வைஃபை ஆன் செய்ததும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மாசெக்கள் கூட்ட போட்டோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தது.
இந்த போட்டோக்களை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“இன்று (நவம்பர் 6) அதிமுக தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. காலை 10.45 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் நிர்வாகிகள்.
அதன்பின் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் உரையாடிவிட்டு 11.10 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள், கேரள, கர்நாடகா, மும்பை, அந்தமான் மாநில அதிமுக செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தைத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி.
துணைப் பொதுச் செயலாளர் வரவேற்புரை, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரை, தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி நன்றியுரை என மூன்று பேர் மட்டும்தான் பேசியிருக்கிறார்கள்.
எடப்பாடி பேசும்போது, ‘அதிமுகவில் உறுப்பினராக பலரும் போட்டி போட்டு சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் இன்னமும் 20% பேருக்கு உறுப்பினர் கார்டுகள் சென்று சேரவில்லை. அனைவருக்கும் உறுப்பினர் கார்டுகளை கொண்டு சேர்க்க வேண்டும். ஏனென்றால் அடுத்து நாம் உட்கட்சித் தேர்தல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.
அதேபோல மாவட்டம் தோறும், ஒன்றிய, நகர அளவில் செயல்வீரர் கூட்டங்களை நடத்திடுமாறு உங்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். பல மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்தி விட்டீர்கள். ஆனால், இன்னும் 15, 20 மாவட்டங்களில் செயல் வீரர்கள் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. அது எனக்கு வருத்தமாக இருக்கிறது? தயவு செய்து அந்த கூட்டங்களை விரைவில் நடத்திவிடுங்கள்’ என்று கூறினார்.
அப்போது சில மா.செ.க்கள் எழுந்து, ‘அண்ணா… இடையில எங்க மாவட்டங்கள்ல கடுமையான மழையினால நடத்த முடியலை’ என்று சொல்ல… ‘உங்க நிலைமை தெரியும். இந்த வாரத்துக்குள்ள நடத்தி முடிச்சுடுங்க’ என்று கேட்டுக் கொண்டார் எடப்பாடி.
தொடர்ந்து பேசியவர், ’என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசும்போதும் நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போது பல மாவட்டக் கழக செயலாளர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றீர்கள்.
வருகிற 2026 இல் திமுக ஆட்சியில் மீண்டும் அமர நாம் அனுமதிக்கவே மாட்டோம். மக்களும் திமுக அரசு மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். அதனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது.
அதேநேரம் பலமான கூட்டணி அமைவதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி பலமாக இருப்பதை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நமது கட்சி பலமாக இருந்தால்தான் பலமான கூட்டணி அமைக்க முடியும். இல்லையென்றால் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு நாம் அதிக சீட்டுகளை கொடுக்க வேண்டியிருக்கும். அது அதிமுக போட்டியிட வேண்டிய சீட்டுகளாகவே இருக்கும். எனவே கட்சியை பலமாக வைத்திருப்போம், பலமான கூட்டணியையும் அமைப்போம்.
அடுத்ததாக விரைவில் நாம் பொதுக்குழுவை கூட்ட இருக்கிறோம். இதுவரை கூட்டிய பொதுக்குழுக்களில் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க முடியாமல் போனது. விரைவில் கூட்டப்படும் பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்களோடு சிறப்பு அழைப்பாளர்களும் அழைக்கப்பட்டு பிரம்மாண்டமாக நடத்தப்படும்.
நான் விரைவில் சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். மாவட்ட வாரியாக அல்ல…ஒவ்வொரு தொகுதி வாரியாகவும் சுற்றுப் பயணம் வர இருக்கின்றேன். அதற்கான பட்டியல் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. முடிவு செய்தவுடன் உங்களிடம் பேசி அறிவிப்பேன்’ என்று பேசியிருக்கிறார் எடப்பாடி.
’கட்சியை நாம் பலமாக வைத்திருக்கவில்லை என்றால் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக சீட்டுகள் கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று எடப்பாடி குறிப்பிட்டது பற்றி அதிமுக சீனியர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘பலமான கூட்டணியை நான் அமைப்பேன் என்று எடப்பாடி சொல்லியிருக்கிறார். விஜய் கட்சியுடன் அரசியலுக்கு அப்பாற்பட்ட ரீதியாக பேச்சுகள் தொடங்கிவிட்டன.
ஒருவேளை விஜய் கூட்டணிக்கு வந்தால் அவருக்கு அதிக இடங்கள் ஒதுக்குவது பற்றி பரிசீலிப்போம் என்பதைத்தான் இப்போது சிம்பாலிக்காக எடப்பாடி சொல்லியிருக்கிறார். அதனால்தான் அதிமுகவை பலப்படுத்தவில்லையென்றால் கூட்டணிக் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார் எடப்பாடி என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போலீசார் மீது கை வைத்தவருக்கு மாவுகட்டு : கடலூரில் நடந்தது என்ன?
விசிக புதிய மாசெக்கள் நியமனம்: ஆதவ் அர்ஜுனா ரோல் என்ன? கட்சிக்குள் சலசலப்பு!