”விறுவிறுவென முன்னேறிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதென்ன இப்போது திடீர் சறுக்கல்கள்… அதிலும் அவராகவே கூட்டம் கூட்டுகிறார், அவராகவே ரத்து செய்கிறாரே என்ன வில்லங்கம்?” என்ற கேள்வி இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதற்கு பதிலை பின்னணியோடு டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். “பொதுக்குழுத் தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த உடனேயே எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமைக் கழகத்தில் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி வென்றதற்கான சான்றினை பெற்றுக் கொண்டார். அன்றே அதிகாரபூர்வ பொதுச் செயலாளராக ஆனார்.
அவரது சென்னையில் இருக்கும் கிரீன்வேஸ் இல்லத்திலும் சரி… சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலும் சரி வாழ்த்தும் கூட்டம் அலை மோதியது.
அதையடுத்து ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு சேலம் சென்றடைந்தார் எடப்பாடி. அவர் போகும் வழியெல்லாம் பேனர்கள், கூட்டம் என்று சேலம் வரை பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதற்கிடையேதான் ஏப்ரல் 1 ஆம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து அந்த அறிவிப்பு வந்தது. அதாவது ஏப்ரல் 7 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என்று அறிவிப்பு வந்தது. பொதுச் செயலாளர் ஆன பிறகு முதல் முறையாக கூட்டப்படும் கூட்டம் என்பதால் தலைமைக் கழகத்தில் பிரம்மாண்டமாக வரவேற்பு அளிக்கவும் திட்டமிட்டனர் சென்னை மாவட்டச் செயலாளர்கள்.
அதேநேரம்…கட்சியின் அமைப்பில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளவும் சில முக்கிய நியமனங்களை பற்றி ஆலோசிக்கவும் செயற்குழு கூட்டத்தையும் கூட்டலாம் என்று எடப்பாடி தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால்… சட்டமன்றம் நடந்துகொண்டிருப்பதால் செயற்குழு கூட்டத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று பேசி மாசெ கூட்டத்தை மட்டும் அறிவித்தார்கள்.
ஆனால் ஏப்ரல் 3 ஆம் தேதி இரவு திடீரென்று ஏப்ரல் 7 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு செயற்குழு கூட்டம் நடக்கும் என்று அறிவித்தார் எடப்பாடி. இந்த நிலையில் திடீரென ஏப்ரல் 4 ஆம் தேதி காலை, ஏப்ரல் 7 ஆம் தேதி நடக்க இருந்த செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது என்று அறிவித்துள்ளனர். ஏன் இந்த தடுமாற்றம்? ஏன் இந்த ரத்து மேல் ரத்து என்று அதிமுக நிர்வாகிகளே குழம்பிப் போயிருக்கிறார்கள்.
செயற்குழு கூட்டம் கூட்டப்பட இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. அதிமுகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி. அதுபற்றி விவாதிக்கத்தான் செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார். அடுத்து கட்சியின் பொருளாளர் பதவி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இப்போது திண்டுக்கல் சீனிவாசன் அப்பதவியில் இருக்கிறார். அவருக்கு பதிலாக ஆக்டிவ்வான வளமான ஒரு பொருளாளரை நியமிப்பது பற்றியும் இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட இருந்தது. அதேநேரம் எடப்பாடி கர்நாடக மாநில நிர்வாகிகளையும் உள்ளடக்கிய செயற்குழுவுக்கு அழைப்பு விடுத்தார்.
எடப்பாடியின் ஒவ்வொரு மூவையும் ஓ.பன்னீர் டீம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிற நிலையில் திடீரென நேற்று இரவு கர்நாடகத்துக்கு 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நியமித்தார்.
இந்த நிலையில்தான் நேற்று இரவே பன்னீர் தரப்பு இதுகுறித்து ஆலோசித்தது. ‘நம்மிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் எடப்பாடியிடம் இழப்பதற்கு கட்சியே இருக்கிறது. செயற்குழு கூட்டம் என்பது ஒரு வருடத்தில் இருமுறை நடத்தலாம். பொதுக்குழுவோடு சேர்ந்தும் தனியாகவும் நடத்தலாம்.
ஆனால் செயற்குழு கூட்டம் நடத்துவதற்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்து அறிவிப்பு கொடுக்க வேண்டும். அவசர செயற்குழு கூட்டம் என்றால் பொது அறிவிப்பு மட்டும் போதும். இப்போது அவசர செயற்குழு கூட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை. எனவே ஒரு வார அவகாசம் இல்லாத நிலையில் செயற்குழு கூட்டம் கூட்டப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம்’ என்று பன்னீர் தரப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தகவல் இரவோடு இரவாக எடப்பாடியிடம் சேர்ந்தது. இதற்கிடையே சேலத்தில் எடப்பாடியை சந்தித்த சிலர், ‘இவ்வளவு கஷ்டப்பட்டு பொதுச் செயலாளர் ஆகியிருக்கீங்க. முதன் முறையாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை ஏன் தேய்பிறையில் கூட்டுறீங்க?’ என்று ஒரு கேள்வியை வீசியிருக்கிறார்கள். இந்த காரணங்கள் எல்லாம் சேர்ந்துதான் ரத்து மேல் ரத்து செய்திருக்கிறார் எடப்பாடி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
நிலக்கரி சுரங்கம்…பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
திறமைக்கு வயது தடையா?: யார் இந்த ராக்ஸ்டார் ரமணியம்மாள்