வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு முழுதும் அதிமுக நடத்திய ஆர்பாட்டங்கள் பற்றிய வீடியோக்களும் படங்களும் வந்து விழுந்தன.
“தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உற்சாகத்தோடு கோவை திரும்பி தனது சேலம் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில்தான் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு, ஊழல் உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து திமுக அரசைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தியது அதிமுக சேலம் மாவட்டச் செயலாளர் பதவியையும் தன் வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அப்போது அதிமுகவின் மாவட்ட லெவல் ஆர்பாட்டங்களில் எல்லாம் பங்கேற்றார்.
ஆனால் பொதுச் செயலாளர் ஆன பிறகு தனது மாவட்டச் செயலாளர் பதவியை ஆத்தூர் இளங்கோவனிடம் ஒப்படைத்துவிட்ட நிலையில்… அறிவிப்பு விடுவதோடு நிறுத்திக் கொள்கிறார். ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதில்லை.
நேற்று (ஜூலை 20) சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் கலந்துகொள்ள சிறப்பு பேச்சாளராக அதிமுக மாநில மகளிரணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி கலந்துகொண்டார்.
அதற்காக சேலம் வந்தவர், எடப்பாடியை அவரது வீட்டில் சந்தித்தார். ‘அண்ணே டெல்லி விசிட் எப்படி இருந்துச்சு?’ என்று எடப்பாடியிடம் வளர்மதி கேட்டபோது மிகவும் உற்சாகமாக பேசியிருக்கிறார் எடப்பாடி.
‘டெல்லியில் நமக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தாங்க. நம்மளோட முக்கியத்துவத்தை மோடி, அமித் ஷா புரிஞ்சுக்கிட்டிருக்காங்க. அம்மா (ஜெயலலிதா) டெல்லிக்கு போனா எப்படி வரவேற்பு கொடுத்திருப்பாங்களோ, இந்த முறை அப்படி ஒரு வரவேற்பைக் கொடுத்திருக்காங்க.
இன்னிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில பாஜகவுக்கு அடுத்த பலமான கட்சியாக நாம இருக்கோம். வர்ற தேர்தல்லையும் அதை நிரூபிப்போம். ஆர்பாட்டத்தில் நல்லா பேசுங்க. சட்டமன்றத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலோடு வந்துடும்னு நான் தொடர்ந்து சொல்லிக்கிட்டிருக்கேன். அது நடந்தால் கூட ஆச்சரியம் இல்லை. நம்ம தலைமையிலதான் கூட்டணி. நாம் தான் எல்லாருக்கும் சீட் கொடுப்போம்’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அந்த எஃபெக்ட்டோடுதான் சேலம் ஆர்பாட்டத்திலும் பேசியிருக்கிறார் வளர்மதி.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்பதையும், இக்கூட்டணியில் இடம்பெறுபவர்களை எடப்பாடியே முடிவு செய்யலாம் என்பதையும் டெல்லி கூட்டத்தின் வாயிலாக உத்தரவாதப்படுத்தியிருக்கிறது பாஜக தலைமை.
அதற்கு உதாரணம் தான் தேஜகூ கூட்டத்தில் விஜயகாந்துக்கு அழைப்பு இல்லாதது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு நிகராக இடங்கள் வேண்டும் என்று அடம்பிடித்தது தேமுதிக. ஆனால் குறைவான இடங்களையே ஒதுக்க முன் வந்தார் எடப்பாடி. அதே நேரம், திமுக கூட்டணியோடும் சில தொடர்புகளை ஏற்படுத்தி பேசிவந்தது தேமுதிக.
இந்த நிலையில் தான் விஜயகாந்தை சந்திக்க கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி ஆகியோரை அனுப்பி வைத்தார் எடப்பாடி. 2021 பிப்ரவரி 27 ஆம் தேதி இரவு விஜயகாந்தை சந்தித்தனர் அதிமுக குழுவினர். அதன் பிறகு எடப்பாடியை சந்தித்த வேலுமணி, ‘அண்ணா… விஜயகாந்த் தான் தேமுதிகவோட பலம். ஆனா அவரோட உடல் நிலையை வச்சி பார்த்தா அவரால பிரச்சாரத்துக்கெல்லாம் வரவே முடியாது. அவர் ஆக்டிவ்வா இல்லாத நிலையில தேமுதிக கூட்டணிக்கே அர்த்தம் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். தேமுதிகவின் பலத்தைப் பற்றியும் அப்போது அரசு சார்பில் எடுக்கப்பட்ட உளவுத்துறை முடிவுகளை அறிந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தைரியமாக தேமுதிகவை கழற்றிவிட்டார்.
2021 இலேயே அதுதான் நிலைமை என்றால் 2023 இல் தேமுதிக எந்த அளவிலும் முன்னேறவில்லை என்பது எடப்பாடியின் கணிப்பு. அதனால் தான் தேமுதிகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பது பற்றி எடப்பாடி அக்கறை காட்டவில்லை. எடப்பாடியின் முடிவை பாஜகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இதே நேரம் தேசிய ஜனநாயக கூட்டணியில் தங்களுக்கு அழைப்பு இல்லாததைப் பற்றியும் அடுத்த கட்டம் பற்றியும் ஆலோசிக்க தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூலை 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை தமிழ்நாட்டில் கட்டி எழுப்பியதே விஜயகாந்த் தான். அப்போது 39 தொகுதிகளில் தேமுதிக 14 இடங்களில் நின்றது. பாமக 8, பாஜக 7, மதிமுக 7 இடங்களில் தான் போட்டியிட்டன. ஆனால் இன்று அதிமுகவோடு கை கோர்த்துக் கொண்டு தேமுதிகவையே புறக்கணித்துவிட்டது பாஜக என்று தேமுதிக கட்சிக்குள் குமுறல்களும் கோபங்களும் வெடிக்கின்றன. அதெல்லாம் ஜூலை 24 மாசெக்கள் கூட்டத்திலும் எதிரொலிக்கும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செந்தில் பாலாஜி மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
தென்காசி: சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு கோலாகலம்!