வைஃபை ஆன் செய்ததும், ‘எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி’ என்ற பிளாஷ்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ ஜூலை 11 -2022 அன்று அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதே பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஏற்கனவே பொதுக் குழுவை எதிர்த்த வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று நிராகரிக்கப்பட்டன. பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் உங்களுக்கு இதில் ரெமிடி வேண்டுமென்றால் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் பொதுச் செயலாளர் பதவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூல வழக்கை ஓபிஎஸ் தரப்பினர் நடத்திக் கொண்டிருந்தனர். மேலும் தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மூல வழக்கில் துணை கோரிக்கை மனுவையும் தாக்கல் செய்திருந்தார் ஓபிஎஸ்.
அந்த வழக்கு இன்று (ஜூலை 26) விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என்ற பெயரில் தன்னை குறிப்பிட்டிருந்தார்.
இந்த மூல வழக்கின் ஆரம்பத்தில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து இடைக் காலப் பொதுச் செயலாளார் ஆனதை குறிப்பிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஓபிஎஸ் தரப்பில், ‘அன்று தாக்கல் செய்த பதில் மனுவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்ட எடப்பாடி அதன் பின் தன்னை பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி இதுபோல குறிப்பிட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நீதிபதியும், இதே கேள்வியை எடப்பாடி தரப்பிடம் எழுப்பினார்.
அப்போது எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள், ‘உச்ச நீதிமன்றம் இந்த பொதுக்குழு செல்லும் என்றும், தீர்மானங்கள் செல்லும் என்றும் தீர்மானத்தில் ஏதும் பிரச்சினைகள் இருப்பின் உயர் நீதிமன்றத்தில் சென்று கோரிக்கை வையுங்கள்’ என்று தீர்ப்பளித்தது. அதன் பின் தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் என்று உறுதிப்படுத்திவிட்டது.
அதனால்தான் பொதுச் செயலாளர் என்று பதில் மனுவில் குறிப்பிட்டிருக்கிறோம். மூல வழக்கு தொடரும்போது இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து இடைக் காலப் பொதுச் செயலாளர் ஆனதால் அவ்வாறு குறிப்பிட்டு மனு செய்தோம்’ என்று பதிலளித்தனர்.
அதற்கு நீதிபதி, ‘அப்படியென்றால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விவரங்களை சேர்த்து புதிய பதில் மனுவை தாக்கல் செய்யுங்கள்’ என்று கூறி வழக்கை ஆகஸ்டு 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
இதில் வேறு எதுவும் நடக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் இவ்விவகாரத்தில் நடந்த டெவலப் மென்ட்டுகளை ஆவணப்படுத்தி புதிய பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் கூறியிருக்கிறது. சாரி யுவர் ஆனர் என்று அதிமுக தரப்பு சொன்னதை மன்னிப்பு கேட்டது என்று வெளியே பரப்பிவிட்டார்கள்.
நீதிமன்றத்தில் தகுந்த விளக்கம் அளித்த அதிமுக தரப்பினர் வழக்கம்போல ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்க தவறியதால், எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்து என்று ஊடகங்களில் செய்திகள் பரவின.
எடப்பாடி பழனிசாமியும் இதுகுறித்து வழக்கறிஞர்களிடம் கேட்டு அறிந்துகொண்டார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் கொலை… சிக்கப் போகும் அரசியல் புள்ளி!
இது தெரியாமப் போச்சே: அப்டேட் குமாரு