாட்சி படி முடிவெடுங்கள்’ என்று கூறி இருக்கிறார்.
2011 ஆட்சியின் போது அதிமுகவில் கட்சி விவகாரங்களை கவனிப்பதற்காக ஐவர் அணி என்ற ஒரு அமைப்பை ஜெயலலிதா வைத்திருந்தார். பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்தியலிங்கம், பழனியப்பன் ஆகியோர் அதில் இடம்பெற்றிருந்தனர்.
2016 தேர்தலில் தனது தோல்விக்கு ஐவரணியில் இருந்த நத்தம் விஸ்வநாதன் மற்றும் கேபி முனுசாமி போன்றோர் காரணம் என்று இன்றும் கருதுகிறார் வைத்திலிங்கம். அதேபோல பெரியசாமியை எதிர்த்து தன்னை ஜெயலலிதா போட்டியிட வைத்ததற்கு காரணம் வைத்திலிங்கம்தான் என்று நத்தம் விஸ்வநாதன் கருதுகிறார். இந்த நிலையில் எடப்பாடி, நத்தம், கே.பி.எம். ஆகியோர் இருக்கும் இடத்துக்கு செல்வதை வைத்திலிங்கம் விரும்பவில்லை.
இதே நேரம் தனது தாயாரின் மறைவை ஒட்டி பெரியகுளத்தில் இருந்த பன்னீர்செல்வத்தை இன்று (மார்ச் 12) சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் சிவகங்கையில் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய பொதுக்கூட்டத்துக்கு சுற்றுப்பட்டு ஆறு மாவட்டங்களில் இருந்து 2 கோடி ரூபாய் செலவில் அழைத்து வந்தனர்.
ஆனால் 10 ஆம் தேதி தேதி இரவு 12 மணிக்கு தான் போலீசார் நமக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அனுமதியை அளித்தார்கள். அதன் பிறகு வாட்ஸ் அப்பில் செய்திகளை பரப்பி 12ஆம் தேதி காலை சிவகங்கையில் ஐயாயிரம் பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்’ என்று பன்னீர்செல்வத்திடம் சொல்லி இருக்கிறார்கள்.
அதற்குப் பன்னீர்செல்வம், ‘என்னை சுற்றி இருக்கும் எல்லோரையும் இழுத்து விட எடப்பாடி முயற்சி செய்கிறார். நாம் மக்களை சந்திப்போம். வைத்திலிங்கம் திருச்சியில் பிரம்மாண்டமான மாநாட்டை ஏற்பாடு செய்கிறார். நீங்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதிகப்படியான தொண்டர்களை அழைத்து வர வேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.
தாயாருக்கான சடங்குகளை எல்லாம் செய்து முடித்த பன்னீர் செல்வம் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னைக்கு புறப்படுகிறார்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.