டிஜிட்டல்  திண்ணை:  எடப்பாடி – விஜய்… 2026 மாஸ்டர் பிளான் இதுதான்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்  விஜய்  தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின்  செயற்குழு கூட்டம் பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளிக்கு முன்பாக  தமிழக வெற்றிக் கழக மாநாட்டில்  விஜய்  பேசிய பேச்சின்  அதிர்வலைகள்  தீபாவளி முடிந்தும் இன்னும் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

2026 சட்டமன்றத் தேர்தலில்  நமக்கு இணக்கமானவர்களோடு இணைந்து  கூட்டணி ஆட்சி அமைத்து,  அதிகாரத்தை  பகிர்ந்து கொள்வோம் என்று  மாநாட்டில் நம்பிக்கையோடு விஜய் அறிவித்தார். மேலும்,  திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்  அதிமுக பற்றி எந்த விதமான விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.  இதை அடிப்படையாக வைத்து  2026 சட்டமன்றத் தேர்தலில்  திமுகவுக்கு எதிரான  பொது கூட்டணியாக  அதிமுக –  தவெக   கூட்டணி உருவாகலாம் என்றும்  தகவல்கள் உலவியபடியிருக்கின்றன.

இதற்கிடையே  விஜயின் மாநாட்டு பேச்சை வரவேற்ற  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…   விஜய் குறித்து எதிர்மறையான கருத்துக்களையோ,   விசிக தலைவர் திருமாவளவன்  குறித்தான விமர்சனங்களையோ பொதுவெளியில் வைக்க வேண்டாம் என அதிமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில்,  2026 சட்டமன்ற  தேர்தலை அடிப்படையாக வைத்து  எடப்பாடி பழனிசாமி – விஜய் ஆகியோர் தரப்பில் என்ன  நடக்கிறது என்று  விசாரித்த போது  சில முக்கிய தகவல்கள்  கிடைத்துள்ளன.

அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது,  ‘எடப்பாடி பழனிசாமி  அதிமுகவுக்கு தொடர் தோல்விகளைதான்  பரிசளித்து வருகிறார் என்று  அவரது பழைய பங்காளிகளான  பன்னீர்செல்வம், டிடிவி ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். எடப்பாடியோ சசிகலா உள்ளிட்ட யாரையும் கட்சியில் மீண்டும் இணைப்பதில்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்.

இந்நிலையில், தனக்கு நெருக்கமானவர்களிடம்  ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் எடப்பாடி,  ‘அதிமுகவுக்குள் மறுபடியும் பன்னீரையோ டிடிவியையோ சசிகலாவையோ இணைத்துக் கொண்டால் பலத்தை விட பிரச்சினைகள்தான் அதிகமாகும்.  தேர்தலில் தங்களது ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு  கேட்பார்கள்.

ஜெயித்த பிறகு தனக்கு பழையபடி துணை முதல்வர் வேண்டும் என்று பன்னீர் கேட்பார். அவரது ஆட்களுக்கு அமைச்சர் பதவிகள் கேட்பார். மறுபடியும் பிரச்சினைகள்தான் வெடிக்கும். இவர்களை மீண்டும் சேர்த்துக் கொண்டு அதிமுகவுக்குள் மீண்டும் கோஷ்டிப் பூசல்களை உருவாக்குவதற்கு பதிலாக விஜய் உடன் கூட்டணி வைத்துவிடலாம்.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின் நாம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் பேசிய பலரும் அதிமுகவின் பலமாக இருந்த பெண்கள் வாக்குகள், இளைஞர்கள் வாக்குகள் பெருமளவு நம்மிடமிருந்து போய்விட்டது என்று சொன்னார்கள். பன்னீரையோ, தினகரனையோ மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதால் பெண்கள், இளைஞர்கள் ஓட்டு நமக்கு கிடைக்கப் போவதில்லை. ஆனால், விஜய்யுடன் கூட்டணி வைத்தால் நமக்கு அந்த வாக்குகள் பெருமளவு கிடைக்கும்.

2011 இல் திமுகவை மீண்டும் ஆட்சி அமைக்காமல் தடுக்க விஜயகாந்துடன் கூட்டணி அமைத்தார் அம்மா. அதேபோல 2026 இல் திமுக ஆட்சி மீண்டும் அமையாமல் தடுக்க வேண்டுமானால் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் என்ன தவறு இருக்கிறது?  விஜய்க்கு துணை முதல்வர், அவரது கட்சிக்கு சில அமைச்சர்கள் என அளித்தால் 2026 இல் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிதான் அமையும்.

அதிமுக தலைமையில் ஏற்கனவே இருக்கும் புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளோடு விஜய்யின் வெற்றிக் கழகம் சேர்ந்தால் அதிமுக கூட்டணியின் வடிவம் மிகப் பெரிதாக மாறும். இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக  கூட்டணிக்கு வரும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்’ என்று எடப்பாடி தனக்கு நெருக்கமானவர்களிடம் விவாதித்துள்ளார்.

இதேநேரம் விஜய்க்கு நெருக்கமானவர்கள் அவருக்கு அளித்துள்ள ஆலோசனையில், ‘தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள்தான்  இதுவரை ஆட்சி அமைத்திருக்கின்றன. 1949-இல் ஆரம்பிக்கப்பட்ட திமுக 1967 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. 1972 இல் அதிமுகவை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். ஐந்தே ஆண்டுகளில் 1977 இல் ஆட்சி அமைத்தார். இவை தவிர தமிழகத்தில் தொடங்கப்பட்ட எந்த கட்சியும் இதுவரை ஆட்சி அமைத்ததில்லை.

1989-இல் ஆரம்பிக்கப்பட்ட பாமக, 1994 இல் துவங்கப்பட்ட மதிமுக, 1999 இல் தேர்தல் அரசியலில் இறங்கிய விசிக, 2005 இல் தொடங்கப்பட்ட தேமுதிக எல்லாமே சொற்ப சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றனவே தவிர அதிகாரத்துக்கு எந்த கட்சியாலும் வர முடியவில்லை.

அண்டை மாநிலமான ஆந்திராவில் தற்போது  துணை முதல்வராகியுள்ள பவன் கல்யாண் கூட 2014 இல் ஜனசேனா கட்சியை ஆரம்பித்து 10 வருடங்கள் கழித்து இப்போதுதான் முகவரி பெற்றிருக்கிறார்.

இப்படிப்பட்ட வரலாற்றுப் பின்னணியில் 2024 இல் தொடங்கப்பட்ட தவெக 2026 இல் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்ப்பது ரொம்ப அதிகம். அதே நேரம் இப்போது   கூட்டணி ஆட்சிக்கான காலம் தமிழ்நாட்டு அரசியலில் கனிந்து வந்துகொண்டிருக்கிறது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை 2026 இல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்தால், அந்த ஆட்சியின் முதல் வேலையே நமது தமிழக வெற்றிக் கழகத்தை சின்னாபின்னமாக்குவதாகத்தான் இருக்கும். எனவே திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க அதிமுகவோடு கூட்டணி அமைத்து அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம்.  விஜய்க்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும்.

அதிகாரத்துக்கு வருவதன் மூலம் நமது கட்சியை வளர்க்க முடியும். மேலும், அதிமுகவில் எடப்பாடிக்கு அடுத்த நிலையில் தற்போது இருப்பவர் எஸ்.பி.வேலுமணிதான்.  அடுத்தடுத்த காலகட்டங்களில் அதிமுகவுக்குள் நடக்கும் குழப்பங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டு அரசியலில் அதிமுகவின் இடத்தை 2031 சட்டமன்றத் தேர்தலுக்குள் தவெக பெற்றுவிட முடியும். இந்த செயல் திட்டத்தில் நாம் பயணிக்க வேண்டும்’ என்று  விஜய்க்கு நெருக்கமானவர்கள் அவருக்கு ஆலோசனை அளித்து வருகிறார்கள்.

இரு தலைவர்கள் வட்டாரத்திலும் இப்படிப்பட்ட கூட்டணிக் கணக்குகள் போடப்பட்டு வருகின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்… கடும் போக்குவரத்து நெரிசல்!

இதுவே முதல்முறை… 19 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு – ஆளுநர் பெருமிதம்!

+1
0
+1
8
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *