டிஜிட்டல் திண்ணை: பெயருக்குக் கூட மதிப்பில்லையா? கூட்டணிக்குள் ‘குமரி’ புகைச்சல்! ஸ்டாலின் வைக்கும் ட்விஸ்ட்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் குமரியில் நடந்த வள்ளுவர் சிலை வெள்ளி விழா புகைப்படங்களும் வீடியோக்களும் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“கடந்த 30, 31 தேதிகளில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக குமரி முனையில் இருக்கும் விவேகானந்த மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணைக் கவரும் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவும் நடந்தது.

இந்த விழாவை மையமாக வைத்துதான் குமரி மாவட்ட அரசியலிலும், திமுகவின் கூட்டணியிலும் கூட புகைச்சல்கள் கிளம்பின. இந்த விழாவுக்காக தமிழக அரசின் சார்பில் குமரி மாவட்டம் தயாரித்த அழைப்பிதழில் குமரியின் மக்கள் பிரதிகள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை உள்ளடக்கிய கன்னியாகுமரியின் சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவைச் சேர்ந்த தளவாய் சுந்தரம். மேலும்  மாவட்டத்திலுள்ள மற்ற சட்டமன்ற உறுப்பினர்களான நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, பத்மநாபபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், குளச்சல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்,  விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை,  கிள்ளியூர் காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேஸ்குமார், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் என எந்த மக்கள் பிரதிநிதிகள் பெயரும் இந்த விழா அழைப்பிதழில் இடம்பெறவில்லை.

இதுகுறித்து  கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், ‘விழாவில் பங்கேற்கிற சிறப்பு விருந்தினர்கள், அதிகாரிகள், கவிஞர்கள் பெயரெல்லாம் அழைப்பிதழில் இருக்கிறது. ஆனால் அரசு விழாவுக்கே உரிய மக்கள் பிரதிநிதிகளின் பெயர் ஏன் இடம்பெறவில்லை? இது அரசு விழாவா, அல்லது திமுகவின் விழாவா?’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

தளவாய் சுந்தரம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. என்பதால் வெளிப்படையாக இதை சொல்லிவிட்டார். ஆனால் குமரி மாவட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்பி என வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியினரோ கூட்டணி தர்மப்படி இதுபற்றி திமுகவை எதிர்த்து பேச முடியாமல் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் சொல்லியிருக்கிறார்கள். ’காங்கிரஸ் பலமாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே நமக்கு இந்த நிலைமையா?’ என்றும் குமுறியுள்ளனர். மேலும் அரசு விழாவில் மக்கள் பிரதிநிதிகள் பெயர் இடம்பெறாதது குறித்து  கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரிடமும் கூட பேசியிருக்கிறார்கள்.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை போல காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் மன்மோகன் சிங் இறந்த துக்கம் அனுசரிப்பதால் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்கவில்லை’ என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து முதல்வரிடமும் தெரிவித்துவிட்டதாக கூறினார்.

மன்மோகன் சிங் மறைவையடுத்துதான் குமரியில் ஜனவரி 1 வரை நடைபெற இருந்த மூன்று நாள் விழா இரு நாள் விழாவாக குறைக்கப்பட்டது. பேச்சு அரங்கங்கள், பட்டிமன்றங்கள் இடம்பெற்றதே தவிர கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸாரின் வருத்தத்தை உணர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்  திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறைக்கு செல்லும் மூன்று படகுகளை அறிமுகப்படுத்தினார். அவற்றுக்கு காமராஜர், நேசமணி,  ஜி.யு.போப் என்று பெயரும் சூட்டினார். இதில் காங்கிரசாருக்கு கொஞ்சம்  நிம்மதி.

அதுமட்டுமல்ல… வரும் ஜனவரி 7 ஆம் தேதி மறைந்த மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரின் திருவுருவப் படங்களை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திறந்து வைத்து நினைவுரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியினருக்கு ஏற்பட்டிருந்த கசப்புணர்வு போய்விடும் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில்.

கூட்டணி என்பது குமரி கண்ணாடிப் பாலம் போலத்தான்… அதில் விரிசல் விழாமல் ஸ்டாலின் பார்த்துக் கொள்வாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது” என்கிற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புத்தாண்டு : கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

விடாமுயற்சி.. விட மாட்டாங்க போல : அப்டேட் குமாரு

தமிழ்நாட்டில் 13 புதிய நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாகிறது!

ரஜினியுடன் ஓ.பன்னீர் திடீர் சந்திப்பு ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share