வைஃபை ஆன் செய்ததும் மதுரையில் சசிகலாவை பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய பிரஸ்மீட் வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தேர்தல் பிரச்சாரத்துக்காக பயணத்தில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, ’நீங்கள் சசிகலாவின் கால்களில் விழும் படத்தை வைத்துக் கொண்டு அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரச்சாரம் செய்கிறாரே?’ என்ற ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி, ’நான் யார் காலில் விழுந்தேன்? மூன்றாவது மனிதரின் கால்களில் விழவில்லையே? அவர் வயதில் பெரியவர். அவர் கால்களில் விழுந்து ஆசி வாங்குவதில் தவறில்லையே?’ என்று பதில் கேள்வி கேட்டார். இந்த பதில் தான் அதிமுகவுக்குள் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சசிகலா 2021 ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில்… அப்போது முதல் சசிகலாவோடு எந்த சமரசமும் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லி வந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் இப்போது, ’சசிகலா மூன்றாவது மனிதர் அல்ல. அவர் காலில் விழுந்து ஆசிபெற்றது தவறல்ல’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இப்போது பாஜக கூட்டணியில் சங்கமம் ஆகி இருக்கிறார்கள். ஆனால் அதிமுகவில் தனக்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் கூட சசிகலா இப்போது வரை அதிகாரப்பூர்வ அதிமுகவுக்கு எதிர் நிலைப்பாடு எதையும் மேற்கொள்ளவில்லை.
மேலும் வருகிற மக்களவைத் தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி சசிகலாவோடு பேச்சுவார்த்தை நடத்தியது. டிடிவி, ஓபிஎஸ் ஆகியோர் தங்களை ஆதரிப்பது போல சசிகலாவும் பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்று கட்சியிலிருந்து சசிகலாவிடம் பேசப்பட்டது. ஆனால் இரட்டை இலை சின்னத்துக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை தன்னால் எடுக்க இயலாது என்று பாஜகவிடம் தெரிவித்துவிட்டார் சசிகலா.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள தனிப்பட்ட முறையில் ஒரு சர்வே நடத்தி இருக்கிறார். தென் மாவட்டங்களில் அதிமுக பலமான சரிவை சந்திக்கும் என்றும் குறிப்பாக முக்குலத்து மக்கள் எடப்பாடி தலைமையிலான அதிமுக மீது மிகக் கடுமையான கோபம் கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த சர்வே மூலம் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் தான் சசிகலாவை பற்றிய கேள்வியை எதிர்கொண்ட எடப்பாடி தற்போது முக்குலத்து மக்களிடம் தன் மீது இருக்கும் எதிர்ப்பை தணிப்பதற்காகவும் சாந்தப்படுத்துவதற்காகவும் இதை ஒரு உத்தியாக பயன்படுத்தி இருக்கிறார். அதாவது சசிகலா மூன்றாவது மனிதர் அல்ல என்று தனிப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி சொல்லவில்லை. அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து இதை சொல்கிறார். அப்படி என்றால் அதிமுகவுக்கு சசிகலா மூன்றாவது நபர் அல்ல அவர் என்றைக்கும் அதிமுகவுக்கு உரியவர்தான் என்றுதான் பொருள் எடுத்துக் கொள்ளப்படும்.
இப்படி, சசிகலாவை பகைத்துக் கொள்ளாத ஒரு போக்கின் மூலம் தென் மாவட்டங்களில் முக்குலத்து மக்களிடம் இருக்கும் எதிர்ப்பை குறைக்கலாம் என்பது எடப்பாடியின் கணிப்பு என்கிறார்கள் சேலம் வட்டாரத்தில்.
நாம் இது குறித்து சசிகலா தரப்பிடம் விசாரித்த போது, ‘இந்த மக்களவைத் தேர்தலை கால் மேல் கால் போட்டு கொண்டு வேடிக்கை பார்ப்போம். திமுக நாற்பதுக்கு நாற்பதிலும் வெற்றி பெறும். தேர்தல் முடிவுக்கு பிறகு 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டுமானால் அனைவரும் ஒன்றாக சேர்வதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலை உருவாகும். அப்போது நாம் பேசிக் கொள்ளலாம்’ என்று தன்னை சில நாட்களுக்கு முன்பு சந்தித்த தனது ஆதரவாளர்களிடம் சசிகலா சொல்லி அனுப்பி இருக்கிறார் என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”பாஜக ஆட்சியில் 90% வழக்குகள் எதிர் கட்சியினர் மீது தான்” : கனிமொழி குற்றச்சாட்டு!
சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? : ஸ்டாலின் கேள்வி!