வைஃபை ஆன் செய்ததும் திமுக கூட்டணிக் கட்சிகளின் பிரச்சார வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் பணப் பிரச்சினை என்பது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டபோது, ‘அடிப்படை ஆரம்ப செலவுகளை காங்கிரஸ் வேட்பாளர்களே கவனித்துக் கொள்ள வேண்டும். வாக்குக்குப் பணம் என்பதை திமுக தலைமை பார்த்துக் கொள்ளும்’ என்று பேசப்பட்டு இரு கட்சிகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் நேற்று முன் தினம் வரை அங்கே பூத் செலவுகளுக்கான பணம், சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட ஆரம்பகட்ட செலவுகளை காங்கிரஸ் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் முழுமையாக செய்யவில்லை. இந்த குமுறல் திமுக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மூலம் மாசெக்கள், பொறுப்பு அமைச்சர்களுக்கு சொல்லப்பட்டு பொறுப்பு அமைச்சர்கள் மூலம் முதல்வருக்கு கொண்டு செல்லப்பட்டது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் தமிழ்நாட்டில் மொத்தம் 9 பேர். கன்னியாகுமரி விஜய் வசந்த், திருநெல்வேலி ராபர்ட் புரூஸ், விருதுநகர் மாணிக் தாகூர், கரூர் ஜோதிமணி, கடலூர் விஷ்ணு பிரசாத், திருவள்ளூர் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி கோபிநாத், சிவகங்கை கார்த்தி சிதம்பரம், மயிலாடுதுறை சுதா.
இந்த ஒன்பது பேரில் சிவகங்கை கார்த்தி சிதம்பரத்தைப் பற்றி மட்டும்தான் நிறைவான தகவல் திமுக தலைமைக்கு சென்றிருக்கிறது. மற்ற எட்டு காங்கிரஸ் வேட்பாளர்களும் அடிப்படை ஆரம்ப செலவுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதே ரிப்போர்ட்.
இதையடுத்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுடைய மாப்பிள்ளை சபரீசனின் தேர்தல் அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் எட்டு பேருக்கும் போன் போயிருக்கிறது.
ஒவ்வொருவரிடமும் அடிப்படை ஆரம்ப செலவுகள் பற்றி சபரீசன் அலுவலகத்தில் இருந்து கேட்டிருக்கிறார்கள்.
விஜய் வசந்த்திடம் விசாரித்தபோது, ’2019 தேர்தலிலும் நிறைய செலவழிச்சுட்டோம். இடையில் எம்பி இடைத் தேர்தலுக்கும் நிறைய செலவாயிடுச்சு. கடனும் அதிகமாயிடுச்சு. ஆனா நாங்க நிறைய செலவு செய்வோம்னு எதிர்பார்ப்பு அதிகமாயிருக்கு. இந்த காரணங்களாலதான் நிறைய செலவு செய்ய முடியல. ஆனா நிச்சயம் செய்துகொண்டுதான் இருக்கேன். அடுத்தடுத்த தவணைகள்ல அதிகப்படுத்திடுவேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
மாணிக் தாகூரிடம் கேட்டபோது, ‘வரவேண்டிய பணம் ஸ்டக் ஆகிடுச்சு. இப்ப வந்துவிடும். இதுபற்றி பொறுப்பு அமைச்சர்களிட்டயும் சொல்லியிருக்கோம், பணம் வந்தவுடன் அதை திமுக தரப்பிடம் கொடுத்துவிடுவோம்’ என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர் மாவட்ட அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். திடீரென சில நாட்கள் அப்பலோவில் அட்மிட் ஆனது திமுக நிர்வாகிகளிடையே பரபரப்பாக பேசப்பட்டது.
திருநெல்வேலி ராபர்ட் புரூஸ் பற்றி ஏற்கனவே ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் போய்தான் அவர் அங்கே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அனுப்பி வைத்திருக்கிறார்.
கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஏற்கனவே கொஞ்சம் ஆரம்பகட்ட செலவுகளுக்காக திமுக மாசெக்களிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் அது எம்பி தேர்தலுக்கெல்லாம் போதாது என்பதே நிலைமை. அவரிடம் சபரீசன் அலுவலகத்தில் இருந்து பேசியபோது, ‘சில சொத்துகளை விக்க அக்ரிமென்ட் போட்டிருக்கேன். இப்ப வந்துடும்’ என்று சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.
திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்காக சில லோக்கல் காங்கிரஸ் புள்ளிகளும், அவரது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் நண்பர்களும் உதவி செய்துகொண்டிருக்கிறார்கள். அவரும், ‘என்னால் முடிந்ததை நான் செய்துகொண்டிருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
கிருஷ்ணகிரி கோபிநாத்திடம் சபரீசன் அலுவலகத்திடம் இருந்து கேட்டபோது, ‘பெங்களூருவில் பணம் இருக்கிறது. அதை கொண்டுவருவதில் கொஞ்சம் தாமதமாகிறது. இப்போது கையில் இருப்பதை செலவு செய்துகொண்டிருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
மயிலாடுதுறை வேட்பாளர் சுதா தரப்பில், ‘எங்களிடம் காருக்கு டீசல் போட கூட காசில்லை’ என்று சொல்லிவிட்டார்கள்.
ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், சுதா உள்ளிட வேட்பாளர்களுக்காக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் செலவு செய்வதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேசிய காங்கிரஸ் தலைமை கடுமையான பொருளாதார தட்டுப்பாட்டில் இருப்பதால் இன்னமும் தமிழகம் பக்கம் சிவகுமார் கவனம் திருப்பவில்லை என்கிறார்கள். ஆனால் நிச்சயம் பணம் வரும் என்ற தகவல் அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
இதெல்லாம் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் சபரீசன் அலுவலகத்தில் இருந்து தொடர்புகொண்டு கேட்டபோது சொல்லப்பட்ட தகவல்கள்.
இந்த ரிப்போர்ட் அனைத்தும் நேற்று முன் தினம் சேகரிக்கப்பட்டது, நேற்று (ஏப்ரல் 1) முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரத்துக்கு இடையே சென்னையில் இருந்தார். அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞர் அணி அமைத்திருக்கும் வார் ரூமில் ஆய்வு செய்தார். அதன் பின் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேசியது தொடர்பான ரிப்போர்ட் நேற்று முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.
அந்த ரிப்போர்ட்டில்… ‘காங்கிரஸ் வேட்பாளர்கள் பலர் நம்மை ஏமாற்றுகிறார்கள். திமுக வேட்பாளர்களுக்கும் நாம் செலவு செய்யுறோம். காங்கிரசுக்கும் ஏற்கனவே செலவு செஞ்சுக்கிட்டுதான் இருக்கோம், வேட்பாளர்களுக்கு தேவையான அடிப்படை ஆரம்ப செலவுகளுக்கான கோடிகள் கூட செலவழிக்க விருப்பம் இல்லாமல் அவர்கள் சீட் கேட்டுப் பெற்றிருக்கிறார்கள். எப்படியும் திமுக செலவு செய்யும் என்றுதான் அவர்கள் இவ்வாறு இருக்கிறார்கள்.
2019 டிசம்பரில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. அந்த பதவிக் காலம் வரும் டிசம்பரில் முடிகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் வந்த கையோடு அனேகமாக ஜூன், ஜூலையில் அடுத்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்துவிடும். அதற்கும் நாம் பெரிதாக செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு செலவு செய்ய சில மாசெக்கள், பொறுப்பு அமைச்சர்கள் யோசிக்கிறார்கள்’ என்று அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதையடுத்தே ஸ்டாலின் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கு உட்பட்ட மாசெக்கள், பொறுப்பு அமைச்சர்களிடம், பேசியிருக்கிறார். ‘ நமது கூட்டணிக் கட்சி போட்டியிடும் தொகுதிகளைதான் எதிரிகள் குறிவைத்து செயல்படுகிறார்கள். அவர்களுக்கு நாம் கொஞ்சமும் இடம் கொடுத்துவிடக் கூடாது. அதனால் காங்கிரஸ் வேட்பாளர்களின் அடிப்படை ஆரம்ப செலவுகளை செய்யுங்கள். மற்றதை பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதனால் மாசெக்களும் பொறுப்பு அமைச்சர்களும் காங்கிரசுக்காக உழைக்கணும்னா, செலவும் பண்ணனுமா என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இதையறிந்த காங்கிரஸ் வேட்பாளர்கள் திமுகவே எல்லாத்தையும் பாத்துக்கும்’ என்று குஷியில் இருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் : பிரதமர் மோடி
Paiyaa: கார்த்தியின் ஜோடியாக ‘நடிக்க’ வேண்டியது இவர் தானாம்!