வைஃபை ஆன் செய்ததும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய செய்தியும் அதை ஒட்டிய பல்வேறு நகர்வுகளும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“சரியாக 471 நாள் சிறைவாசத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) ஜாமீன் அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்பான வாதங்கள் நிறைவடைந்த பிறகு உத்தரவு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் திடீரென ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது உச்ச நீதிமன்றம்.
அப்போது செந்தில்பாலாஜி மீதான பணப்பரிமாற்ற வழக்குக்கு அடிப்படையாக இருக்கும் மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்த மூன்று வழக்குகள் குறித்து அமலாக்கத்துறையிடம் உச்சநீதிமன்றம் சில விளக்கங்களை கேட்டது.
அதில் முதல் வழக்கில் ஆயிரக்கணக்கான பேர் விசாரிக்கப்பட வேண்டிய நிலையில் அந்த வழக்குகள் விசாரணை முடிந்து தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றால் நீண்ட வருடங்கள் பிடிக்குமே என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் முழுமையான உரிய பதில் தராத நிலையில் தான்… இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சட்டரீதியாக செந்தில் பாலாஜிக்கும் திமுகவுக்கும் இது மிகப்பெரிய வெற்றி என்றால் அரசியல் ரீதியாகவும் இதன் தாக்கம் பெரிதாக இருக்கிறது.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா நந்தனம் ஒய் எம் சி ஏ திடலில் நடைபெற்று முடிந்த பிறகு அன்று இரவு முதலமைச்சர் வீட்டில் அமைச்சரவை மாற்றம் பற்றிய ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், ‘உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது எல்லாருமே பேச ஆரம்பித்து விட்டார்கள். மேலும் அமைச்சரவை மாற்றம் என்று எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இரண்டையும் சீக்கிரம் செய்து விடலாமே’ என முதலமைச்சரிடம் கேட்டிருக்கிறார். அப்போது உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில், ‘பாலாஜி வந்துவிடட்டுமே’ என்பது தான். இதன்பிறகு துரைமுருகன் எதுவும் பேசவில்லையாம்.
இதுபற்றி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
முதல்வரின் இந்த கருத்தைக் குறிப்பிட்டு, ’செந்தில் பாலாஜி எப்ப வெளிய வர்றது? எப்ப அமைச்சரவை மாற்றம் நடக்கிறது?’ என்று சில நிர்வாகிகளே தங்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விமர்சித்தும் வந்தார்கள்.
ஆனால் ஆகஸ்ட் 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணை விவரங்களை தெரிந்து கொண்ட பிறகு விரைவில் செந்தில் பாலாஜி வெளியே வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தான் அந்த நிகழ்வுகளை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார் ஸ்டாலின்.
செந்தில் பாலாஜி சிறைக்கு சென்ற பிறகு அவரிடம் இருந்த மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமியிடம் அளிக்கப்பட்டது. அவர் வகித்து வந்த மின்சார துறை தங்கம் தென்னரசுவிடம் அளிக்கப்பட்டது.
சமீப நாட்களாக அமைச்சர் தங்கம் தென்னரசு மின்சார துறையின் பணிச்சுமை அதிகமாக இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக ஸ்டாலினே வெளிப்படையாக அமைச்சர் துரைமுருகனிடம் தெரிவித்திருந்தார். மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து சர்ச்சைகள் எதுவும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எனவே அந்தத் துறை முத்துசாமியிடமே தொடரக்கூடும்… அதே நேரம் செந்தில் பாலாஜி ஏற்கனவே வகித்து வந்த மின்சாரத்துறை அவருக்கு நிச்சயமாக மீண்டும் வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது. கூடுதலாக ஒரு முக்கியத் துறையை தரவேண்டும் என்று முதல்வர் குடும்பத்தினரிடம் ஆலோசித்து வருகின்றாராம்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் விடுதலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக தள பக்கத்தில், ‘ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில் அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதி செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையில் வைத்து விடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்… உன் தியாகம் பெரிது. உறுதி அதனினும் பெரிது’ என்று முக்கியமான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அதாவது எமர்ஜென்சிக்கு பிறகான கடந்த 50 ஆண்டு கால திமுக வரலாற்றில்… எமர்ஜென்சி கால சிறைவாசமே திமுகவினரின் தியாகத்துக்கு முக்கியமான சான்றிதழாக அமைந்திருந்தது.
இப்போது முதல்வர் ஸ்டாலின் எமர்ஜென்சியில் கூட இத்தனை நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் செந்தில் பாலாஜிக்கு எமர்ஜென்சி தியாகத்தை விட பெரிய தியாகம் என்ற பாராட்டை சூட்டி இருக்கிறார். அதைவிட உன் உறுதி பெரிது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது செந்தில் பாலாஜியை கைது செய்து அவர் தொடர்பான பல்வேறு இடங்களில் ரெய்டு செய்து, அவரிடம் வாக்குமூலம் பெற்று… அதன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பத்தினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை கடுமையாக முயற்சி செய்தது. ஆனால் அதற்கு செந்தில் பாலாஜி உடன்படவில்லை என்பதைத்தான் அதனினும் உன் உறுதி பெரிது என குறிப்பிட்டாராம் ஸ்டாலின்.
இதன் மூலம் செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த முக்கியத்துவத்தை விட அதிக முக்கியத்துவம் அமைச்சரவையிலும் கட்சியிலும் அளிக்கப்படும் என்பதுதான் ஸ்டாலினுடைய செய்திக்குள் இருக்கும் செய்தி என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்களில்.
மேலும் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக்கப்படுவார் என்று சில வாரங்களாக உறுதியாக தகவல்கள் வெளிவந்த நிலையில்… அது தொடர்ந்து தள்ளிப்போனதற்கும் தற்போது ஒரு முடிவு கட்டப்படும் என்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வந்த பிறகு… உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, அமைச்சரவை மாற்றம் இரண்டும் ஒரு சேர நடக்கும்.
உதயநிதி தனக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கும்போது தனக்கு வேண்டப்பட்ட இருவர் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருப்பதாகவும் இந்த அடிப்படையில் அந்த இரண்டு இளைஞர்கள் அமைச்சர்கள் ஆக்கப்படுவார்கள் என்றும் அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.
ஏற்கனவே விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா துணை முதல்வர் பதவி குறித்து வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். இதைப் பார்த்து முதல்வர் ஸ்டாலின், உதயநிதி இருவருமே கோபம் அடைந்தனர். இந்த நிலையில் செந்தில்பாலாஜியின் ஜாமீன் விடுதலை, அதை ஒட்டிய அமைச்சரவை மாற்றம், உதயநிதிக்கு துணை முதல்வர் என அடுத்தடுத்து திமுக பிசியாக இருக்கிறது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்கள் என இலக்கு வைத்திருக்கிறார் ஸ்டாலின். அதற்கு செந்தில்பாலாஜியின் களப் பணிகளும் நிச்சயம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறார். மேலும் செந்தில்பாலாஜி மீது முதல்வரின் குடும்பத்தினரும் மிகுந்த நம்பிக்கையும் நல்ல அபிப்ராயமும் வைத்திருக்கிறார்கள். செந்தில்பாலாஜி ஜாமீன் விடுதலை மூலம் திமுகவின் வேகம் அதிகரிக்கும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்களில்” என்ற மெசேஜூக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலை வாங்கித் தருவதாக பணமோசடி : புகார் முதல் தீர்ப்பு வரை -செந்தில் பாலாஜி வழக்கின் டைம்லைன்!
கல்யாணம் ஆன பிறகு எனக்கு வங்கி கணக்கு கூட இல்லை – ஷாவிடத்தில் ஜெயம் ரவி சொன்ன தகவல்!
தனக்கு தனக்குன்னா டுபுக்கும் டபக்கு டபக்குன்னு ஆடுமாம்..என்ன கேவலமான கூட்டம்!..
வருங்காலமும் மக்களும் இந்த கூத்துக்களை விழி கொட்டாமல் பார்த்து கொண்டே இருக்கிறார்கள் என மறந்து விடவே கூடாது..🥱🥱🥱🥱🥱🥱