டிஜிட்டல் திண்ணை: திமுக தேர்தல் பணிகள் ஸ்டார்ட்… கூட்டணிக் கட்சிகள் கேட்டது கிடைக்குமா? ஸ்டாலினுக்குச் சென்ற ரிப்போர்ட்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் திமுக தலைமை வெளியிட்ட நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.

”பொங்கல் முடிந்த கையோடு திமுக தனது நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவிட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (ஜனவரி 19) நாடாளுமன்றத் தேர்தலுக்காக முக்கியமான குழுக்களை அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும் குழு, மக்களவைத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு ஆகிய மூன்று குழுக்கள்தான் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மண்டலத்தை கவனிப்பார்கள் என்றும் அறிவாலய வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சரும், முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்களான அமைச்சர் பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மூன்றாவதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவராக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், அமைச்சர்கள் பிடிஆர், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், எழிலரசன், அப்துல்லா, எழிலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுக்களை அறிவித்து தேர்தல் பணியை திமுக தொடங்கிவிட்டதாகவும் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதையடுத்து விரைவில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட இருக்கிறது.

காங்கிரஸ் கடந்த 2019 தேர்தலில் தமிழ்நாட்டில் 9 இடங்கள், புதுச்சேரியில் 1 இடம் என 10 இடங்களில் போட்டியிட்டது. திமுக கடந்த தேர்தலில் 20 இடங்களில் மட்டுமே போட்டியிட்டு, மீதி 20 இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது.

இம்முறை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவே 30 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று ஏற்கனவே திமுக தலைமைக் கழக நிர்வாகிகளே தலைமையிடம் வற்புறுத்தி வந்தனர். ஆனால் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினோ, இதே கூட்டணி எவ்வித பிசிறும் இல்லாமல் தொடர வேண்டும் என்பதையே விரும்புகிறார்.

இதற்கிடையே கடந்த மாத இறுதியில் காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்று மாநில நிர்வாகிகள், எம்.பி.க்களிடம் ஆலோசனை நடத்தியது. அப்போது தமிழ்நாட்டு எம்பிக்கள் தரப்பில், ‘2019 இல் போட்டியிட்ட இடங்களுக்கு இணையாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோதான் போட்டியிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்கள்.

குறிப்பாக கிருஷ்ணகிரி எம்.பி.யும் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான டாக்டர் செல்லகுமார், ‘தமிழ்நாட்டில் திமுக அரசின் மீதான ஆட்சிக்கு எதிரான மனநிலை வரும் தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் இருந்து திமுகவை காப்பாற்ற காங்கிரசால்தான் முடியும். எனவே காங்கிரசுக்கு அதிக இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும்’ என்று வற்புறுத்தியிருக்கிறார்.

இந்தத் தகவல் திமுக எம்பிக்கள் சிலர் மூலமாக டெல்லியில் இருந்து ஸ்டாலினுக்கு சென்றிருக்கிறது. மேலும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினர்களிடையிலும் இதுகுறித்து விவாதம் எழுந்திருக்கிறது.

அப்போது, காங்கிரசுக்கு கிருஷ்ணகிரி தொகுதியை வரும் தேர்தலில் கொடுக்கக் கூடாது என்றும் பேசியிருக்கிறார்கள். மேலும், ஏற்கனவே கிருஷ்ணகிரி தொகுதியில் தன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட வைக்க திமுக பொதுச் செயலாளர் துரைமுருன் முயற்சித்து வருகிறார்.

கடந்த தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்தை இம்முறை தொகுதி மாற்றி கிருஷ்ணகிரி தொகுதியில் நிற்க வைக்கலாம் என்று சில வாரங்களாகவே துரைமுருகன் முகாமில் ஆலோசனைகள் நடைபெறுகின்றன. இதை அடிப்படையாக வைத்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுமா என்ற விவாதங்கள் திமுக வட்டாரத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் கேட்டபோது, ‘செல்லகுமார் மட்டுமல்ல… எந்த உண்மையான காங்கிரஸ்காரனும், நாம் அதிக தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றுதான் சொல்லுவான். கிருஷ்ணகிரி தொகுதி திமுகவினரே செல்லகுமாரோடு இணக்கமாகத்தான் இருக்கிறார்கள். பொங்கல் விழாக்களில் கூட திமுக நிர்வாகிகளோடுதான் கலந்துகொண்டார் செல்லகுமார்’ என்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மட்டுமல்ல… தற்போது கூட்டணிக் கட்சிகளிடம் இருக்கும் மேலும் சில தொகுதிகளும் திமுகவினரின் கண்களில் உறுத்திக் கொண்டிருக்கின்றன. அதெல்லாம் மீண்டும் அந்தந்த கூட்டணிக் கட்சியினரிடமே செல்லுமா அல்லது மாறுமா என்பது கூட்டணிப் பேச்சுவார்த்தை குழுவின் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பிறகே தெளிவாகும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பயண செலவே பாதி நிவாரணம் : அப்டேட் குமாரு

பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? – அர்ஜுன் பேட்டி!

+1
0
+1
0
+1
1
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *