வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது பற்றிய காட்சிகளும் தகவல்களும் இன்பாக்சில் நிரம்பி வழிந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகள் இன்று தேசிய அரசியலிலும் ஹாட் டாபிக்காக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜூன் 14 இன்று அதிகாலை நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கும் பரிந்துரைத்துள்ளனர் மருத்துவர்கள். இதற்கிடையே அமலாக்கத்துறையும் தனியாக ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவை அமைத்து செந்தில்பாலாஜியை ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறது.
இதற்கிடையே இன்று மாலை சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமலாக்கத்துறையின் முறையீட்டை அடுத்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கே சென்று செந்தில்பாலாஜியை பார்வையிட்ட அவர், வரும் ஜூன் 28 ஆம் தேதிவரை செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவல் உத்தரவை வழங்கியிருக்கிறார். பிறகு முதன்மை நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறையோ செந்தில்பாலாஜியை தன் கஸ்டடியில் எடுக்க மனு செய்திருக்கிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்து நாளை (ஜூன் 14) காலைக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் அமைச்சர்களில் ஒருவராக இருக்கும் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் அவர் அமைச்சரவையில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கைதான நிலையில் அவரால் அமைச்சரவை பணிகளை மேற்கொள்ள முடியாது. அதனால் அவர் வகித்துவரும் மின்சாரம், மதுவிலக்கு ஆயத் தீர்வை துறைகளுக்கு வேறு அமைச்சர்களை நியமிக்க வேண்டிய அவசியமும் அவசரமும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருக்கிறது.
வேண்டுமென்றால் செந்தில் பாலாஜிக்கான ஆதரவை வெளிப்படுத்துவதற்காக அவரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருக்கும் உரிமை முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. இலாகா இல்லாத அமைச்சர் என்றால் அமைச்சர் பதவிக்கான ஊதியம், பாதுகாப்பு, உரிமைகள், சலுகைகள் கிடைக்கும். ஆனால் அவர்களுக்கு துறை இருக்காது. ஆனால் மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக இப்படி செய்யலாம்.
ஏற்கனவே வாஜ்பாய் அமைச்சரவையில் முரசொலி மாறன், மோடி அமைச்சரவையில் அருண் ஜேட்லி ஆகியோர் இவ்வாறு இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் செந்தில்பாலாஜி விவகாரத்தில் அவர் நீதிமன்றக் காவல் கைதியாக இருப்பதால் அவருக்கு இலாகா இல்லாத அமைச்சர் என்ற அந்தஸ்து கொடுப்பது சாத்தியமல்ல.
இந்த வகையில் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் அவரது துறைகளை வேறு யாருக்காவது வழங்க வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் பல்வேறு அமைச்சர்களுக்கு செந்தில்பாலாஜியின் முக்கிய துறைகளை கைப்பற்றுவதற்கான போட்டி வேகவேகமாக நடந்துகொண்டிருக்கிறது.
கொங்கு மண்டலத்தில் திமுக மிகக் குறைவான இடங்களில்தான் வெற்றி பெற்றது. கோவையில் ஒரு இடமும் வெற்றிபெறவில்லை. சேலம் மாவட்டத்தில் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் மட்டும் திமுக சார்பில் வெற்றி பெற்றார். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு செல்வராஜ், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் வெற்றிபெற்றனர். அவர்களில் சாமிநாதன் இப்போது அமைச்சராக இருக்கிறார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இப்போது அமைச்சரவையில் பிரநிதித்துவம் இல்லை. கரூரில் செந்தில்பாலாஜி தவிர அரவக்குறிச்சி மஞ்சனூர் இளங்கோ, குளித்தலை மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சிவகாம சுந்தரி ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் மதியழகன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வளவு பேர் இருக்கும் நிலையில், ஒருவேளை செந்தில்பாலாஜியின் துறைகள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களிடமே ஒப்படைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரம்… ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் திருப்தி அடையாமல் இருக்கும் தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன் போன்றோரும் செந்தில்பாலாஜி வகித்த துறைகளில் இரண்டில் ஒன்றாவது தங்களுக்கு கிடைக்குமா என்று முயற்சித்து வருகிறார்கள்.
செந்தில்பாலாஜி மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததில் இருந்தே, ’மதுவிலக்கு துறையை என்னிடம் தாருங்கள். அதை சர்ச்சையில்லாமல் செம்மையாக நடத்திக் காட்டுகிறேன்’ என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தனது நண்பரும் அமைச்சருமான உதயநிதி மூலம் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
அதேநேரம் செந்தில்பாலாஜி தற்போது வகித்து வரும் துறைகளை யாரிடம் கொடுக்கலாம் என்று செந்தில்பாலாஜியிடமே கேட்டு அவரது கருத்தை அறிந்த பிறகு ஸ்டாலின் முடிவெடுப்பார் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.
செந்தில்பாலாஜியின் இரு துறைகளை ஒருவருக்கே கொடுப்பதா, பகிர்ந்துகொடுப்பதா, சீனியர்களுக்கு கொடுப்பதா, ஜூனியர்களுக்கு கொடுப்பதா, புதியவர்களுக்கு கொடுப்பதா என்ற பல்வேறு கேள்விகள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடத்தில் விவாதமாகிக் கொண்டிருக்கிறது. எப்படியோ மீண்டும் ஓர் அமைச்சரவை மாற்றம் நடக்கப் போகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
இந்தோனேசியா ஓபன்: இந்திய வீரர்கள் மோதல்!
“அதிமுகவையும் அமலாக்கத்துறை மிரட்டுகிறது” – மா.சுப்பிரமணியன்