வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாட்டில் மணல்குவாரிகளை மையமாக வைத்து அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டுகள் பற்றிய போட்டோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“செப்டம்பர் 12 ஆம் தேதி காலை முதல் தமிழ்நாட்டின் மணல் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. இது அரசியல் வட்டாரங்களிலும் தொழில் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பான இடங்களில் ஐடி சோதனை நடந்தது. பிறகு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஜூன் 13 ஆம் தேதி செந்தில்பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதன் பிறகும் சோதனைகளைத் தொடர்ந்தது. செந்தில்பாலாஜி நிர்வகித்து வந்த டாஸ்மாக் துறையில் நடந்திருப்பதாக கூறப்படும் முறைகேடுகள் பற்றியும் அந்த பணம் போனது எங்கே என்பது பற்றியும் தேடிக் கொண்டே இருக்கிறது அமலாக்கத்துறை.
இந்த நிலையில் ஜி 20 மாநாடு முடிந்த பிறகு இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் மீது பல்வேறு ஆபரேஷன்களை ஏவி விட பாஜக திட்டமிட்டிருக்கிறது என்று செய்திகள் பரவின. இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, ‘இனி நம் மீது அதிக ரெய்டுகள், கைதுகள் நடத்தப்படலாம். தயாராக இருங்கள்’ என்று கூறியிருந்தார். தமிழ்நாட்டில் ஓரிரு நாட்களாகவே திமுக அமைச்சர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படலாம் என்று அக்கட்சிக்குள்ளேயே பேசப்பட்டது. ‘தனியார் டாக்சிகள் புக் செய்யப்பட்டிருக்கின்றன. எந்த நேரத்திலும் ரெய்டு வரலாம்’ என்று தகவல் கிடைத்த அமைச்சர்கள் விடிந்தால் யார் வீட்டில் ரெய்டு என்று தெரியாமல் பதற்றமானார்கள்.
இந்த நிலையில்தான் செப்டம்பர் 12 காலை தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான மணல் குவாரிகள், மணல் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அறியப்படும் புதுக்கோட்டை எஸ் ஆர், திண்டுக்கல் ரத்தினம் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சபரீசனின் ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கடந்த ஏப்ரல் மாதம் ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து இப்போது அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் இந்த ரெய்டில் சபரீசனும் முக்கிய இலக்கு என்கிறார்கள்.
மணல் குவாரிகள் நீர்வளத்துறையின் கீழ் வரும் நிலையில் வேலூரில் இது தொடர்பாக அத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அப்படியா எனக்கு தெரியாதே’ என்று சாதாரணமாக பதிலளித்தார்.
ரெய்டு தொடர்பாக அதிகாரிகள் வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் அதில் அரசுக்கு வரவேண்டிய பணம் வெளியே போவதாகவும் அமலாக்கத்துறைக்கு தகவல்கள் கிடைத்தது. அதையடுத்து செந்தில்பாலாஜி தொடர்பான இடங்களில் சோதனை நடத்தினார்கள். செந்தில்பாலாஜி கைதாகி இப்போது டாஸ்மாக் துறைக்கு முத்துசாமி அமைச்சராக இருக்கிறார்.
இப்போதும் முறைகேடுகள் தொடர்கின்றன என்றாலும் செந்தில்பாலாஜி இருந்தபோது நடந்த அளவுக்கு சிஸ்டமேட்டிக்காக இல்லை என்றே தகவல்கள் வருகின்றன. மதுவுக்கு அடுத்து திமுகவுக்கு அதிக பணத்தை வாரிக் கொட்டுவது மணல் குவாரிகள்தான். அதனால்தான் இப்போது மணல் குவாரிகளை மையமாக வைத்து ரெய்டுகள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன.
திமுக வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான நிதி மது விற்பனை செய்யும் டாஸ்மாக் மூலமும், மணல் விற்பனை மூலமும் தான் கிடைப்பதாக வந்த புகார்களை அடுத்துதான் மதுவுக்கு அடுத்து மணல் மீது கை வைத்திருக்கிறது அமலாக்கத்துறை. திமுகவின் கரன்சி நெட்வொர்க்கை கட் செய்வதே இதன் நோக்கம்’ என்கிறார்கள்.