டிஜிட்டல் திண்ணை: ஈரோட்டில் சாதி ஓட்டு- சபரீசன் விசிட்… எடப்பாடி சைலன்ட்,  சீமான் ட்விஸ்ட்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டா இன்பாக்ஸில்  ஈரோட்டில் இருந்து சில போட்டோக்கள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்து முடித்ததும் வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

 “ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடக்க இருக்கிறது . வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் களத்தில் பரபரப்பாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் ஈரோட்டுக்கு வந்து மேற்கொண்ட சாதி ரீதியிலான மூவ் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும் 2 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகளில் சுமார் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வாக்குகள் செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுடையது.  தறிக் கூடங்கள் மூலம் எழும் நாடா சத்தம் ஈரோடு கிழக்கு பகுதியில் பரவலாக ஒலித்துக் கொண்டே இருக்கும். 

இந்த அடிப்படையில் செங்குந்த முதலியார் சமுதாய வாக்குகளைக் குறிவைத்து திமுக கடந்த ஜனவரி இறுதியில் இருந்தே வேலைகளைத் தொடங்கியது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ் திருப்பூரில் இருக்கிறார். அவரை கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சரான தா.மோ. அன்பரசன், ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமி, திருப்பூர் மாவட்ட அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் திருப்பூர் சென்று சந்தித்தனர்.  ‘இடைத் தேர்தலில் உங்கள் சங்கத்தின் ஆதரவை எங்களுக்குத் தரவேண்டும். உங்களுடைய கோரிக்கைகளை எல்லாம் நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்’ என்று வாக்குறுதி அளித்தனர்.

இந்த சந்திப்பின்போது கே.பி.கே. செல்வராஜ், ‘நாங்கள் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி திருப்பூரில் மாநாடு நடத்தி சில தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அவற்றை நிறைவேற்றித் தாருங்கள்’ என்று கேட்டிருக்கிறார்.  அதாவது திருப்பூர் குமரனுக்கு சென்னிமலையில் மணிமண்டபம், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் திருப்பூர் குமரனுக்கு சிலை, அண்ணாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் அழுத்தம், நெசவு செய்யும் முதலியார்களுக்கென வெள்ளையர் காலத்தில் இருந்தே ஒதுக்கப்பட்ட பாவடி நிலங்கள் இன்று புறம்போக்காக வகைப்படுத்தப்பட்டுவிட்டன. அவற்றை மீண்டும் எங்களுக்கே பட்டா போட்டுத் தர வேண்டும். செங்குந்த முதலியார்களுக்கு  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 10% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், கிருபானந்த வாரியாருக்கு  மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கைகளை அடுக்கினார்கள் கேபிகே செல்வராஜ் உள்ளிட்ட முதலியார் சங்கத்தினர்.

மலைத்துப் போன மூன்று அமைச்சர்களும் முதலமைச்சரிடம் சொல்லி கண்டிப்பாக இதுபற்றி உங்களிடம் வாக்குறுதி அளிக்க வைக்கிறோம் என்று சொல்லிவிட்டு ஈரோடு திரும்பினார்கள். செங்குந்த முதலியார் சங்கத்தினரின் இந்த கோரிக்கைகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டது.

அடுத்த சில நாட்களில் தா.மோ. அன்பரசனுக்கும் முத்துசாமிக்கும், சாமிநாதனுக்கும்  சென்னையில் இருந்து ஒரு தகவல். முதலமைச்சரின் மாப்பிள்ளை சபரீசன் ஈரோட்டுக்கு வருகிறார். செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜை  ஈரோட்டுக்கு அழைத்து வாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 

பிப்ரவரி  9 ஆம் தேதி வியாழக் கிழமை  முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த  சபரீசன் ஈரோட்டுக்கு சென்றார். அன்று மாலை தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின்  மாநிலத் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், ஈரோடு மாவட்டத் தலைவர் ஆசைத் தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் சபரீசனை சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் சபரீசனிடம், ‘ஆட்சிக்கு வந்து ரெண்டு வருசம் ஆகப் போகுதுங்க. ஆனா உங்களை சந்திக்கவே முடியலைங்க’ என்று வருத்தப்பட்டனர்.  அப்போது சபரீசன், ‘இனி எந்த கவலையும் படாதீங்க. இந்தாங்க என் பர்சனல் போன் நம்பரை வச்சிக்கங்க. எப்ப வேணும்னாலும் கால் பண்ணுங்க. சென்னையில நான் இருந்தால் கண்டிப்பாக உங்களை சந்திப்பேன். உங்க கோரிக்கைகளை எல்லாம் கேட்டுக்கிட்டேன். வர்ற பட்ஜெட் கூட்டத் தொடர்ல நீங்க எதிர்பாக்குற அறிவிப்புகள் வரும். நீங்க ஒத்துமையா நம்ம கேண்டிடேட்டை ஆதரிக்கணும்’ என்று கூறியிருக்கிறார். 

அடுத்த நாள் பிப்ரவரி 10 ஆம் தேதி,  ‘எங்கள் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை  ஆளும் திமுக அரசு நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிகம் வசிக்கும் செங்குந்தர்களின் சார்பிலும்  தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரிக்கிறோம்’ என்று அறிவித்தனர்.

இதற்கிடையே அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த நகர்வுகளை அறிந்து செங்கோட்டையனிடம் பேசியிருக்கிறார். செங்கோட்டையன் செங்குந்த முதலியார் சங்க நிர்வாகிகளிடம் பேசியுள்ளார்.

அப்போது அவர்கள்,  ‘அதிமுக வேட்பாளர் அறிவிப்புக்காகத்தான் நாங்க காத்துக்கிட்டிருந்தோம், நீங்க செங்குந்தர் வேட்பாளரை நிறுத்துவீங்கனு எதிர்பார்த்தோம். மாவட்ட மாணவரணியில பொறுப்புல இருக்கும் நந்தகோபால் பேரு கூட அடிபட்டுச்சு. ஆனா நீங்க கொங்கு வேளாளரை நிறுத்திட்டீங்க. திமுககிட்ட அரசாங்கம் இருக்கே. அதனால கூப்பிடும்போது வரமுடியாதுனு சொல்ல முடியாதுல்ல….’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த தகவலை செங்கோட்டையன் எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து செங்குந்த முதலியார் சங்க நிர்வாகிகளை சந்திக்கும் வேலைகளில் சைலன்ட் ஆக இறங்கியிருக்கிறார் எடப்பாடி.  இதற்கான வேலைகளை நந்தகோபால் மூலமாக செங்கோட்டையன் செய்து வருகிறார். 

இதேநேரம் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளார் மேனகா நவநீதன் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தீவிரமாக வீடு வீடாக சென்று அக்கா, தங்கச்சி, அப்பா, சித்தப்பா, பெரியப்பா என்று வழக்கமான உறவுப் பெயர்களை சொல்லி அழைத்து ஓட்டு வேட்டையாடி வருகிறார்.

அதிமுகவில் முதலியாருக்கு வாய்ப்பு வழங்காததால் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் செங்குந்தர் சங்கத்தினர் சிலரே நாம் தமிழருக்கு ஆதரவாக வேலை பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் நாம் தமிழர் வேட்பாளர் ஏற்கனவே இந்தத் தொகுதியில் பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகளைப் பெற்று கௌரவமான இடத்தைப் பிடிப்பார் என்று செங்குந்தர் சங்கத்தைச் சேர்ந்தவர்களே கூறுகிறார்கள். எனினும் சாதிச் சங்கத்தின் உத்தரவை அந்த சாதியினர் ஏற்றுக் கொள்வார்களா என்பதெல்லாம் தேர்தல் முடிவில்தான் தெரியும்” என்று ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

பயிற்சி ஆட்டத்தை கைவிட்ட ஆஸ்திரேலியா : எச்சரித்த சேப்பல்

இடைத்தேர்தலில் அண்ணாமலையுடன் சேர்ந்து பிரச்சாரமா? : எடப்பாடி பதில்!

 

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *