டிஜிட்டல் திண்ணை: அதுவரை காத்திருப்போம்… அண்ணாமலைக்கு எடப்பாடி கெடு!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்யப்பட்டதும் அதிமுக-பாஜக மோதல் தொடர்பான ட்விட்டுகளின் ஸ்க்ரீன் ஷாட்டுகள் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான மோதல் விரிவடைய தொடங்கி இருக்கிறது. ’நான் ஜெயலலிதாவை போன்ற கருணாநிதியைப் போன்ற தலைவன்’ என்று மார்ச் 7 ஆம் தேதி அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதற்கு அதிமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

’ஜெயலலிதா, கலைஞர் ஆகியோர் கோடிக்கணக்கான தொண்டர்களால் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களோடு அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. அண்ணாமலை ஒரு தேசிய கட்சியின் பிரான்ச் மேனேஜர் அவ்வளவுதான்’ என்று அதிமுக ஐடி விங் நிர்வாகி ராஜ் சத்யன் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டியும் பதில் அளித்தார்.

இப்படியாக அதிமுக பாஜக இரு தரப்பிலும் பதிலுக்கு பதில் சரவெடியாக கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தின கொண்டாட்டங்களுக்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக கட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் மகளிர் தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்காக வந்தவர் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சென்னை சுற்றுவட்டார மாவட்ட செயலாளர்கள் சிலரோடு ஆலோசனை நடத்தினார்.

அப்போது அதிமுக பாஜக இடையிலான கடுமையான கருத்து பரிமாற்றங்கள் பற்றி பேச்சு வந்தது. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகள் இடம் பேசியபோது, ‘அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பாஜகவினர் நமது கட்சிக்கு வருவார்கள். அவர்கள் அங்கே விரக்தியாக இருக்கிறார்கள். அவர்களை நமது மாவட்ட செயலாளர்கள் வரவேற்று நமது கட்சிக்குள் இணைக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. அதே நேரம் வார்த்தைகளில் பாஜக அளவுக்கு நாம் இறங்கி போக வேண்டாம். கர்நாடக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும் என்றுதான் எனக்கு தகவல்கள் வருகின்றன.

இப்போதைக்கு அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது. ஆனாலும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவை பொறுத்தே 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நமது கூட்டணியை இறுதி செய்வோம்’ என்று நிர்வாகிகளிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜகவினரை அதிமுகவுக்கு கொண்டு வரும் வேலைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் தேமுதிகவை திமுகவும், அதிமுகவும் இணைந்து எப்படி வேட்டையாடியதோ, அதுபோல இப்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை அதிமுக வேட்டையாடத் தொடங்கி இருக்கிறது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர்

கொளத்தூரில் பன்னோக்கு மருத்துவமனை : அடிக்கல் நாட்டிய முதல்வர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share