டிஜிட்டல் திண்ணை: அரசுப் பள்ளிகளில் ‘மகா விஷ்ணு’க்கள்… அன்பில் மகேஷ் இலாகா மாற்றமா?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் நடந்த சம்பவ வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றை பார்த்துக்கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. ‘2021-ல் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி வகித்து வருகிறார். அவருடைய நிர்வாகத்தில், எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய குறைகளை விட திமுகவின் அபிமானிகள் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் சுட்டிக்காட்டிய குறைபாடுகளே அதிகம்.

இந்தவரிசையில் தான், சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வகுப்பெடுப்பதற்காக, சென்ற மகா விஷ்ணு என்பவரை மையமாக வைத்து அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.

மாணவிகளிடம் முன் ஜென்மம், இந்த ஜென்மம், அடுத்த ஜென்மம், கர்மா, பாவம், புண்ணியம், மந்திரம் என்றெல்லாம் பேசிய மகா விஷ்ணு, இந்த பிறவியில் ஊனமாக பிறந்தவர்கள் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றார்.

அடுத்து வர இருக்கிற பொதுத் தேர்வுகளை கல்வி உலகில் நிலவும் போட்டிகளை எப்படி எதிர்கொள்வது? என்று பேச அழைத்தால், இவர் இப்படி பேசுகிறாரா? என அங்கே பணியாற்றி வரும் தமிழாசிரியர் சங்கர் எதிர்க்குரல் கொடுத்தார்.

இந்த வீடியோக்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளாலோ ஆசிரியர்களாலோ வெளியிடப்படவில்லை. மகா விஷ்ணுவே தனது யூடியூப் சேனலில் இதை வெளியிட்டதால் தான் உலகத்திற்கே தெரியவந்தது.

நேற்று மாலை முதல் இது வைரலாக பரவ, அரசு பள்ளியில் இவரைப் போன்ற பிற்போக்கு சிந்தனையாளர்களுக்கு இடம் கொடுத்தது யார்? என்ற கேள்வி சமூக தளங்களில் ட்ரெண்டிங் ஆனது.

இன்று காலை அமெரிக்காவில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின், பள்ளிகளில் அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதற்கிடையில், இன்று காலை பரபரப்பாக அசோக் நகர் பள்ளிக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், மகா விஷ்ணுவை தட்டிக்கேட்ட தமிழாசிரியர் சங்கருக்கு பாராட்டு தெரிவித்தார். மாணவிகளிடம் உரையாற்றினார்.

அதற்கு பிறகு சில மணி துளிகளில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

 

பள்ளி கல்வித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ’அந்த மகா விஷ்ணுவை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் சில பெற்றோர்கள் தான் தன்னம்பிக்கை வகுப்புக்காக பரிந்துரைத்திருக்கிறார்கள்.

ஆனால், இதே மகா விஷ்ணு கடந்த 2023-லேயே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்திருக்கிறார். மேலும், சில அமைச்சர்களையும் சந்தித்துள்ளார்.

மேலும், அரசு பள்ளிகளில் தன்னை அறிதல் என்ற தலைப்பில் அவர் தொடர் வகுப்புகள் எடுப்பதற்கும் ஏற்கனவே பேசப்பட்டிருக்கிறார்.

பள்ளி கல்வித்துறையில் வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்த முற்படுவது கடந்த அதிமுக ஆட்சியை தொடர்ந்து இந்த திமுக ஆட்சியிலும் அதே வேகத்தில் நடைபெற்று வருகிறது.

கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ-வாக வலதுசாரி சார்பு கொண்ட மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டார். இதற்கு ஜவாஹிருல்லா உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டது.

சில தனியார் பள்ளிகள் ஆர்.எஸ்.எஸ் கேம்ப் நடத்துவதற்காக ஒருவாரம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை விட்டிருக்கிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த இந்த நிலைமை, திமுக ஆட்சியிலும் தொடர்ந்தது. இதுகுறித்தும் சர்ச்சைகள் எழுந்தன.

இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில், கொண்டாடுவோம் என சில மாவட்ட கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. அந்த சுற்றறிக்கை சுற்றுச்சூழல் துறை சார்பாக விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் என் அரசு விளக்கமளித்தது.

இப்படி தொடர்ந்து பள்ளி கல்வித்துறைக்குள் சலசலப்புகள் கிளம்பிக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர், உயரதிகாரிகள் ஆகியோருக்கும் ஆசிரியர் சங்கங்கள், தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆகியோருக்கும் இடையில் தரகு வேலை பார்த்த சிற்சிலர்… இந்த திமுக ஆட்சியிலும் அதே இடத்தில் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து பலமுறை வெளிப்படையாகவே விவாதம் நடந்தும் அன்பில் மகேஷ் முதலமைச்சருடனும் அமைச்சர் உதயநிதியுடனும் நெருக்கமானவர் என்பதால், அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

இப்போது கூட ரிசைன் அன்பில் மகேஷ் என்ற ஹேஷ்டேக் எதிர்க்கட்சியினரை விட திமுக அபிமானிகளால் தான் அதிகமாக ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷின் செல்வாக்கு பற்றி அறிந்தவர்கள், அவர் ராஜினாமா செய்யவோ, பதவி பறிக்கப்படவோ வாய்ப்பே இல்லை என்பதை அறிவார்கள். குறைந்தபட்சம் அன்பில் மகேஷின் துறையை மாற்றினாலாவது தொடர் சர்ச்சைகளில் இருந்து பள்ளி கல்வித்துறை தப்பிக்கும் என்கிறார்கள்’ என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகா விஷ்ணுவுக்கு அனுமதி கொடுத்தது யார்? – பிரஸ்மீட்டில் சீறிய எடப்பாடி!

11 YEARS OF VVS… சிவகார்த்திகேயனை ‘ஸ்டார்’ ஆக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *