டிஜிட்டல் திண்ணை: கொச்சியில் சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி... குறி வைத்து தூக்கிய ED : பின்னணி ரிப்போர்ட்
வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கேரள மாநிலம் கொச்சியில் கைது செய்யப்பட்ட ஃபிளாஷ் நியூஸ் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
இதையடுத்து வாட்ஸ்அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 கைது செய்யப்பட்ட நிலையில்… அதற்கும் முன்பிருந்தே தலைமறைவாக இருந்தவர் அவரது தம்பி அசோக் குமார். அவருக்கு இதுவரை மூன்று முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தனக்கு இதய பிரச்சினை இருப்பதாக சொல்லி ஆஜராவதிலிருந்து அவகாசம் கேட்டிருந்தார். இந்த தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கறிஞரே தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில்தான் முதலில் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்வது என்பதில் தீவிரமானது அமலாக்கத்துறை. ஒரு வழியாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரித்தது. அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு, ‘ என் தம்பிக்கு தான் எல்லாம் தெரியும்’ என்று கூறியிருக்கிறார் செந்தில் பாலாஜி.
இந்த வகையில் செந்தில் பாலாஜியிடம் கஸ்டடி விசாரணையை முடிப்பதற்குள் அசோக் குமாரை கைது செய்வது என்பதில் தீவிரமானது அமலாக்கத்துறை. ஒரு பக்கம் செந்தில் பாலாஜியிடம் விசாரணை இன்னொரு பக்கம் அசோக் குமார் எங்கே என்ற தேடுதல் வேட்டை என இரண்டையும் நடத்திக் கொண்டிருந்தது.
இதற்கிடையே அதிகாரப்பூர்வமற்ற வகையில் அசோக் குமாரின் மனைவி நிர்மலாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பேசியதாகவும் அந்த வகையில் சில முக்கியமான தகவல்கள் கிடைத்ததாகவும் ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில் வெளியாகி இருந்தது.
அசோக் குமாருக்கு மூன்றாவது சம்மன் அனுப்பும்போதே அவர் கொச்சியில் தான் இருக்கிறார் என்பதை ஸ்மெல் செய்து விட்டது அமலாக்கத்துறை. ஆனாலும் அவர் தொடர்ந்து தனது பல நண்பர்களின் செல்போன்களை பயன்படுத்தி வந்ததால் லொகேஷனை துல்லியமாக கண்டறிய முடியவில்லை.
கரூர் சேலம் பைபாஸ் ரோட்டில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் கட்டி வரும் பிரம்மாண்டமான பங்களாவில் ஒரு கேரள நிறுவனமும் பணிகளை எடுத்து செய்து கொண்டிருக்கிறது. கொச்சியை சேர்ந்த அந்த நிறுவனத்தை சேர்ந்தவரின் அப்பார்ட்மெண்டில் தான் அசோக்குமார் இருக்கிறார் என்பதை அமலாக்கத்துறை உறுதி செய்து கொண்டது.
நேற்று ஆகஸ்ட் 12 செந்தில் பாலாஜிவிடம் கஸ்டடி விசாரணை முடித்த நிலையில்… செந்தில் பாலாஜியை விசாரித்த அமலாக்கத்துறை டீம் கொச்சி சென்றது. கேரளாவிலேயே மக்கள் அடர்த்தி மிகுந்த நகரம் கொச்சி. சர்வதேச விமான நிலையம், துறைமுகம் என உலகத்தோடு தொடர்பு கொண்ட நகரம்.
எனவே அசோக்குமார் எந்த வழியாகவும் தப்பித்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது அப்பார்ட்மெண்டில் இருந்து அவர் வெளியே செல்லும்போது இன்று பிற்பகல் 1.15 மணிக்கு அசோக் குமாரை தங்கள் பிடிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
அசோக் குமார் கொச்சியில் இருந்து டெல்லி கொண்டு செல்லப்படுகிறார் என்ற தகவல் முதலில் வந்த நிலையில்… பிறகு அவர் சென்னை அழைத்து வரப்படுவதாகவும் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்திய அதே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குமாரும் அமலாக்க துறையால் ஆஜர்ப்படுத்தப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்களை அசோக் குமார் பொருட்டாக எடுத்துக் கொள்ளாத நிலையில் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி அவரை கஸ்டடியில் எடுக்க தயாராகிறது அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜியிடம் கேட்ட கேள்விகளில் பலவற்றுக்கு தம்பிக்கு தான் எல்லாம் தெரியும் என அவர் பதில் சொல்லி இருந்த நிலையில்… அசோக் குமாரை எடுத்து அவரையும் விசாரிக்க தயாராகிறது அமலாக்கத்துறை” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
ஊட்டச்சத்து குறைபாடு: சமாதானம் அடைய விரும்பவில்லை: முதல்வர்
செந்தில்பாலாஜி தம்பி அதிரடி கைது!
ஸ்ரீதேவி 60வது பிறந்தநாள்: கெளரவித்த கூகுள்!