டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின்… எடப்பாடி… ஓடும் காரில் மோடி நடத்திய மீட்டிங்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும்  வாட்ஸ் அப்பில் சில புகைப்படங்கள் வந்து விழுந்தன.  தொடர்ந்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.  

“நவம்பர் 11 ஆம் தேதி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, விழா முடிந்து ஹெலிகாப்டரில் திண்டுக்கல்லில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு செல்வதாகத்தான் திட்டம்.

ஆனால்  பருவ மழையால் ஏற்பட்டிருந்த மேக மூட்டத்தால் திட்டத்தை மாற்றிவிட்டனர் பாதுகாப்பு அதிகாரிகள். அதன்படி பிரதமர் மோடி  திண்டுக்கல்லில் இருந்து காரிலேயே மதுரை விமான நிலையத்துக்குப் புறப்பட்டார்.

பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் தமிழக காவல்துறை உயரதிகாரிகளுடன் இதுபற்றி பேசினார்கள். உடனே திண்டுக்கல், மதுரை மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட்டது. உடனடியாக திண்டுக்கல்- மதுரை சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன.

இதையடுத்து பிரதமர் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்வதற்கான ரூட் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.  நான்கு வழிச் சாலையில் கொடை ரோடு, வாடிப்பட்டி,  நகரி, சமயநல்லூர், நாகமலை புதுக்கோட்டை, கப்பலூர் வழியாக மதுரை விமான நிலையம் செல்வதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேப் கொடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில்தான் பிரதமர் மோடி வழக்கமான புரோட்டாகால்களை  தாண்டி  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தன்னுடன் தனது காரில் வருமாறு அழைத்தார். பிரதமர் முன் இருக்கையில் அமர்ந்துகொள்ள அண்ணாமலை பின்னால் அமர்ந்திருந்தார். திண்டுக்கல்லில் தொடங்கி மதுரை விமான நிலையம் வரை 42 நிமிடங்கள் அண்ணாமலையோடு காரில் பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி.

digital thinnai car meeting in pm modi

இந்த  முக்கால் மணி நேர கார் பயணத்தை தனது தமிழக விசிட்டின் இன்னொரு முக்கிய நிகழ்ச்சியாகவே மாற்றிக் கொண்டார் மோடி. அதாவது தனது அரை நாள் பயணத் திட்டத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளோடு குறுகிய கால கூட்டத்தைக் கூட அவரால் ஏற்பாடு செய்யமுடியவில்லை.

அதற்கு நேரமில்லை. இந்த நிலையில்தான் வானிலை மாற்றத்தால் கார் பயணம் என்றதும், ‘எத்தனை நிமிடங்கள் ஆகும்?’ என்று கேட்டிருக்கிறார் மோடி. ‘நியர்லி ஒன் ஹவர்’ என்று சொன்னதும்தான் தன்னோடு அண்ணாமலையை காரில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்.

திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்போதே மழைக் காலத்தைப் பற்றி முதலில் விசாரித்தவர் மெல்ல மெல்ல தமிழ்நாடு அரசியல், தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் பற்றியெல்லாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அதற்கு அண்ணாமலை பதில் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார்.

குறிப்பாக கோவை குண்டுவெடிப்பு பற்றி பிரதமரிடம் விளக்கியிருக்கிறார் அண்ணாமலை.  தமிழக அரசின் உளவுத்துறை இந்த விவகாரத்தைத் திறம்படக் கையாளவில்லை என்றும், தெய்வாதீனமாக அந்த கொடுஞ்செயல் தடைபட்டதாகவும் இல்லையென்றால், நீங்கள் தமிழகத்துக்கு பெரும் துயரத்தோடு வந்திட நேர்ந்திருக்கும் என்றும் மோடியிடம் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. கவலை தோய்ந்த முகத்தோடு அதை கேட்டுக் கொண்ட பிரதமர்,  தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி பற்றியும் கேட்டிருக்கிறார்.

’முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை திமுக அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. அதனால் மக்கள் இதுகுறித்து அதிருப்தியாக இருக்கிறார்கள். ஆனால் திமுக அரசு அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல்  முடிந்த அளவு ஊழல் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. நம் கட்சி சார்பில் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம். மக்களிடம் கொண்டு செல்கிறோம்’ என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை.

மேலும் திமுக அரசின் அமைச்சர்கள் கடந்த ஆட்சியை விட திட்டப் பணிகளுக்கு அதிக கமிஷன் தொகை பெற்று வருவதாகவும் இதுகுறித்து சில போலீஸ் அதிகாரிகளும், துறை அதிகாரிகளும் தன்னிடம் தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் அண்ணாமலை பிரதமரிடம் சொல்லியிருக்கிறார்.

கட்சியின் இமேஜ் பற்றியும் கட்சியின் கட்டமைப்பு பற்றியும் நிறைய கேள்விகளைக் கேட்டிருக்கிறார் மோடி. அதற்கு அண்ணாமலை, ‘தொடர்ந்து பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி வருகிறோம். வரிசையாக மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு வந்து நிறைய திட்டங்களை பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்னால் எய்ம்ஸ் உள்ளிட்ட சில திட்டங்களை நாம்  முடித்தால் மக்களிடம்  மேலும் நல்ல பெயர் எடுக்க முடியும்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோடி.

அதிமுக  கூட்டணி பற்றியும் மோடி சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். ‘எடப்பாடியிடம் தொண்டர்கள், நிர்வாகிகள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஓ.பன்னீருக்கு ஓரளவு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. தென் மாவட்டத்தில் அவரது சமூக பலம் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது. சசிகலாவுக்கு மக்கள் செல்வாக்கும் இல்லை, கட்சியிலும் செல்வாக்கு இல்லை’ என்று பிரதமரிடம் கூறியிருக்கிறார் அண்ணாமலை. 

இப்படியாக சுமார் நாற்பது நிமிடங்களில் அரைமணி நேரம் தமிழ்நாட்டு நிலவரம் பற்றி கேள்விகளைக் கேட்டு அண்ணாமலையிடம் பதில்களைப் பெற்றிருக்கிறார் மோடி. இப்படி ஒரு அனுபவம் கிடைக்கும் என்று அண்ணாமலையே எதிர்பார்க்கவில்லை. திட்டமிட்டு  ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினால் கூட இப்படியெல்லாம் பேச வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால் பிரதமருடன் ஒன் டு ஒன் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மதுரை செல்லும் வரை டென்ஷனோடே இருந்திருக்கிறார் அண்ணாமலை.

இதன் விளைவாகத்தான் நவம்பர் 12 ஆம் தேதி கமலாலயத்துக்கு அமித் ஷா வந்து சென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,  ‘பிரதமர் நேற்று எனக்கு மாநிலத் தலைவர் என்ற முறையில பெரிய கௌரவம் கொடுத்திருந்தார்.

திண்டுக்கல்லில் இருந்து  மதுரை செல்லும் வரை அவரது காரில் என்னை அழைத்துச் சென்றார்.  ஒரு மணி நேரம் பிரதமரோடு பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. பிரதமர் நிறைய கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொன்னோம்’ என்று இந்த ஆச்சரிய நிமிடங்களை செய்தியாளர்களிடம் பதிவு செய்திருக்கிறார்” என்ற மெசேஜை செண்ட் கொடுத்து ஆஃப்  லைன் போனது வாட்ஸ் அப்.

மோடி-எடப்பாடி-ஓபிஎஸ்: அந்த இருபது நிமிடங்களில் நடந்தது இதுதான்!

தீர்ந்தது நிலக்கரி… மூடப்படும் என்.எல்.சி.: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel