டிஜிட்டல் திண்ணை: ஏர் ஷோ இறப்புகள்… ஸ்டாலின் நடத்திய விசாரணை… அதிகாரிகள் மீது ஆக்‌ஷன்!

Published On:

| By Selvam

வைஃபை ஆன் செய்ததும் சென்னை மெரினா ஏர் ஷோ ஜன சமுத்திரத்தில் நடந்த உயிரிழப்புகள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்களின் அறிக்கைகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழாவை ஒட்டி அக்டோபர் ஆறாம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு அரசோடு இணைந்து ஏர் ஷோவை நடத்தியது விமானப்படை.

இந்த ஏர் ஷோவில் 75 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கலந்து கொண்டு சென்னை மக்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தன. இது போன்ற ஏர் ஷோ நிகழ்ச்சிகளால், விமானப் படையில் சேர்வதற்கான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரிக்கிறது.

இந்த நிலையில், ஏர் ஷோ நிகழ்ச்சியை காண திரண்ட கூட்டத்தில் வெப்பம் தாங்காமல் ஐந்து பேர் உயிரிழந்த செய்தி தான் அரசியலாக உருவெடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதை திமுக அரசின் நிர்வாகத் தோல்வி என்று கண்டித்திருக்கிறார். கூட்டணி கட்சி தலைவரான திருமாவளவன், இது பற்றி உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், விமானப்படை துறையினருக்கும் தமிழ்நாடு போலீசாருக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருந்ததா என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூகத் தளங்களிலும் பொதுமக்கள் இந்த நிகழ்வுக்கு அரசு சார்பில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் போதுமானவையாக இல்லை என்ற வேதனையை கோபத்தோடு வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து சீனியர் அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் விசாரித்துள்ளார்.

அப்போது, ‘இந்த ஏர் ஷோ நிகழ்ச்சிக்காக காலை ஏழு மணி முதலே சென்னை மற்றும் சென்னை சுற்றுப்புற மாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் மெரினா கடற்கரைக்கு வர ஆரம்பித்துவிட்டனர். அதாவது நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் முன்பாகவே அவர்கள் மெரினா கடற்கரைக்கு வந்து விட்டனர்.

லட்சக்கணக்கான பேர் நான்கு முதல் ஐந்து மணி நேரத்தில் கடற்கரைக்கு உள்ளே வந்தனர். ஆனால் நிகழ்ச்சி ஒரு மணிக்கு முடிந்ததும் நான்கைந்து மணி நேரங்களில் உள்ளே வந்தவர்கள் ஒரு மணி நேரத்துக்குள்ளேயே வெளியே செல்ல முயன்றார்கள். அதனால்தான் இவ்வளவு போக்குவரத்து நெருக்கடியும் மக்கள் அவதிப்படும்படியான நிலையும் ஏற்பட்டது.

அதே நேரம் காமராஜர் சாலை உள்ளிட்ட அனைத்து அருகே உள்ள சாலைகளிலும் வாகன போக்குவரத்தை தடை செய்ததால் மக்கள் நடந்தே வெளியேற ஆரம்பித்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் நாம் தவிர்த்தோம்.

ஆனால் கடுமையான வெயில் காரணமாக சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களில் 100 பேருக்கும் குறைவானவர்கள் வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர்’ என்று முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் ஏர் ஷோ நிகழ்ச்சியின் போது மெரினா கடற்கரையில் கூடுகிற மக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து தருவதில் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் சென்னை மாநகர காவல் துறையும் இன்னும் பல நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

கடுமையான வெயில் அடித்த நிலையில்… மெரினா கடற்கரையில் கூடிய மக்களுக்கு ஆங்காங்கே நிழற்குடைகளை அமைத்திருக்கலாம், தண்ணீர் பந்தல்களை அமைத்திருக்கலாம்… இதெல்லாம் இல்லாததால் மக்கள் அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று இன்னொரு ரிப்போர்ட்டும் முதல்வருக்கு சென்றிருக்கிறது.

மேலும், இந்திய அளவில் பேசப்படும் வகையில் இந்த நிர்வாக குளறுபடிகள் இருப்பதாகவும் முதல்வருக்கு தகவல்கள் சென்றுள்ளன.

எதிர்க்கட்சிகள் கூட்டணி கட்சிகள் தாண்டி முதலமைச்சரின் தங்கையும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, ‘சமாளிக்க முடியாத கூட்டங்கள் என்றால் கூடுவதை தவிர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டதும் முதல்வரை வருத்தமடைய செய்திருக்கிறது.

இதற்கிடையில் தான் உள்துறை செயலாளர் மூலம் மெரினா நிகழ்வு குறித்து டிஜிபியிடம் விசாரணை அறிக்கை கேட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

 

இந்த விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், சென்னை மாநகர போலீஸ் ஆணையாளர் அருண் உள்ளிட்ட சில அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் இருக்கலாம் என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.

இந்த நிலையில், இவ்வளவு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஏர் ஷோ நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் வரவில்லை என்ற கேள்வியும் அதிகாரிகள் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏர் ஷோ நடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆளுநர் ரவி தென்காசி மாவட்டத்தில் போதையில்லா தென்காசி என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘படத்தை ஜட்ஜ் பண்ணாதீங்க..!’ – ஜூனியர் என்டிஆர்!

கலைஞர் நூற்றாண்டு பூங்கா: டிக்கெட் எவ்வளவு? முழு விவரம் இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel