டிஜிட்டல் திண்ணை: ’வெட்டி’ எடுக்கப்படும் கனிமவளத் துறை…  ராஜினாமா மூடில் அமைச்சர் துரைமுருகன்?

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் கனிமவளத் துறை பற்றி அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்று இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதை படித்து முடித்த பிறகு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“தமிழகத்தில் கனிமவளத் துறைக்கு உட்பட்ட குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிம வளங்களை வெட்டுபவர்கள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள்’ என்று அறிவித்துள்ள தமிழக அரசு… வெளி மாநிலங்களுக்கு தமிழக மாவட்டங்களில் இருந்து கனிம வளத்தை கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இதுவரை தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றையும் இந்த செய்தி குறிப்பில் அரசு அறிவித்தது.

அதே நேரம் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் கனிமவளத் துறைக்கு உட்பட்ட குவாரி தொழில் செய்பவர்கள் அரசால் மிரட்டப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு துறை ரீதியாக முக்கியத்துவம் பெறுவதோடு  அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

இது குறித்து விசாரித்த போது அவர்கள் சமீபத்தில்  நடந்த ஒரு பிளாஷ் பேக் பற்றி  விவரிக்கிறார்கள். பிடிஆர் ஆடியோ விவகாரம் தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் அதன் பிறகு அமைச்சரவையில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது பிடிஆரிடம் இருந்த நிதித் துறையை,  தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்க முடிவு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அதே நேரம் தங்கம் தென்னரசுவிடமிருந்து தொழில்துறையை எடுத்து புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட டிஆர்பி ராஜாவிடம் கொடுத்தார். இதனால் தங்கம் தென்னரசுவுக்கு  துறை ரீதியான முக்கியத்துவம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக அவருக்கு துரைமுருகனிடம் இருந்து  வருகிற  கனிமவளத் துறையை பிரித்துக் கொடுக்க திட்டமிட்டார் ஸ்டாலின்.

இதற்காக திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனிடம் ஆலோசித்தார். அப்போது துரைமுருகன், ‘இந்த நேரத்தில் நீங்கள் என்னிடம் இருந்து கனிமவளத் துறையை எடுத்து இன்னொரு அமைச்சருக்கு கொடுத்தீர்கள் என்றால்… நான் ஏதோ அந்த துறையில் தவறு செய்து விட்டதாகவும் அதன் அடிப்படையில் என் மேல் நீங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் பேச்சு வந்துவிடும். எனவே இப்போதைக்கு இந்த துறை என்னிடமே இருக்கட்டும்’ என்று ஸ்டாலினிடம் வற்புறுத்தி கூறியிருக்கிறார். அதன்பிறகு ஸ்டாலினும் அந்த முடிவை விட்டுவிட்டார் ‌

அதே நேரம் துரைமுருகன் தானாகவே முன்வந்து கனிமவளத் துறையை வேறு யாரிடமாவது கொடுத்து விடுங்கள் என்று கேட்கும் நிலை வரும் என்று அப்போதே முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசத் தொடங்கினார்கள்.

இந்த நிலையில் தான் கடந்த ஜூன் 6ஆம் தேதி கனிமவளத் துறை செயலாளராக இருந்த ஜெயகாந்தன் ஐஏஎஸ் மாற்றப்பட்டு அவரது இடத்துக்கு நிர்மல்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். கனிமவளத் துறையின் செயலாளராக இருந்த ஜெயகாந்தன் அமைச்சர் துரைமுருகனோடு  சுமுக தொடர்பில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் அந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டதாகவும் கோட்டை வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

கனிம வளத்துறை செயலாளர் மாற்றப்பட்ட நிலையில் தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசிய துரைமுருகன், ‘எனது துறையின் செயலாளர் மாற்றப்படுவதே எனக்குத் தெரியவில்லை. என்னிடம் இதுகுறித்து ஆலோசனையும் நடத்தவில்லை. பேசாமல் அமைச்சர் பதவியை எல்லாம் ராஜினாமா செய்து விட்டு கட்சி பதவியில் மட்டும் இருக்கலாமா என்று கூட யோசிக்கிறேன்’ என்று வேதனைப்பட்டிருக்கிறார்.  இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் அவரை ஆறுதல் படுத்தி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் துரைமுருகன் நிர்வகித்துவரும் கனிம வளத்துறையில் அவரது அறிதலுக்கு வராமலேயே  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அவராகவே கனிமவளத்  துறையை வேறு யாருக்காவது கொடுங்கள் என்று சொல்லப் போகிறார் என்று சில வாரங்களுக்கு முன் ஸ்டாலின் வட்டாரத்தில் பேசப்பட்டதை செயலுக்கு கொண்டுவரும் முயற்சியாக இது போன்ற நடவடிக்கைகள் இருக்கலாம்.

துரைமுருகனிடம் இருந்து கனிம வளத் துறையை ’வெட்டி’யெடுப்பதற்காக படிப்படியான காய்கள் நகர்த்தப்படுகின்றன’  என்று துரைமுருகன் வட்டாரத்தினர் ஆதங்கத்தில் இருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப். 

அச்சுறுத்தும் விலைவாசி உயர்வு: பாஜக அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி!

போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment