டிஜிட்டல் திண்ணை: ராகுல் மீண்டும் தகுதி நீக்கம்? அமித் ஷாவை தொடாத எடப்பாடி – அதிமுகவுக்குள் சந்தேகப் புயல்!

Published On:

| By Selvam

வைஃபை ஆன் செய்ததும் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சம்பவங்கள் பற்றிய வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசியலமைப்பு சாசனத்தை வடிவமைத்த முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசியதாக நாடு முழுதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் நேற்றே விடுதலை சிறுத்தைகள் போராட்டத்தில் இறங்கிவிட்டனர். இன்று திமுக மாநிலம் முழுவதும் அமித் ஷாவுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடத்தியது. காங்கிரஸும் ஆங்காங்கே அமித் ஷாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் இப்போது வரை பாஜக கூட்டணியில் இருக்கக் கூடிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட, ‘அம்பேத்கரை தவறாக பேசியது யாராக இருந்தாலும் கண்டிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

நேற்று கட்சி தொடங்கிய தவெக தலைவர் விஜய் கூட, அமித் ஷாவை கண்டிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால், பாஜகவோடு எந்த உறவும் எங்களுக்கு இல்லை என்று சொல்லிவரக் கூடிய அதிமுக மட்டும்தான், இந்த விவகாரத்தில் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவிக்காத கட்சியாக இருக்கிறது.

ஏற்கனவே, டிசம்பர் 15-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் மாநில திமுக அரசுக்கு எதிராக கண்டனமும், மத்திய அரசு சம்பந்தப்பட்ட தீர்மானங்களில் வலியுறுத்தல் என்ற வார்த்தையும் இடம்பெற்றிருந்தது. இதுவே விமர்சனம் ஆகியது.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 18) அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ’அம்பேத்கரை தரக்குறைவாக பேசியவர்களை மக்கள் நிராகரிப்பார்கள். இது பாஜகவுக்கு பல பின்விளைவுகளை ஏற்படுத்தும்’ என்று பேசியிருந்தார்.

இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியபோது அமித் ஷா- அம்பேத்கர் சர்ச்சை பற்றி கேட்டனர். அதற்கு அவர், ‘நேற்று ஜெயக்குமார் சொன்னதுதான் என் கருத்து” என்று முடித்துக் கொண்டார்.

இது அதிமுக மீது கடும் விமர்சனங்களை அதிகப்படுத்தியுள்ளது. அப்படியென்றால் அதிமுக – பாஜக கள்ள உறவு என்று திமுக விமர்சனம் செய்து வருவது உண்மைதான் என்று திமுகவினர் கூறி வருகிறார்கள்.

இது ஒருபக்கம் என்றால்… இன்னொரு பக்கம் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களே கூட, ‘ஏன் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இவ்வளவு அழுத்தமாக இருக்கிறார் என்று தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி கூறிய கருத்துகளுக்கு கண்டனம் என்று ஒரு எக்ஸ் பதிவிட்டால் கூட போதுமே…அட அப்படி இல்லையென்றால், செய்தியாளர்கள் கேட்டபோது வன்மையாக கண்டிக்கத் தக்கது என்று சொல்லியிருக்கலாமே…

ஆனால், மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் என்றெல்லாம் அமித் ஷாவுக்கு அடைமொழிகளை அள்ளிக் கொட்டிய எடப்பாடி, அதன் பின் ஜெயக்குமார் கருத்தே என் கருத்து என்று நழுவியது எங்கள் கட்சிக்குள்ளேயே பல விவாதங்களை ஏற்படுத்தியது.

அம்பேத்கர் சமுதாயங்களை எல்லாம் கடந்தவர் என்றாலும் இன்றைக்கும் அவர் தலித் சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவராக கருதப்படுகிறார். இந்நிலையில், நாளை அதிமுகவுக்கு எதிராக இதையே ஆயுதமாக்கி, பட்டியல் சமுதாய மக்களின் வாக்குகள் நமக்கு கிடைக்காமல் திமுக கடுமையாக பிரச்சாரம் செய்யும்.

அதுமட்டுமல்ல…விசிக கட்சி நமது கூட்டணிக்கு வரும் வரும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அம்பேத்கர் விவகாரத்தில் ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத அதிமுகவை நாளை விசிக திரும்பிக் கூடப் பார்க்காது.

இப்படிப்பட்ட நிலையில் என்ன விதமான உத்தியின் அடிப்படையில் என்ன விதமான நிலைப்பாடு எடுத்திருக்கிறார் எடப்பாடி என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது அதிமுகவில் குழப்பத்தையும் சந்தேகத்தையும்தான் அதிகரித்திருக்கிறது’ என்று அதிமுக புள்ளிகளே கூறுகிறார்கள்.

இதற்கிடையில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது இன்று இரவு நாடாளுமன்ற வளாக பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே வடகிழக்கு பெண் எம்பி Phangnon Konyak ராகுல் காந்தி தன்னிடம் கண்ணியக் குறைவாக நடந்துகொண்டதாக ராஜ்யசபா தலைவரிடம் புகார் அளித்துள்ளார்.

இன்று இரவு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை கிரண் ரிஜ்ஜு, ‘எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது கடும் நடவடிக்கை’ எடுக்கப்படும்’ என்று கூறியிருக்கிறார்.

கடந்த நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மீது தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது போல, மீண்டும் தகுதி நீக்க நடவடிக்கைக்குதான் இதெல்லாம் வித்திடுகின்றன என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாடாளுமன்ற வளாகத்தில் தள்ளு முள்ளு… ராகுல் மீது வழக்கு!

அமித்ஷா குறித்த கேள்வி… நழுவிய எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share