டிஜிட்டல் திண்ணை: திமுகவின் பெரியண்ணன் தனம்- காங்கிரஸ் எம்.பி.க்கள் குமுறல்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்  இன்ஸ்டாவில் இருந்து திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அனைத்து திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்பிக்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோள் கடிதத்தின் போட்டோ வந்திருந்தது. அதைப் படித்துப் பார்த்த வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது

“தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதலாகவே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. ஆளுநர் ரவி தான் கலந்துகொள்ளும் ஒவ்வொரு கூட்டத்திலும் தனி நபராக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய சட்ட மசோதாக்கள் பல ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கின்றன.  அண்மையில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க தமிழக காவல்துறை தாமதம் செய்தது என்று குறிப்பிட்டிருந்தார் ஆளுநர். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முரசொலியில் ஆளுநர் ரவிக்கு எதிரான பல கண்டனக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. 

இதன் உச்சகட்டமாக நவம்பர் 1 ஆம் தேதி திமுகவின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அனைத்து ஒத்த கருத்துடைய எம்பிக்களுக்கு என விளித்து ஒரு கடிதத்தை எழுதினார். அந்த கடிதத்தில், ‘திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்த கருத்துடைய எம்பிக்களும் அறிவாலயத்துக்கு வருகை தந்து, தமிழக ஆளுநரை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தைப் படித்து அதில்  கையெழுத்திடுமாறு வேண்டுகிறேன்.  நவம்பர் 3 ஆம் தேதிக்குள் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் டி.ஆர்.பாலு.

digital thinnai dmk periyannan congress mps rage

இந்த கடிதத்தைப் பார்த்த திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது. ‘ஆளுநரை திரும்பப் பெறுமாறு திமுக கோரிக்கை வைப்பதெல்லாம் முழுமையாக சரிதான். அதற்கு எங்கள் ஆதரவும் முழுமையாக உண்டு. ஆனால் அதற்காக எம்பிக்களை அறிவாலயத்துக்கு வந்து கையெழுத்து போடுமாறும், அதுவும் 3 ஆம் தேதிக்குள் வந்து போடுங்கள்’ என்று சொல்வதும் ஒரு பெரியண்ணன் தனமாகத்தான் இருக்கிறது. 

இன்னும் சொல்லப் போனால்  ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமன அறிவிப்பு வெளியானதுமே திமுகவுக்கு முன்னதாக  அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் தலைவர் அழகிரியும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும்தான் எதிர்ப்பு தெரிவித்தனர்.  உளவுக் காவல்துறையில்  பணியாற்றிய ஒருவரை தமிழக ஆளுநராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்று அழகிரி எடுத்த எடுப்பிலேயே எதிர்ப்பு  தெரிவித்தார்.

ஆனால் இப்போது ஆளுநருக்கு எதிரான மெமோரண்டத்தை அறிவாலயத்தில் வைத்துக் கொண்டு அங்கே வந்து கையெழுத்திடுமாறு கூட்டணிக் கட்சி எம்பிக்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது திமுக. திமுக தலைமைக் கழகம் சார்பில் ஒரு குழு அமைத்து கூட்டணிக் கட்சிகளின் அலுவலகத்துக்கு சென்று அந்த மனுவில் கையெழுத்து வாங்கி கூட்டணிக் கட்சிகளை கௌரவப்படுத்தியிருக்கலாம். அல்லது அனைத்து எம்பிக்களையும் அழைத்துக் கொண்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி சென்று கொடுக்கலாம்.

அதை விட்டுவிட்டு அறிவாலயம் வந்து கையெழுத்துவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?’ என்று சில காங்கிரஸ் எம்.பி.க்களே குமுறுகிறார்கள்.

ஒரு சீனியர் காங்கிரஸ் எம்பி தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம், ‘என்னங்க இதெல்லாம்… அங்க வச்சிருப்பாங்க, நாம போயி கையெழுத்து போட்டுட்டு வரணுமா?’ என்று கேட்க, ‘என்ன பண்றது போயி கையெழுத்து போட்டுட்டு வந்துடுங்க’ என்று தாஜா செய்திருக்கிறார் அழகிரி. ‘ஆமாம்… அறிவாலய வாசல்லயே மனுவை வைச்சு கையெழுத்து போட்டுட்டுப் போங்கனு சொன்னா கூட நாம போட்டுட்டுதானே வரணும்?’ என்று சலிப்பாக வெளியே புலம்பியிருக்கிறார் அந்த எம்பி.

இப்படியாக  திமுக விதித்த கெடுவான நவம்பர் 3 ஆம் தேதி வரை  தமிழகத்தில் இருக்கும்  மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 50 பேரில் 43 பேர் கையெழுத்திட்டுள்ளனர். நவம்பர் 3 ஆம் தேதி வியாழக் கிழமை மார்க்சிஸ்ட் எம்பிக்கள் பி.ஆர். நடராஜன், சு. வெங்கடேசன் ஆகியோர் அறிவாலயம் சென்று கையெழுத்திட்டனர். 

காங்கிரஸ் எம்பிக்களான ப.சிதம்பரம், டாக்டர் செல்லகுமார், ஜோதிமணி,  கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர் ஆகிய காங்கிரஸ் எம்பிக்களும்  தயாநிதிமாறன், டாக்டர் செந்தில்குமார் ஆகிய திமுக எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு எம்பி பி.கே. சுப்பராயனும் நேற்று வரை இந்த மனுவில் கையெழுத்திடவில்லை. 

ஜோதிமணி  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியோடு  பாத யாத்திரையில் இருப்பதால் அவரால் நேரடியாக வர இயலவில்லை. மற்ற காங்கிரஸ் எம்பிக்கள் டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடும் முன்னர் கையெழுத்திடுவார்கள் என்று தெரிகிறது.

இதுகுறித்து ப.சிதம்பரம் இன்று (நவம்பர் 4) தனது ட்விட்டரில்,  ’தமிழ்நாடு ஆளுனரின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட முறையீட்டைக் குடியரசுத் தலைவரிடம் கொடுப்பதை நான் வரவேற்கிறேன். நான் டெல்லியில் இருப்பதால் டெல்லியில் கையெழுத்திடுவேன் என்று நண்பர் திரு டி. ஆர். பாலுவிடம் தெரிவித்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் நின்று வென்ற  ஐஜேகே கட்சியின் நிறுவனரான பாரிவேந்தர் இந்த முறையீட்டில் கையெழுத்திடவில்லை என்று தெரிகிறது. அவர் சில மாதங்களாகவே  திமுக அணியில் இருந்து சற்று தள்ளியிருந்து பாஜகவுடன் நெருக்கம்  காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

குஜராத் தேர்தல் : மோடி – ராகுல் – கெஜ்ரிவால்…மக்கள் செல்வாக்கு யாருக்கு? அதிரடி சர்வே முடிவு!

தெலங்கானா குதிரை பேரம் : வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட கே.சி.ஆர்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *