டிஜிட்டல் திண்ணை: திமுக நடத்தும் சாதி வாரி கணக்கெடுப்பு!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் திமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் சிலரிடம் இருந்து சில மெசேஜ்கள் இன்பாக்சில் வந்திருந்திருந்தன. அவற்றைப் பார்த்தபடியே சில குரல் அழைப்புகளை மேற்கொண்டது வாட்ஸ் அப். அதன் பின் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“பிகார் மாநிலத்தில் அண்மையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினார் அம்மாநிலத்தை ஆளும் முதல்வர் நிதிஷ்குமார். அந்த கணக்கெடுப்பு விவரங்களை சட்டமன்றத்தில் வெளியிட்டு, இட ஒதுக்கீடு குறித்த புதிய கணக்கீடுகளையும் அறிவித்துள்ளார். அரசிதழிலும் வெளியிட்டிருக்கிறார். இதையடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணியில் இல்லாத பாமக உள்ளிட்ட பல கட்சிகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மாநில அரசு ரீதியாக இல்லாமல் திமுக கட்சி ரீதியாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்திக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் பூத் ஏஜெண்டுகள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் பேசியபோது சில தகவல்கள் கிடைத்தன. ‘தமிழ்நாட்டின் அனைத்து மண்டலங்களிலும் பாகப் பொறுப்பாளார்கள் மாநாட்டை நடத்தி முடித்துவிட்டார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்.

ஆறு நாட்கள் என்ன செய்தார் ஸ்டாலின்?

டெல்டா மண்டலத்தில் திருச்சியில் தொடங்கி, தென் மண்டலத்துக்கு ராமநாதபுரம், மேற்கு மண்டலத்துக்கு காங்கேயம், வடக்கு மண்டலத்துக்கு திருவண்ணாமலை, சென்னை மண்டலத்துக்கு திருவள்ளூரில் என பாகப் பொறுப்பாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளன. தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் கமிட்டி அமைக்கும் வேலைகள் முடிந்து பூத் கமிட்டி உறுப்பினர்களை பூத் கமிட்டி தலைவர்கள் கடுமையாக வேலை வாங்கி வருகிறார்கள்.

திமுகவின் பூத் கமிட்டி படி ஒவ்வொரு 100 வாக்காளர்களுக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த ஒருவர் தேர்தல் வரை தனக்கென ஒதுக்கப்பட்ட வாக்காளர்களை தொடர்ந்து சந்தித்து வரவேண்டும். அவர்களின் நிறைகுறைகளை கேட்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் பார்வையாளர்களுக்கு வாராவாரம் ரிப்போர்ட் தரவேண்டும்.

இப்போது சில நாட்களாக சென்னையில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஒரு புது அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கும் ஒரு பெரிய சைஸ் லெட்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி சாயம் இல்லாத அந்த லெட்ஜரில், ‘குடும்ப உறுப்பினர் விவரங்கள்’ என்று தலைப்பிட்டு எட்டு விதமான ‘காலம்’ இடம்பெற்றுள்ளது. அது ஒவ்வொன்றையும் ஃபில்லப் செய்ய வேண்டும்.

பெயர், பாலினம், வயது, உறவு முறை, கல்வித் தகுதி, தொழில், வாக்காளர் அடையாள அட்டை எண், தொலைப்பேசி எண் ஆகிய தலைப்புகள் இடம்பெற்றிருக்க, கடைசி தலைப்பு, ‘குறிப்பு’ என்று இடம்பெற்றுள்ளது.
அந்த குறிப்பு என்பதன் கீழே என்ன எழுத வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வாக்காளரின் சாதி என்ன என்று கேட்டு எழுத வேண்டும். இதுதான் எங்களுக்கு இடப்பட்டிருக்கிற கட்டளை.

கிராம அளவிலே ஒவ்வொருவரின் சாதியையும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஒருவரின் சாதியை கிராமங்களில் கண்டுபிடிக்க முடியாத சந்தர்ப்பம் அரிதாகத்தான் இருக்கும். ஆனால் சென்னை மாநகரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சென்று அவர்களின் சாதியை கேட்கச் சொல்லியிருக்கிறார்கள்.

பிராமணர்கள் என்றாலோ இஸ்லாமியர்கள் என்றாலோ எளிதில் கண்டுபிடித்துவிடுகிறோம். மற்ற எவரின் சாதியையும் பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் உங்கள் சாதி என்ன என்று தயங்கியபடியே கேட்கிறோம். சிலர் அதற்கு உடனே பதில் சொல்லிவிடுகிறார்கள். ஆனால் பலர் பதில் சொல்லுவதில்லை. கட்சியில் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்லி அவர்களிடம் சாதி விவரங்களை வாங்குவது சென்னை போன்ற மாநகரங்களில் பெரும்பாடாக உள்ளது.

ஒருவேளை என்ன சாதி என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் எஃப்.சி, பிசி, எம்.பி.சி, எஸ்,சி. போன்ற பொது அடையாளங்களையாவது பெற முயற்சி செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அரசாங்கம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும்போது இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பதற்கு அரசு அதிகாரிகளுக்கும் பிரச்சினை இல்லை, சொல்வதிலே மக்களுக்கும் தயக்கம் இல்லை. ஆனால் கட்சி ரீதியாக இப்படி அறிவிக்கப்படாத சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தச் சொல்லியிருக்கிறார்கள்’ என்று சென்னை மாநகர திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் புலம்பித் தள்ளுகிறார்கள்.

இதுகுறித்து வட்டச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் மூலமாக அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கும், தேர்தல் பார்வையாளர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற உத்தேசமான கணக்கை இதன் மூலம் அறிந்துகொள்ள தலைமை விரும்புகிறது. இந்த கணக்கின் அடிப்படையில் வேட்பாளர் தேர்வும் வேறு சில பணிகளையும் செய்ய தலைமை முடிவெடுத்திருக்கிறது. அதனால் டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட 100 வாக்காளர்களின் சாதி உள்ளிட்ட விவரங்களை அனுப்ப வேண்டும் என்று கறாராக பதில் வந்திருக்கிறது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் நாம் இதுகுறித்து கேட்டபோது, ‘ஒவ்வொரு வாக்காளரின் சுய விவரங்களையும் அறியும் முயற்சியில் தலைமை இறங்கியிருக்கிறது. அதன் விளைவுதான் என்ன சாதி, வேலை பார்க்கிறார்களா, வயது உள்ளிட்ட பர்சனல் விவரங்கள் கேட்கப்படுகின்றன.

தொண்டர்களின் எழுச்சி 6-ந்தேதி தெரியும்: முக அழகிரி | MK Azhagiri says Volunteers uphill are visible on the 6th

இதெல்லாம் முந்தைய பொதுத் தேர்தல்களில் இவ்வளவு துல்லியமாக கேட்கப்பட்டதில்லை. திருமங்கலம் இடைத் தேர்தலில் இருந்துதான் இந்த மைக்ரோ மேனேஜ்மென்ட் ஃபார்முலா தொடங்கியது. ஒரே ஒரு தொகுதி இடைத் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுதும் இருந்தும் கட்சி நிர்வாகிகள் அங்கே குவிந்தனர். அப்போது சோறு தின்னுட்டு சும்மாதானே இருக்கீங்க… என்று யோசித்த அப்போதைய திருமங்கலம் இடைத் தேர்தல் பொறுப்பாளர் அழகிரி ஒவ்வொரு 50 வாக்காளருக்கும் இரண்டு நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்தார். அந்த 50 பேர் பற்றிய விவரங்களை அறிந்துகொண்டு, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தரும் வேலைகளை தீவிரப்படுத்தினார். அவர்கள் என்ன சாதி, பொருளாதார பின்னணி என்ன என்பதையெல்லாம் அறிந்துகொண்டு அதற்கு ஏற்ற மாதிரி ஒரே தொகுதிக்குள் பகுதிக்கு ஏற்ற மாதிரி கவனிப்பு மாறியது.

ஓரிரு தொகுதிகளில் நடக்கும் இடைத் தேர்தலின்போது பின்பற்றிய இந்த ஃபார்முலாவை பொதுத் தேர்தலிலும் பின்பற்றுவதற்கான திட்டம்தான் இது. பல பூத் கமிட்டி உறுப்பினர்கள் சாதி கேட்க தயங்குகிறார்கள். கேட்டாலும் மாநகரத்தில் மக்கள் சொல்லத் தயங்குகிறார்கள். ஆனாலும் தலைமை கேட்கச் சொல்லியிருக்கிறதே என்ன செய்ய?’ என்கிறார்கள்.

ஆக தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றாலும் கூட…ஆளுங்கட்சியான திமுக தனது பூத் கமிட்டிகள் மூலமாக அதிகாரபூர்வற்ற வகையில் சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்திக் கொண்டிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ஏழு கடல் தாண்டி : விமர்சனம்!

அச்சுறுத்தும் Deep Fake வீடியோக்கள்… மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *