வைஃபை ஆன் செய்ததும் கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கொடுத்த பேட்டி வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை முழுதாக பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“சில நாட்களாகவே விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா கொடுத்த பேட்டிகளில் திமுக- விசிக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துவது போன்ற தொனி இருந்தது. “நான்கு வருடங்களுக்கு முன் சினிமாவில் இருந்து வந்தவர் துணை முதல்வர் ஆகும் போது 40 வருடங்களாக அரசியலில் இருக்கும் திருமாவளவன் துணை முதல்வராக கூடாதா?” என்ற அவரது கேள்வி நேரடியாக உதயநிதியை விமர்சிப்பதாக இருந்தது. இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா சத்தியமங்கலத்தில் இருந்தபடியே விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் போதிய அரசியல் புரிதல் இன்றி பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். இந்த பேட்டிக்கு முன்பாகவே திருமாவுக்கு இந்தத் தகவல் தனிப்பட்ட முறையிலும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆதவ் அர்ஜுனா, ‘நான் என் தலைவரின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறேன். எங்களது எதிர்கால திட்டத்தைதான் நான் கூறினேன். எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’ என்று தெரிவித்தார்.
இதனால் திமுகவினர் மேலும் கோபமடைந்தனர். இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 25) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்.
’திமுக-விசிக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய பிறகு முடிவெடுக்கப்படும். இது உட்கட்சி விவகாரம் என்பதால் உயர் நிலைக் கூட்டத்தில் பேசப்படும்’ என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் விசிகவினரின் சமூக தளப் பக்கங்களில் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவு தெரிவித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே ஆதவ் அர்ஜுனாவின் கருத்து இந்த நேரத்தில் சரியில்லை என விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், சிந்தனைச் செல்வன், துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கருத்து வெளியிட்டு வந்தனர்.
ஆனால் விசிகவின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் சமூக தளங்களில் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
‘தொண்டர்களின் கருத்தைதான் ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார் என்று பதிவிட்டுள்ள பலரும், ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்த கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரை விமர்சிக்கவும் தயங்கவில்லை,.
நேற்று முதல் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவான இந்த சமூகதளப் பதிவுகள் அதிகமாக பரவி வருவதை அறிந்த விசிக மூத்த நிர்வாகிகள் இதுகுறித்து கட்சித் தலைவர் திருமாவிடம் எடுத்துச் சென்றுள்ளனர்.
‘இதெல்லாம் சரியில்லை… கட்சியின் பாக முகவர் கூட்டம் மற்றும் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடத்தியபோது கட்சி சமூக தள செயல்பாட்டாளர்களின் சமூக தள முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து டேட்டாக்களும் ஆதவ் அர்ஜுனாவிடம் உள்ளன.
அவர்களில் தனக்கு ஆதரவான சிலரிடம், ’தலைவரின் கருத்தையே நான் சொல்கிறேன். நானாக எதையும் சொல்லவில்லை’ என சொல்லி இப்படியான பதிவுகளை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா இட வைக்கிறார்.
தன்மீது ஒருவேளை கட்சி நடவடிக்கை எடுக்கும்படி உயர் நிலை குழுவில் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தும் நிலை ஏற்பட்டால்…. கட்சியில் இடை நிலை நிர்வாகிகளின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதை ஆவணப்படுத்தவே ஆதவ் அர்ஜுனா இப்படி க்ளவராக செயல்படுகிறார். கட்சிக்குள்ளேயே அவர் இன்னொரு கட்சி நடத்துவது மாதிரி இருக்கிறது’ என்று விசிகவின் மூத்த துணைப் பொதுச் செயலாளர்கள் திருமாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில்தான் இந்த விவகாரம் குறித்து ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் ஆலோசித்த திருமா, ‘அக்டோபர் 2 ஆம் தேதி மாநாட்டு வேலையில் இருந்து நாம் திசை திரும்ப வேண்டாம், மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டு இதுபற்றி விவாதிப்போம்’ என்று சொல்லியிருக்கிறார்.
இருந்தாலும் ஆதவ் அர்ஜுனா கட்சியின் டேட்டாக்களை வைத்துக்கொண்டு இப்படி செயல்பட்டு வருவதாக கூறும் மூத்த நிர்வாகிகள்… ஆதவ் அர்ஜுனாவின் பழைய டேட்டாக்கள், அவருக்கும் அவரது மாமனார் லாட்டரி மார்ட்டினுக்கும் இடையேயான இப்போதைய உறவு நிலை எப்படி இருக்கிறது என்பது உள்ளிட்ட பல விஷயங்களைத் திரட்டி வருகிறார்கள்.
இன்றைய நிலையில் விசிகவில் ஆதவ் அர்ஜுனா மூலம் கண்ணுக்குத் தெரியாத ஒரு பிளவுக்கான கோடு உருவாகியிருக்கிறது. இதை திருமா எப்படி கையாளப் போகிறார் என்பதை திமுகவும் கவனித்துக் கொண்டே இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எஸ்.பி.பி பெயரில் சாலை : ஸ்டாலின் உத்தரவு!
’இது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி’ : மேயர் பிரியாவின் தபேதார் மாதவி வேதனை!