வைஃபை ஆன் செய்ததும்… கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ஓய்வில் இருந்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஜூன் 8-ம் தேதி தனது சொந்த ஊரான எடப்பாடி பாலமுருகன் கோவிலுக்கு சென்ற போட்டோக்கள் பிரத்யேகமாக இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அதிமுகவின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மே 29 ஆம் தேதி அதிமுக, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அறிவித்தார். சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.

எப்போதுமே இது போன்ற ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்றால் வீட்டிலேயே இருக்க மாட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் கடந்த மே இறுதி வாரத்தில் இருந்து ஜூன் முதல் வாரம் வரை அவர் ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
மே முதல் வாரத்தில் இருந்து அவர் தொடர்ச்சியாக மேற்கொண்ட பயணங்கள், அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் அன்றும் அதற்கு முதல் நாள், அடுத்த நாள் என மூன்று நாட்கள் தொண்டர்கள்- நிர்வாகிகளின் வாழ்த்துக்களை நின்று கொண்டு பெற்றுக்கொண்டது போன்ற காரணங்களால் அவருக்கு கடுமையான கால் வலி ஏற்பட்டது.
சேலத்தில் ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் எடப்பாடியின் வீட்டுக்கே சென்று பரிசோதனை செய்தார்கள். அதன் பிறகு கோவையில் இருக்கும் பிரபல எலும்பு சிகிச்சை மருத்துவமனை மருத்துவரிடம் ஆலோசனை செய்தார் எடப்பாடி.
கோவை சென்று அங்கே ஒரு தனியார் ஹோட்டலில் தங்கிய எடப்பாடிக்கு அந்த பிரபல மருத்துவமனை மருத்துவர்கள் ஹோட்டலுக்கு சென்று சிகிச்சை அளித்தனர்.
இடது கால் மூட்டில் அதிக வலி இருப்பதாகவும் இது மட்டுமல்லாமல் வேறு சில எலும்பு பிரச்சனைகள் இருப்பதாகவும் அதிமுக வட்டாரத்தில் நிர்வாகிகள் பேசிக்கொள்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக வீட்டிலேயே பிசியோதெரபி செய்து வந்த எடப்பாடி பழனிசாமி இன்று ஜூன் 8-ம் தேதி சேலத்தில் இருந்து புறப்பட்டு எடப்பாடிக்கு சென்றார். அங்கே பாலமுருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
‘என்ன தலைவர் முகம் வாடியிருக்கு’ என்று பேசிக் கொண்டார்கள் எடப்பாடி வாசிகள். ஓரிரு நாட்கள் எடப்பாடி தங்கி இருக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இந்த நிலையில் சேலம் கோவை அதிமுக நிர்வாகிகள் இடையே விசாரித்தபோது, ‘எடப்பாடி பழனிசாமியை ஓய்வெடுக்க வேண்டும் என்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
ஆனால் எடப்பாடியோ அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஓய்வு எடுக்க வேண்டி வரும், மதுரை மாநாடு என்று பல கட்சிப் பணிகள் இருக்கின்றன. அதனால் இப்போது அறுவை சிகிச்சை வேண்டாம் என்று தள்ளிப் போட்டு வருகிறார்.
அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் உடனடியாக ஏதும் பிரச்சனை இல்லை. ஆனால் செய்தாக வேண்டும். வெளிநாடு சென்று எளிய முறையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்’ என்கிறார்கள்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் விசாரித்த போது…
‘எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்காக எடப்பாடி பழனிச்சாமி கோவையில் சிகிச்சை பெற்றது உண்மை. ஆனால் வெளிநாடு செல்லும் அளவுக்கு பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் சரியாகத் தெரியவில்லை’ என்கிறார்கள்.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அறிக்கைகள் வாயிலாகவே எடப்பாடி பழனிசாமி அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில்… இன்று எடப்பாடி கோவிலுக்கு சென்ற அவரது முகம் சற்று வாடி தான் இருந்தது.
எடப்பாடி பழனிசாமி உடல் நலம் குறித்து அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் தங்களுக்குள் தொடர்ந்து விவாதித்த படியே இருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
இப்படி பண்ணிட்டியேப்பா…ட்ரோலுக்கு ஆளான பாகிஸ்தான் வீரர்!
சட்டப்பேரவைக்குள் குட்கா: ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!