டிஜிட்டல் திண்ணை: குடைச்சல் கொடுத்தால், கூட்டணியே நோ… தனித்துப் போட்டிக்குத் தயாராகும் ஸ்டாலின்?
வைஃபை ஆன் செய்ததும் பட்ஜெட் படங்களோடு குறிஞ்சி இல்லத்தில் நடந்த திமுகவின் 234 சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் (அ) பார்வையாளர்கள் கூட்டத்தின் படங்களும் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏறத் தாழ இருபது மாதங்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி திமுகவின் சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைப்புக் குழுவில் பணியாற்றிய திமுகவின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீண்டும் சட்டமன்ற ஒருங்கிணைப்புக் குழுவிலும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
குழு அமைக்கப்பட்ட மறுநாளே அதாவது ஜூலை 21 ஆம் தேதி அறிவாலயத்தில் இந்த குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதற்கடுத்த இரண்டே நாட்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல்பட்டு வரும் தொகுதி பார்வையாளர்கள் 234 பேரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் குறிஞ்சி இல்லத்தில் இன்று ஜூலை 23 ஆம் தேதி அழைக்கப்பட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் 40- க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற சிறப்புற பணியாற்றிய தொகுதி பார்வையாளர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து விருந்தும் அளித்தார் உதயநிதி. அதுமட்டுமல்ல… வரப் போகும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் இவர்கள்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் என்ற வகையிலும் இந்த கூட்டம் கூடப்பட்டுள்ளது.
திமுக அரசின் திட்டங்களையும் – சாதனைகளையும் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தருகிற வகையில் அயராது உழைக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் உரையாற்றினார் உதயநிதி.
ஜூலை 20 ஆம் தேதி ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு, ஜூலை 21 அந்த குழுவின் முதல் கூட்டம், 23 ஆம் தேதி 234 சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களின் கூட்டம் என ஜெட் வேகத்தில் திமுகவின் தேர்தல் பணி நடந்து வருகிறது.
அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி திமுகவின் கூட்டணிக் கட்சிகளே திமுகவின் இந்த நடவடிக்கைகளை உற்று நோக்கி வருகின்றன.
இந்த வேகமான தேர்தல் பணி குறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது ’வேற லெவல்’ தகவல்கள் கிடைத்தன.
‘நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக கணக்கிட்டால் 221 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலினும் இதைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார். அதுமட்டுமல்ல… நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பூத்திலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு, அடுத்தடுத்து அதிமுக உள்ளிட்ட போட்டிக் கட்சிகள் வாங்கிய ஓட்டு ஆகியவை அடங்கிய பட்டியலை திமுக தலைமை பூத் வாரியாக பெற்றது. இதன் அடிப்படையில் செய்ய வேண்டிய பணிகளை சபரீசனின் பென் நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
ஒவ்வொரு பூத்திலும் திமுகவுக்கும், இரண்டாம் இடம் வந்த கட்சிக்கும் இடையிலான ஓட்டு வித்தியாசம் என்ன, திமுக ஓட்டுகளை எப்படி அதிகரிக்கலாம், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் அரசின் நலத்திட்டங்களை பெற்றவர்கள் எவ்வளவு பேர், பெறாதவர்களுக்கு எவ்வகையில் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பது பற்றி… பூத் வாரியான பட்டியலை வைத்துக் கொண்டு திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் கடந்த எம்பி தேர்தலில் ஒவ்வொரு மாசெவும் கொடுத்த பூத் கமிட்டி பட்டியலை சரிபார்த்து, தேர்தல் பணிகளில் தலைமைக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் பாலமாக இருந்த தேர்தல் பார்வையாளர்கள் 234 பேரையும் உதயநிதி அழைத்திருக்கிறார்.
அவர்களிடம் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கைப்பற்ற வேண்டுமெனில் செய்யவேண்டிய பணிகள் என்ன என்பது பற்றிய ஆலோசனையும் அறிவுரையும் வழங்கப்பட்டிருக்கிறது.
எம்பி தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது முதல் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை வரை திமுகவே முழுக்க முழுக்க தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்தது. கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் கூட திமுகவினர் கடுமையாக உழைத்தாலும்… திமுக போட்டியிட்டிருந்தால் இன்னமும் உற்சாகமாக தேர்தல் பணிகள் நடந்திருக்கும் என்றும் ரிப்போர்ட்டுகள் தலைமைக்கு சென்றிருக்கின்றன.
இந்த வகையில்தான், வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு வரையறுக்கப்பட்ட இடங்களே வழங்கப்பட்டு, அதிகபட்ச தொகுதிகளில் திமுக நிற்க வேண்டும் என்று விரும்புகிறார் ஸ்டாலின். அதனால்தான் அரசின் நலத்திட்டங்களை அதிகபட்ச மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.
இப்போது இருக்கும் கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் ஏற்கனவே தொனி மாறி பேசி வருகிறது. 2026 தேர்தலுக்குப் பின் நடக்கும் ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என்று எம்பி. கார்த்தி சிதம்பரம் சில நாட்களுக்கு முன் பேசினார். செல்வப் பெருந்தகை பங்கேற்ற விழாவில்தான் அவ்வாறு பேசினார் அவர்.
விடுதலை சிறுத்தைகளும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிக இடங்கள் கேட்பதென கட்சிக்குள் பேசியிருக்கிறார்கள். இடது சாரிகளில் இருந்து, மமக வரை அதிக இடங்களை திமுக கூட்டணியில் கேட்டுப் பெற உறுதியாக இருக்கிறார்கள்.
ஆனால் திமுக தரப்பிலோ, ‘நாடாளுமன்றத் தேர்தல் போல சகித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஆளுங்கட்சியாக இருந்து தேர்தல் பணிகளை செய்வதால் பெரும் சாதகம் நமக்கு இருக்கிறது. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக ஓர் அணி, விஜய் தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் அணி அல்லது விஜய் +சீமான் என அணிகள் திமுகவுக்கு எதிராக நிற்கும்.
2016 இல் எதிர்க்கட்சிகள் சிதறி நின்றதால் அதிமுக தனித்துப் போட்டியிட்டு மீண்டும் ஆட்சி அமைத்தது. அதே போல 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறும் நிலை இருப்பதால் இப்போதில் இருந்தே கடுமையான தேர்தல் பணி செய்வதன் மூலம் தனித்து நின்றால் கூட ஆட்சியை மீண்டும் பிடிக்கலாம்.
கூட்டணியை நாமாக கெடுத்துக் கொள்ள வேண்டாம். அதேநேரம் அவர்கள் அதிக இடங்கள் கேட்டு குடைச்சல் கொடுத்தால் கூட்டணி இன்றியே தேர்தலை சந்திக்கலாம் என்பதுதான் இப்போது ஸ்டாலின் மனதில் இருக்கும் எண்ணம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
‘ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே’ : சூர்யாவின் ‘கங்குவா’ பாடல்!
தமிழ்நாடு மீது மத்திய அரசுக்கு காழ்ப்புணர்ச்சி : எடப்பாடி தாக்கு!