வைஃபை ஆன் செய்ததும் சாம்சங் போராட்ட முடிவு குறித்த சிஐடியுவின் பேரவை கூட்ட வீடியோக்களும் போட்டோக்களும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“கடந்த 37 நாட்களாக நடந்து வந்த காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சாம்சங் போராட்டம் முடிவுக்கு வருவதாக இன்று அதிகாரப்பூர்வமாக சிஐடியு அறிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று முன் தினமும் நேற்றும் அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான அரசு குழுவும் சாம்சங் நிர்வாகிகள், சிஐடியு நிர்வாகிகள் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டதாக அமைச்சர் வேலு நேற்று அறிவித்தார்.
ஆனால் சிஐடியு சார்பில் இது குறித்து நேற்று எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சாம்சங் சிஐடியு தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார் இன்று அக்டோபர் 16ஆம் தேதி அதிகாலை ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ’அரசோடு நடத்திய பேச்சுவார்த்தை முடிவுகளை களத்தில் இருக்கும் தொழிற்சங்க தோழர்களிடம் விவாதித்து விளக்கி அதன் பிறகு முடிவு அறிவிக்கப்படும்’ என்று கூறியிருந்தார்.
அதன்படியே இன்று பகல் காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிற்சங்க தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிய கூட்டத்தில், சிஐடியு நிர்வாகிகள் அரசு பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை எடுத்துக் கூறி போராட்டத்தை திரும்பப் பெறுவது என அறிவித்தனர்.
37 நாட்களாக போராடியும் இந்தப் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கையான சிஐடியு தொழிற்சங்க பதிவு குறித்து எந்த முக்கியமான முடிவும் பேச்சுவார்த்தையில் எடுக்கப்படவில்லை. அதாவது சிஐடியு தொழிற்சங்க பதிவு என்ற வார்த்தை கூட அந்த ஒப்பந்தத்தில் இல்லை.
மாறாக, ‘தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமான பதிலுரையை தொழிலாளர் நலத்துறை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்’ என்பதுதான் அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.
சிஐடியு தொழிலாளர்கள் இந்த முடிவை மனமுவந்து எடுக்கவில்லை என்றும் அரசின் அழுத்தம் அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது கொடுக்கப்பட்டு – அந்த அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்த அழுத்தத்தின் பேரில் சிஐடியு இந்த முடிவை எடுக்க தள்ளப்பட்டது என்றும் சிஐடியு நிர்வாகிகள் வட்டாரத்தில் குரல்கள் கேட்கின்றன.
நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாக தொழிற்சங்க பதிவு பற்றிய உறுதியான உத்தரவாதம் எதுவும் இல்லாமல் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது சிஐடியு வட்டாரத்தில் சலசலப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
இது ஒரு பக்கம் என்றால் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அதிருப்தியிலும் நெருடலிலும் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் திமுக தரப்பில் கூட்டணிக் கட்சிகளை சரிப்படுத்தி 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் இதே கூட்டணியை எந்தவிதமான நெருடலும் இல்லாமல் மாற்றிட வேண்டும் என்ற முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
இந்த வகையில்தான் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாநாடுகள் நடத்தப்பட்டு அதில் திமுக பங்கேற்பது என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் உறுதியாக இருப்பதாக தலைவர்கள் பேச, ராகுல் காந்திக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான உறுதியான அண்ணன்- தம்பி உறவு குறித்து கனிமொழி சிலாகித்து பேசினார்.
இதே போல அடுத்தடுத்து கூட்டணி கட்சிகள் சார்பில் மாநாடுகள் நடத்தப்படும் என்றும் அதில் திமுக சார்பில் தலைமை கழக பிரதிநிதி கலந்து கொள்வார் என்றும் கூட்டணி கட்சிகள் வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன.
திமுக ஒரு கூட்டத்தைக் கூட்டி அதில் மற்ற கூட்டணி கட்சிகள் கலந்து கொள்வதை விட கூட்டணி கட்சிகள் சார்பில் கூட்டப்படுகிற மாநாடுகளில் திமுக கலந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு செயல் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அடிப்படையில் அடுத்தடுத்து மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அவரவரின் முதன்மை நோக்கத்தின் அடிப்படையில் மாநாடுகளை ஏற்பாடு செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
உதாரணத்துக்கு மத்திய பாஜக அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான மாநாட்டை முஸ்லிம் அல்லது மமக சார்பில் ஏற்பாடு செய்து, அதில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்வது. கொமதேக சார்பில் சிறுகுறுதொழில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது, இப்படியாக திமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றின் சார்பிலும் ஒரு மாநாடு, அதில் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதியே கூட கலந்துகொண்டு கூட்டணியை உறுதியாக வைத்திருக்க செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.
இதன் மூலம் கூட்டணிக்குள் இருக்கிற பல்வேறு அதிருப்திகளை தேர்தலுக்குள் சரி செய்ய முடியும் என்று திமுக நம்புகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
சேலம் அக்கா, தம்பி கொலை… கைது செய்யப்பட்ட தனசேகரனுக்கு நீதிமன்ற காவல்!