டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் வலையில் சிக்கிய ED – அமித்ஷாவை அதிரவைத்த திண்டுக்கல் ஆபரேஷன்! சேஸிங் பின்னணி!
வைஃபை ஆன் செய்த பிறகு தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட தகவல் இன்பாக்சில் விழுந்தது. “ராஜஸ்தானை அடுத்து தமிழ்நாட்டில்தான் அமலாக்கத்துறை அதிகாரி பிடிபட்டிருக்கிறார். தென்னிந்தியாவில் இது முதல் முறை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவையே அதிர வைக்கும் அளவுக்கு நடந்த இந்த திண்டுக்கல் ஆபரேஷனின் பின்னணி பற்றி வாட்ஸ் அப் விரிவான மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. ED officer arrested for 20 lakh bribe case
“பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அமலாக்கத்துறை என்ற பெயர் மிகவும் பரவலாக உச்சரிக்கப்படுகிற பெயராக மாறிவிட்டது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை பல்வேறு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தனி நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. தமிழகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்குப் பிறகு அமலாக்கத்துறை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்சம் பெற்றதாக தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்த சம்பவமும், மதுரை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புகுந்து விசாரணை செய்ததும் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி. இவர் மதுரை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் சீனியர் அதிகாரியாக இருக்கிறார். என்ன நடந்தது, ஏன் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்?
டாக்டர் சுரேஷ்பாபு மீது சொத்துக் குவிப்பு வழக்கு!
திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் தற்போதைய துணை கண்காணிப்பாளராக இருக்கும் டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல்-பழனி சாலையில் சத்திய சுபா என்ற தனியார் மருத்துவமனையை நடத்தி வருகிறார். திண்டுக்கல் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டவர். பொது சிகிச்சை நிபுணரான டாக்டர் சுரேஷ்பாபு திண்டுக்கல் சுற்று வட்டாரங்களில் சொத்துகள் வாங்கிப் போட்டார். ஒரு கட்டத்தில் 2018 ஆம் ஆண்டு டாக்டர் சுரேஷ் பாபு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்குத் தொடுத்தது.
அமலாக்கத்துறையின் புதிய சட்டத்தின் படி நாட்டில் எந்த மாநிலத்தில், வருமானத்துக்கும் அதிகமான சொத்து சேர்த்த வழக்குத் தொடுக்கப்பட்டாலும் அதுகுறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை அமலாக்கத்துறைக்கு அனுப்பிட வேண்டும். ஏனென்றால் வருமானத்துக்கும் அதிகமான சொத்து சேர்த்ததன் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதா என்பதை அமலாக்கத்துறை ஆராயும்.
அதன்படியே திண்டுக்கல் மாவட்ட விஜிலென்ஸ் அலுவலகத்தில் இருந்து மதுரை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு டாக்டர் சுரேஷ்பாபு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி எழுத்து ரீதியாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல மதுரை மண்டல அமலாக்கத்துறை லிமிட்டுக்கு உட்பட்ட தென் மாவட்டங்களில் இருந்து பல தனிநபர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் பற்றிய எழுத்துபூர்வ தகவல்கள் அனுப்பப்பட்டன.
அமலாக்கத்துறையின் மறுபக்கம்!
வெளியே சட்ட விரோத பணப் பரிமாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக நீதிமன்றங்களில் வாதாடி வரும் அமலாக்கத் துறையின் அதிகாரிகள் சிலர் மதுரை மண்டல அலுவலகத்துக்கு வந்துள்ள, சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரங்கள் பற்றி ஆராய்ந்து… அதில் சிலரை டிக் அடித்து அவர்களைத் தொடர்புகொண்டனர்.
‘உங்க மேல இ.டி. ஆக்ஷன் எடுக்க எல்லா முகாந்திரமும் இருக்கு. என்ன சொல்றீங்க?’ என்று பேசி பலரிடம் இருந்து லட்சங்களையும் கோடிகளையும் பெற பேரம் பேசியிருக்கிறார்கள்.
இப்படித்தான் மதுரை மண்டல அம்லாக்கத்துறை அலுவவலகத்தின் சீனியர் அதிகாரியான அங்கித் திவாரி தரப்பிலும் சில நபர்களைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அரசியல் பின்னணி அவ்வளவாக இல்லாத, சமூகத்தில் செல்வாக்கு கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து இந்த மிரட்டல் ஆபரேஷனில் இறங்கியுள்ளனர்.
அப்படித்தான் டாக்டர் சுரேஷ்பாபுவிடமும் இ.டி. நடவடிக்கையைத் தடுப்பதற்காக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தரப்பில் பேரம் பேசப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு மாதமாகவே இந்த பேரம் தொடர்ந்திருக்கிறது. ஏற்கனவே கடந்த மாதம் நத்தம் சாலையில் வைத்து சில லட்சங்களைக் கொடுத்திருக்கிறார் டாக்டர் சுரேஷ்பாபு. அதைத் தொடர்ந்து மீதி பணத்தைக் கேட்டு அங்கித் திவாரி தரப்பில் சுரேஷ்பாபுவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
சென்னையில் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!
இதுகுறித்து தீர யோசித்து தனது நலம் விரும்பிகளிடமும் ஆலோசித்த டாக்டர் சுரேஷ்பாபு, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி குறித்து கூறியுள்ளார்.
திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலக அதிகாரிகள் இதுகுறித்து தங்களது மாநிலத் தலைமையைத் தொடர்புகொண்டு கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்ட விஜிலென்ஸ் தலைமையகம் உடனடியாக உளவுத்துறைக்கும் தகவல் அனுப்பி டாக்டர் சுரேஷ்பாபு குறித்த தகவல்களை உறுதி செய்தது. இதன் பின் ஆட்சித் தலைமைக்கு அதாவது முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து திமுக அமைச்சர்களை அமலாக்கத்துறை குறிவைத்து செயல்பட்டு வரும் நிலையில்… இப்படி அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் கேட்கும் புகார் வந்திருப்பது குறித்து தீர ஆலோசித்தார் முதலமைச்சர். எல்லா விவரங்களும் உண்மையாகவும் சரியாகவும் இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ள பச்சைக் கொடி காட்டினார்.
ஆபரேஷன் ஸ்டார்ட்!
இதன் பிறகு டாக்டர் சுரேஷ்பாபுவிடம் அமலாக்கத் துறை அதிகாரியோடு பேசி இடத்தை ஃபிக்ஸ் செய்யும்படி விஜிலென்ஸ் போலீசார் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் இன்று (டிசம்பர் 1) காலை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளார் டாக்டர். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரி தரப்பினரோ… எந்த இடத்துக்கும் வர முடியாது, போன முறை நத்தம் ரோட்டுக்கு வந்ததுபோல இந்த முறை திண்டுக்கல்-நத்தம் பைபாஸ் ரோட்டில தோமையார்புரம் ஏரியாவுல தனியார் ஹோட்டல் பக்கத்துல காரோட நிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
இந்த லொக்கேஷனை கச்சிதமாக விஜிலென்ஸுக்கும் பாஸ் செய்துவிட்டார் டாக்டர் சுரேஷ் பாபு, விஜிலென்ஸ் திட்டப்படி அந்த கரன்சி கட்டுகளில் ரசாயனம் தடவப்பட்டது. இன்று காலை சீக்கிரமே தோமையார்புரம் பகுதியில் விஜிலென்ஸ் போலீஸார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டனர். காலை 7 மணியளவில் குறிப்பிட்ட அந்த பகுதியில் சுரேஷ்பாபு வந்துவிட, குறித்த நேரத்தில் அந்த கார் வந்து நின்றது. பையில் வைத்திருந்த பணத்தை அதிகாரியின் கையில் கொடுக்க டாக்டர் தரப்பினர் முயல, அவரோ என்ன நினைத்தாரோ, ‘டிக்கியில வையுங்க’ என்று கூறியிருக்கிறார். உடனே டாக்டர் அந்த பணத்தை டிக்கியில் வைத்தார்.
தப்பித்த இ.டி. அதிகாரி… துரத்திப் பிடித்த போலீஸ்
சட்டென இ.டி. அதிகாரியின் கார் வேகம் எடுத்தது. உடனடியாக அந்த காரை விரட்டினர் விஜிலென்ஸ் போலீஸார். சில கிலோ மீட்டர்கள் சேஸிங்குக்குப் பிறகு கொடை ரோடு டோல்கேட் அருகே சென்று இ.டி. அதிகாரியின் காரை சுற்றி வளைத்தனர். அப்படியே இ.டி. அதிகாரி அங்கித் திவாரியையும் விஜிலென்ஸ் போலீஸார் கைது செய்தனர்.
அதன் பின் இன்று மாலை மதுரை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சென்று சோதனை நடத்தியது. அதைத் தடுக்கும் வகையில் அமலாக்கத்துறை துணை ராணுவத்தை வரவழைத்தது. ஆனாலும் சளைக்காத தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அங்கித் திவாரியை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள்.
அமைச்சர்களிடமே பேரம் பேசிய அமலாக்கத்துறை
தமிழ்நாட்டின் சில முக்கிய அமைச்சர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் உங்கள் மீதான வழக்குகள் தீவிரம் காட்டாமல் இருக்க இவ்வளவு கோடி வேண்டும் என்று பேரம் பேசியிருக்கிறார்கள். அதில் சில அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே செட்டில் செய்தும் இருக்கிறார்கள். இப்படி ஓர் அமைச்சர் அண்டை மாநிலத்தில் வைத்து அமலாக்கத் துறை அதிகாரிக்கு பணம் கொடுத்தது பற்றி சில நேர்மையான அதிகாரிகள் இ.டி. மேலிடத்துக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அந்த அதிகாரி உயரதிகாரியின் செல்லப் பிள்ளை என்பதால் வெறும் இடமாறுதலோடு விட்டுவிட்டர்கள். இப்படி அமைச்சர்களிடமே பேரம் பேசிய ருசி கண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், அந்த நம்பிக்கையில்தான் தனி நபர்களிடம் பேரம் பேச ஆரம்பித்தனர். ஆனால் தமிழ்நாடு போலீஸ் இதை இந்திய அளவில் எக்ஸ்போய் செய்துவிட்டது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சலார் ட்ரெய்லர்: மிரட்டும் பிரபாஸ்… மிரள வைக்கும் ஆக்சன்!
மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியா?: தமிழிசை பதில்!
ED officer arrested for 20 lakh bribe case