டிஜிட்டல் திண்ணை: முதல்வர் குடும்பம் அமைச்சர்கள்… டெல்லியின் அடுத்த திட்டம்!

Published On:

| By Selvam

வைஃபை ஆன் செய்ததும் குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய 19 பக்க கடிதம் இன்பாக்சில் வந்து விழுந்திருந்தது.

அது தொடர்பான தகவல்களைப் படித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி 19 பக்கங்களில் குடியரசுத் தலைவர் முர்முவுக்கு அடுக்கடுக்கான புகார்களை கடிதம் மூலமாக ஜூலை 8 ஆம் தேதி அனுப்பியிருக்கிறார்.

2021 செப்டம்பரில் ஆர்.என்.ரவி ஆளுநராக தமிழ்நாட்டுக்கு வந்ததில் இருந்து இப்போது வரையிலான அவரது செயல்பாடுகள் இந்திய அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிராக இருப்பதை வரிசைப்படுத்தியுள்ள முதல்வர் ஸ்டாலின்… அவர் ஆளுநர் பதவிக்கு பொருத்தமானவர் அல்ல என்பதைக் குறிப்பிட்டு இதுகுறித்து உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்று குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

delhi next move stalin report

ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதிமுகவோ இது பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி என்று தெரிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ முதல்வரின் இந்த கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று கோவையில் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநரை நியமித்த குடியரசுத் தலைவர் கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் வேட்பாளராக முன்மொழியப்பட்டு வெற்றிபெற்றவர். அப்படியிருக்க அவர் எப்படி ஆளுநருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் என்ற கேள்வி இயல்பாகவே சமூக தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தெரியாதா? நிச்சயமாக தெரியும். ஆனாலும் எதிர்காலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில்…அதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துவதற்கான முகாந்திரங்களை ஏற்படுத்துவதற்காகவே இந்த கடிதம் என்கிறார்கள் ஆளுந்தரப்பில்.

அதனால்தான் 2021 செப்டம்பர் மாதம் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றது முதல் அவரது நடவடிக்கைகளைத் தொகுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் முதலமைச்சர்.
திமுக வட்டாரங்களில் இதுகுறித்து பேசும்போது, ‘குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மீது நாங்கள் வெளிப்படையாக அரசியல் விமர்சனங்கள் வைக்க முடியாது. ஆனாலும் நடந்த சில சம்பவங்களைப் பட்டியலிட முடியும்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடர்ந்து திமுக சார்பில் குடியரசுத் தலைவரிடம் புகார் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 2022 நவம்பர் மாதமே திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கையெழுத்திட்ட ஆளுநருக்கு எதிரான மனுவை குடியரசுத் தலைவரிடம் நேரில் கொடுக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் குடியரசுத் தலைவரை சந்திக்க முடியவில்லை. நவம்பர் 2 ஆம் தேதியிட்ட கடிதத்தை நவம்பர் 8 ஆம் தேதி குடியரசுத் தலைவரின் அலுவலகத்தில் கொடுத்தோம்.

அதற்குப் பின் 2023 ஜனவரியில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது சில வரிகளை படிக்காமலும் சில வரிகளை மாற்றியும் உரையை வாசித்தார் ஆளுநர். அப்போது ஏற்பட்ட சம்பவத்தால் ஆளுநரே அவையில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையிலான திமுக குழுவினர் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

delhi next move stalin report

 

கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி கிண்டியில் கட்டப்பட்ட பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க முதலில் குடியரசுத் தலைவர் ஒப்புக் கொண்டார். இதற்காக முதல்வர் டெல்லி சென்று குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பினார். ஆனால் செர்பியா நாட்டுப் பயணத்தில் இருந்ததால் அந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் வர முடியவில்லை என்று தகவல் வந்தது. அவர் வருவதற்காகவே திறப்பு விழாவை ஒத்தி வைத்தனர். ஆனபோதும் அவரிடம் இருந்து தகவல் வராததால் 15 ஆம் தேதி ஸ்டாலினே திறந்து வைத்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலின்போது பாஜக பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணான திரௌபதி முர்முவை நிறுத்தியது. அப்போது பாஜக சார்பில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் பாஜக தலைமை திமுக டெல்லி நிர்வாகிகள் மூலம் சில தகவல்களை அனுப்பியது. ‘நீங்கள் சமூக நீதிக்காக போராடும் கட்சி… இந்தியாவிலேயே முதல் முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நாங்கள் குடியரசுத் தலைவராக நிறுத்துகிறோம். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிராமணரான யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்தியிருக்கிறார்கள். மற்ற அரசியல் களத்தில் நீங்கள் எங்களை எதிர்த்து நில்லுங்கள். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் எங்கள் வேட்பாளர் முர்முவை ஆதரியுங்கள்’ என்று ஸ்டாலினுக்கு பாஜக தேசிய தலைமை கோரிக்கை அனுப்பியது.

திமுகவிலேயே சிலர் கூட, ‘சமூக நீதி என்ற அடிப்படையில் நாம் முர்முவை ஆதரிப்போம். அதேநேரம் தொடர்ந்து பாஜகவை எதிர்ப்போம்’ என்று தலைவரிடம் வலியுறுத்தினார்கள். ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் நம் கூட்டணிக் கட்சிகளை விட்டுக் கொடுக்க முடியாது. அது வேறு விதமான தோற்றத்தை ஏற்படுத்திவிடும்’ என்று மறுத்துவிட்டார்.

இப்படிப்பட்ட பின்னணியில்தான் குடியரசுத் தலைவருக்கு 19 பக்க கடிதத்தை ஆளுநர் மீது குற்றம் சாட்டி எழுதியிருக்கிறார் திமுக தலைவர்’ என்கிறார்கள்.

அண்ணாமலை சொல்வது போல் இந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார் என்றே வைத்துக் கொண்டாலும் ஆர்.என்.ரவி என்ற ஆளுநரின் செயல்பாடுகள் பற்றி இந்தியா முழுதும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த கடிதம்.

தேசிய அளவில் கபில் சிபல் போன்ற மூத்த வழக்கறிஞர்கள், ‘இந்த கடிதத்தை எழுதுவதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு உரிமை இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்.

இது ஒருபக்கம் என்றால் ஆளுநர் டெல்லியில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தமிழ்நாடு உளவுத்துறை கழுகுக் கண்களோடு உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. ஜூலை 8 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஏற்கனவே போட்ட ஷெட்யூல்படி வரும் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில்தான் இருக்கிறார்.

delhi next move stalin report

இதற்கு முன்பும் அடிக்கடி டெல்லி சென்று வந்திருக்கிறார் ஆளுநர். பொதுவாகவே அவர் டெல்லி செல்வதை ஒட்டி தமிழ்நாட்டு ஊடகங்கள் முக்கியச் செய்திகளாக விவாதிப்பார்கள். ஆனால் இதற்கு முந்தைய டெல்லி பயணங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை விட தனது பர்சனல் நிகழ்ச்சிகளையும் அதிகமாக வைத்திருப்பார். தனது ஐபிஎஸ் நண்பர்களின் வீட்டு விசேஷங்களை தவிர்க்க மாட்டார். விசேஷ தினம் அன்று செல்ல முடியாவிட்டாலும், டெல்லி செல்லும்போது அவர்களின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்துவிட்டு வருவார். பெரும்பாலும் தன் காரை டெல்லியில் தானே தான் ஓட்டிச் செல்வார் ஆளுநர். தேவைப்பட்டால்தான் டிரைவர் வைத்துக் கொள்வார்.

இப்படிப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த முறை டெல்லி சென்றிருப்பதில் பல அதிகாரபூர்வ சந்திப்புகள் இருப்பதாக தமிழக அரசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உள்துறை அமைச்சக அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளையும் இம்முறை சந்திக்கிறார் ஆளுநர்.

திரும்ப சென்னை வரும்போது தமிழ்நாடு அரசுக்கு எதிராக முதலமைச்சர், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான, சில அமைச்சர்களுக்கு எதிரான அடுத்த கட்ட பாய்ச்சல் திட்டம் இருக்கலாம் என்பதுதான் முதல்வருக்கு சொல்லப்பட்டிருக்கும் தகவல்.

19 பக்க கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு முதல்வர் அனுப்பியிருக்கும் நிலையில்… அதற்கு மறுமொழி கொடுப்பதற்காக டெல்லியில் இருந்தபடியே ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவரை சந்திக்க முயற்சிப்பதாகவும் டெல்லி வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். ஆளுநர் ரவியின் இந்த டெல்லி பயணம் முடிந்ததும் தமிழ்நாட்டு அரசியலில் அடுத்த கட்ட திருப்பங்கள் இருக்கும் என்பதே இன்றைய நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

மாமன்னன் பார்த்த நரிக்குறவர் இன மக்கள்!

இந்தியாவில் முதல்முறை: AI தொழில்நுட்பத்தில் கலக்கும் செய்தி வாசிப்பாளர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share