டிஜிட்டல் திண்ணை: தேர்தல் பட்ஜெட்… ED குறி வைக்கும் திமுகவின் மும்மூர்த்திகள்!

Published On:

| By Aara

Digital thinnai ED focuses

வைஃபை ஆன் செய்ததும் தேர்தல் பறக்கும் படையினர் அமைச்சர் எ.வ.வேலுவின் வாகனத்தை சோதனை செய்யும் புகைப்படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது, “திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், பாஜக கூட்டணி என்று நான்கு முனைப்போட்டி தமிழ்நாடு தேர்தல் களத்தில் நிலவினாலும் இந்த கூட்டணிகளில் அதிகம் செலவு செய்யக்கூடியவர்கள் யார் என்ற ஆராய்ச்சியை மத்திய வருமான வரித்துறையும் அமலாக்க துறையும் சேர்ந்து தொடங்கிவிட்டன.

சில வேட்பாளர்களை கைது செய்யக்கூட திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனே வெளிப்படையாக வேலூர் தொகுதி பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார்.

Digital thinnai ED focuses

கடந்த மாதம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னை வந்து தேர்தல் பணிகள் பற்றி ஆய்வு செய்தார். அப்போது தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகிய உயர் அதிகாரிகளிடமும் பணப்பட்டுவாடாவை தடுப்பது பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

’வாக்குக்கு பணம் கொடுப்பது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட பகுதிகளின் வருவாய் நிர்வாக அதிகாரிகள் மட்டுமல்ல காவல்துறை அதிகாரிகளும் கவனமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய ராஜீவ் குமார், ஒருவேளை தேர்தல் நேரத்தில் வாக்குக்கு கொடுப்பதற்கான பணம் பிடிபடும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமின்றி அதைத் தாண்டிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டி இருக்கும்’ என்றும் எச்சரித்தார், இந்த எச்சரிக்கைகளை அப்போதே தமிழக முதல்வரிடம் டிஜிபியும் தலைமைச் செயலாளரும் நிர்வாக ரீதியாக தெரிவித்தனர்.

இப்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் வாக்குக்கு பணம் கொடுக்க முயற்சிக்கிறதா என்ற ஆய்வை குறிப்பாக திமுகவும் அதிமுகவும் இதில் எவ்வாறு செயல்படுகின்றன என்று வருமானவரித்துறையும் அமலாக்கத்துறையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

இப்போதே மக்கள், ’இந்த முறை எவ்வளவு கொடுக்கப் போறீங்க?’ என்று கேட்பதாக திமுக நிர்வாகிகள் தலைமைக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு 300 ரூபாயாவது கொடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்றும் தலைமைக்கு அவர்கள் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். இந்த வகையில் கணக்கிட்டால் ஒவ்வொரு தொகுதிக்கும் சில நூறு கோடி பட்ஜெட் ஆகிறது.

திமுகவில் தேர்தல் பட்ஜெட் தொடர்பான பணிகளில் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருந்த செந்தில் பாலாஜி, இப்போது அமலாக்கத்துறை வழக்கில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், தேர்தல் களத்தில் இது தொடர்பானபணிகளை ஒருங்கிணைக்க கூடியவர்கள் என்று மூன்று அமைச்சர்களை அமலாக்கத்துறை கணித்து, கண்காணிக்கிறது என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரங்களில். அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, முத்துசாமி ஆகியோர்தான் இந்த மூவர்.

திமுக தரப்பில் இப்படியென்றால் அதிமுகவில் வேட்பாளர் தேர்வின் போது ஒவ்வொரு வேட்பாளரும் 10 கோடி ரூபாயை தலைமையிடம் கொடுக்க வேண்டும், மீத செலவை தலைமை பார்த்துக் கொள்ளும் என்று பேசப்பட்டது. ஆனால், இப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ’அதிமுக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டாம். நாம் 300 ரூபாய் கொடுத்தால் திமுகவினர் 500 ரூபாய் கொடுப்பார்கள். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலேயே இதைப் பார்த்து விட்டோம். எனவே வீணாக விரயம் செய்ய வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளதாக தகவல்.

அதே நேரம் அதிமுகவில் சொந்த செல்வாக்குள்ள வேட்பாளர்கள் தங்களின் சக்திக்கு ஏற்ற மாதிரி தங்களது தொகுதிகளில் பணத்தை இறக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

இப்படி திமுக, அதிமுகவிலேயே தேர்தல் பட்ஜெட் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அண்ணாமலையோ ‘ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் ஒரு முன்மாதிரியான வேட்பாளராக நான் இருப்பேன்’ என்று கோவையில் தெரிவித்துள்ளார். ஆனால் பாஜகவிலேயே நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதியில் அதிகமான பணப் புழக்கம் இருக்கும் என்று பாஜக நிர்வாகிகளே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜ் க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிஎம்எல்ஏ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால்….: உச்ச நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை!

“பாஜகவுடன் கூட்டணி வைத்தால் உடனடியாக சின்னம்”: சீமான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share