டிஜிட்டல் திண்ணை: வர்றீங்களா? வீட்டை சீல் வைக்கட்டுமா…  மிரட்டிய E.D-அதிர்ந்த துரைமுருகன்… புத்தாண்டின் முதல் வேட்டை!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருக்கும் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்த போட்டோக்களும் வீடியோக்களும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே  வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்குகின்ற நிலையில் 2025 பிறந்து மூன்றாவது நாளில் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவை குறி வைத்து மத்திய அரசின் அமலாக்கத்துறை வேட்டையில் இறங்கி இருக்கிறது. முதல் குறியாக திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனை நோக்கி பாய்ந்து இருக்கிறது அமலாக்கத்துறை.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைத்திருந்ததாக கதிர் ஆனந்த்துக்கு நெருக்கமான திமுக நிர்வாகியான பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டில் சோதனை நடத்தி பத்து கோடி ரூபாய்க்கு மேல் கைப்பற்றியது வருமானவரித்துறை. இதன் அடிப்படையில் அமலாக்க துறையும் இதை விசாரித்து வந்தது.

அந்த விவகாரத்தில் தான் ஆறு வருடங்களுக்குப் பிறகு இப்போது அமலாக்கத்துறை துரைமுருகன் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறது. ஆனால், அதற்காக மட்டுமே அல்ல.  

இன்று காலை 9 மணி அளவில் 10 அமலாக்கத்துறை அதிகாரிகள் துரைமுருகன் வீடு அமைந்துள்ள காட்பாடி காந்தி நகருக்கு சென்றனர். மீதி பத்து அதிகாரிகள் பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் தாமோதரன் ஆகியோரது வீடுகள், கிங்க்ஸ்டன் கல்லூரி  நோக்கி சென்றனர்.

காந்தி நகரில் இருக்கும் துரைமுருகனின் வீடு பூட்டி கிடந்தது. அங்கே காலையில் வேலை செய்யும் பணியாளர்கள் வீட்டு வளாகத்தில் இருந்தனர். அவர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படை சகிதம் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை பார்த்துவிட்டு விசாரித்தனர்.

அதன்பின் சென்னையில் இருக்கும் துரைமுருகனுக்கும் துபாய் சென்றிருந்த கதிர் ஆனந்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  சில நிமிடங்களில் தகவல் அறிந்து லோக்கல் திமுகவினர் துரைமுருகன் வீட்டை நோக்கி திரண்டனர்.

அவர்கள் அமலாக்க துறை அதிகாரிகளிடம், ‘பெரியவரு சென்னையில இருக்காரு. எம்பி துபாய்ல இருக்காரு. இப்ப வந்து நீங்க என்ன பண்ண போறீங்க?’ என்று கேட்டனர்.

அதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், ‘எங்கள் அதிகாரிகள் உத்தரவுப்படி நாங்கள் வந்திருக்கிறோம். வீட்டைத் திறக்க வேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது அவர்களுடைய அங்கீகாரம் பெற்றவர்கள் இங்கே இருக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

இல்லையென்றால் என்ன செய்வது என லோக்கல் திமுகவினர் கேட்டபோது, ‘நாங்கள் ஏற்கனவே கதிர் ஆனந்துக்கு மெயில் மூலம் சம்மன்கள் அனுப்பினோம்.  ஆனால்  அவர் வரவில்லை. அதனால்தான் இங்கே வந்திருக்கிறோம். இப்போதும் அவர் வரவில்லை என்றால் அல்லது அவருடைய அங்கீகாரம் பெற்ற நபர்கள் வரவில்லை என்றால் நாங்கள் மீண்டும் வரும் வரை வீட்டை சீல் வைத்துவிட்டு செல்ல வேண்டியிருக்கும்.  இது பற்றி எங்கள் அதிகாரியிடம் தெரிவித்து உங்களிடம் சொல்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

இந்தத் தகவல்கள் உடனடியாக கதிர் ஆனந்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் சில நிமிடங்களில்,  ’நான் வெளிநாட்டில் இருப்பதால் உடனடியாக வீட்டுக்கு வர முடியாது. எனவே என்னுடைய நம்பிக்கைக்குரிய மூன்று பேர் முன்னிலையில் நீங்கள் சோதனை நடத்தலாம்’ என அமலாக்கத்துறை அலுவலக உயரதிகாரிக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.

அதன்படி பகுதி செயலாளரும் துணை மேயருமான சுனில், திமுக நிர்வாகி வன்னிய ராஜா, வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சோதனை நடத்தலாம் என கதிர் ஆனந்த் தெரிவித்திருந்தார்.

அந்த மெயில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து ரெய்டு டீமின் தலைமை அதிகாரிக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு அவர் சுனில், வன்னிய ராஜா,  பாலாஜி ஆகியோருடைய விவரங்களை சரி பார்த்து அவர்கள் முன்னிலையில் ரெய்டு நடத்த ஏற்பாடு செய்தார். இதற்குள் மணி பிற்பகல் 2 ஆகிவிட்டது.  

இதற்கிடையே பல்வேறு திமுக நிர்வாகிகள் துரைமுருகன் வீட்டு வாசலில்  திரள ஆரம்பித்தனர். மாவட்டச் செயலாளர் நந்தகுமாரும் துரைமுருகன் வீட்டு வாசலுக்கு வந்து என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு பத்து பதினைந்து நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டு விட்டார். அங்கே வந்தவர்களுக்கு காலையில் டீ காபி சமோசா மதியம் பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டன. அதிலும் கட்சியினருக்கு பிரியாணி இல்லை தக்காளி சாதம் தான் வழங்கப்பட்டது என்ற குறையும் இருந்தது.

இரண்டு மணிக்கு மேல் அமலாக்கத்துறை அதிகாரிகள் துரைமுருகன் வீட்டுக்குள் நுழைய முற்பட்டபோது கதிர் ஆனந்தின் அங்கீகாரம் பெற்ற அந்த திமுக நிர்வாகிகள், ‘இருங்க இருங்க உங்களையும் சோதனை செஞ்சி தான் உள்ளே அனுப்பணும். ஏதாவது வச்சு எடுத்துட்டீங்கன்னா என்ன பண்றது? என்று கேட்டு அமலாக்கத்துறை அதிகாரிகளையே அதிர வைத்தனர்.

வந்தவர்களில் 2 பெண் அதிகாரிகள் இருந்தனர். அவர்களின் கைப்பையை மட்டும் சோதனை செய்துவிட்டு உள்ளே அனுப்பிய திமுக நிர்வாகிகள் மற்ற ஆண் அதிகாரிகளை முழுமையாக சோதித்து விட்ட பிறகு வீட்டுக்குள் அனுமதித்தனர்.

பிற்பகல் 2:30 மணிக்கு ஆரம்பித்த சோதனை இரவு 9:30 மணியை தாண்டியும் நீடித்தது. ஒவ்வொரு அறையாக சோதனை மேற்கொண்டவர்கள் பூட்டிக் கிடந்த ஒரு அறையை காட்டி இதை திறக்க வேண்டும் என்றனர்.

இது பெரியவரோட ரூம், அவர் சென்னையில் இருக்கிறார். வீட்டு சாவிதான் எங்களிடம் இருக்கிறது.  இந்த அறைக்கு எங்களிடம் சாவி இல்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த அறையை சோதித்து ஆக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் அடம்பிடிக்க கடைசியில் கடப்பாரை கொண்டு வந்து அதன்மூலம் அறை கதவை உடைத்து சோதனை செய்ய முடிவு எடுத்தனர். அதன்படி கடப்பாரையும் கொண்டுவரப்பட்டது.

இதற்கிடையில் கதிர் ஆனந்த் குடும்பத்தினரின் நிர்வாகத்தில் இருப்பதாக கூறப்படும் கிங்ஸ்டன் இன்ஜினியரிங் காலேஜிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டீம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அங்கே இரவு 9 மணிக்கு மேல் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் தாமோதரன் ஆகியோரது வீடுகளில் சோதனைகள் சில மணி நேரங்களில் நிறைவு பெற்றுவிட்ட நிலையில்… துரைமுருகன் வீட்டிலும் கிங்ஸ்டன் இன்ஜினியரிங் காலேஜிலும் இரவு 9.30 மணி தாண்டியும் சோதனை தொடர்ந்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

இதற்கிடையே ரெய்டு தகவல் கிடைத்த போது சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்த அமைச்சர் துரைமுருகன். உடனடியாக புறப்பட்டு தலைமைச் செயலகம் சென்றார்.

அங்கே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு நீர்வளத்துறை தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

துரைமுருகன்  சென்னையில் இருந்து ரெய்டு நடக்கும் தனது காட்பாடி வீட்டுக்கு விரைந்து வருவார் என கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால் மாலை வாக்கில் தான் துரைமுருகன் இன்று வரமாட்டார் என திமுக நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

இது பற்றி விசாரித்தபோது, ‘ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் கூட இருக்கிற நிலையில்… துரைமுருகன் சென்னையில் இருந்து புறப்பட்டு தனது வீட்டுக்கு சென்றால் அங்கே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் அவர்கள் 2019 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட பண விவகாரத்தை மட்டும் விசாரிக்க வரவில்லை. நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் மணல்  விவகாரங்களில் பெருமளவு சம்பாதித்து இருக்கிறார் என அவர் மீது அதிருப்தியில் இருந்த திமுக நிர்வாகி ஒருவரே வெளிப்படையாக குற்றம் சாட்டி இருந்தார்.

ஏற்கனவே மணல் குவாரிகள் தொடர்பாக அமலாக்கத்துறை பல அதிகாரிகளிடம் விசாரித்தது. மணல் பிசினஸ் செய்யும் தொழிலதிபர்களிடமும் விசாரித்தது. அதன் தொடர்ச்சியாக துரைமுருகனிடம் அது பற்றி விசாரிப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக அவர்கள் பயன்படுத்தக்கூடும்.

மேலும் துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆகியோர் அவ்வபோது லண்டன்,துபாய்  போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர். அங்கே அவர்கள் பிசினஸ் செய்வதாகவும் அமலாக்கத்துறை சில தகவல்களை திரட்டியது. அது தொடர்பாகவும் விசாரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது.

எனவே துரைமுருகனை உடனடியாக காட்பாடிக்கு செல்ல வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக திமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

 இதற்கிடையே துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடந்து கொண்டிருந்த இதே நேரம் ஏற்கனவே மணல் பிசினஸ் செய்து வந்த புள்ளிகள்,   அவர்கள் தொடர்பான நபர்கள் தங்களது செல்போன்களை ஆப் செய்துவிட்டனர். சைலன்ட் ஆகிவிட்டனர்.

துரைமுருகன் வீட்டில் நடக்கும் இந்த சோதனை மற்ற அமைச்சர்களிடமும் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் மீது ரெய்டு நடவடிக்கைகள் இருக்கலாம் என்பதால் திமுக மேலிடமும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது’ என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.

சீனாவில் பரவும் புதிய வைரஸ் : அச்சத்தில் உலக நாடுகள்!

விக்கிரவாண்டி: பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share