டிஜிட்டல் திண்ணை: ராமதாஸுக்கு எடப்பாடி கொடுத்த லேட்டஸ்ட் ஆஃபர்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் மக்களவைத் தேர்தலுக்கான கால அட்டவணை பற்றிய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றை பார்த்தபடியே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “2024 மக்களவைத் தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை மார்ச் 16-ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டிருக்கிறார். இதன்படி ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதல் கட்ட மற்றும் ஒரே கட்டத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

திமுக கூட்டணி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டு காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மட்டுமல்ல எந்தெந்த தொகுதிகள் என்பதும் முடிவு செய்யப்பட்டு விட்டன. காங்கிரஸ் கட்சியோடு சில தொகுதிகளில் ஏற்பட்டுள்ள இழுபறியால் திமுகவின் வேட்பாளர் பட்டியலும் தாமதமாகிறது.

மேலும், பாட்டாளி மக்கள் கட்சி எந்த கூட்டணிக்கு செல்லப் போகிறது என்ற கேள்வியும் தொடர் விவாதமாக இருக்கிறது. மார்ச் 14ஆம் தேதி சென்னையில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார் என்று டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அதன் பிறகும் கூட பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுக்கு செல்லும் என்ற செய்திகள் வந்தபடி இருக்கின்றன. இது பற்றி பாமக வட்டாரத்தில் விசாரித்த போது… “கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுக அணியில் சேர வேண்டும் என்பதில் விருப்பமாக இருக்கிறார். அவருடைய எண்ணத்தை கட்சியின் கௌரவத் தலைவரும் சட்டமன்ற குழு தலைவருமான ஜி.கே. மணி மற்றும் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரிக்கிறார்கள்.

ஆனால், டாக்டர் அன்புமணியோ தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்வது தான் பாமகவுக்கு நல்லது என்று கருதுகிறார். மீண்டும் மோடியே ஆட்சி அமைப்பார் என்ற நிலையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு குறிப்பாக தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்புகிறார் அன்புமணி. அதுமட்டுமல்ல… மேலும் இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தால் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணியை தொடர்ந்து தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கலாம். அப்போது பாமகவுக்கு துணை முதல்வர் பதவி கேட்கலாம் என்பது வரையிலான கணக்குகளையும் அன்புமணி தீட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அதிமுக அணியை விரும்புகிற டாக்டர் ராமதாசுக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் ஒரு தகவல் பாலமாக செயல்பட்டு வருகிறார் சேலம் பாமக சட்டமன்ற உறுப்பினரான அருள். இவர் மூலமாக டாக்டர் ராமதாசுக்கு எடப்பாடி பழனிசாமி லேட்டஸ்டாக கொடுத்திருக்கிற ஆஃபர் என்னவென்றால்,

‘எனது சொந்த தொகுதியான சேலம் எம்.பி. தொகுதியை கூட பாமக எடுத்துக் கொள்ளட்டும். ஆனால், நீங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். அப்போதுதான் வட மாவட்டங்களில் நாம் திமுகவுக்கு டஃப் ஃபைட் கொடுக்க முடியும்’ என்று டாக்டர் ராமதாசுக்கு அருள் மூலமாக மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

இதேநேரம் டாக்டர் அன்புமணி பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடால் தான் நேற்று கூட வேண்டிய பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகள் கூட்டம் தள்ளி போடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஓரிரு நாளில் பாமக கூட்டணி சஸ்பென்ஸ் உடையும் என்கிறார்கள் தைலாபுரம் வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

GOAT: வெயிட்டாக இறங்கும் வெங்கட் பிரபு… காத்திருக்கும் சர்ப்ரைஸ் !

மக்களவைத் தேர்தல் தேதி : முழு விவரம்!