வைஃபை ஆன் செய்ததும் விழுப்புரத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்ட புகைப்படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் நேற்று ஜூன் 30, இன்று ஜூலை 1 ஆகிய இரு தினங்கள் விழுப்புரத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் இடையே இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி களப்பணி ஆற்றும்’ என்று அறிவித்திருக்கிறார்.
அதே நேரம் நேற்றும் இன்றும் நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திமுக தலைமையை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கான வியூகமும் இந்த நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று ஜூன் 30 நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தப்பட்ட விதம் பற்றி விவாதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது ஒவ்வொரு தொகுதியிலும் திமுக கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பங்கு என்ன, அதற்கு திமுகவின் ரியாக்ஷன் என்ன என்பது பற்றி நிர்வாகிகள் எடுத்துக் கூறினார்கள்.
அப்போது சில நிர்வாகிகள் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை நோக்கி, ’நீங்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில் தான் கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுக்கு வேலை செய்தோமே தவிர, உள்ளபடியே விருப்பத்தோடு தேர்தல் பணி ஆற்றவில்லை. ஏனென்றால் நமக்கு ஒரு சீட் கூட திமுக தலைமை தரவில்லை. அப்படி கொடுத்திருந்தால் இந்த தேர்தலில் நம்முடைய பாராளுமன்ற உறுப்பினரும் டெல்லியில் இருந்திருப்பார். ஆனால், அதை திமுக விரும்பவில்லை’ என்று குற்றம் சாட்டினார்கள்.
இன்று ஜூலை 1ஆம் தேதி வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை மனிதநேய மக்கள் கட்சி எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றிய முக்கியமான விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த நிர்வாக குழு கூட்டத்தில் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஒரு முக்கியமான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
அதாவது தமிழகத்தில் 29 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கிற சட்டமன்றத் தொகுதிகள் இரண்டு இருக்கின்றன. அதேபோல 25 சதவீதம் முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட 4 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. மேலும், இருபதில் இருந்து 25 சதவீதம் முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட சட்டமன்ற தொகுதிகள் 7 இருக்கின்றன. 20 சதவிகிதம் வரை முஸ்லிம்களை கொண்ட சட்டமன்ற தொகுதிகள் 30 இலிருந்து 35 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றன.
சில ரிசர்வ் தொகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் தொகை கணிசமாக உள்ளது. இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் 60 சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம்களின் செல்வாக்கு பரவலாக உள்ளது.
இந்த டேட்டாவின் அடிப்படையில் நாம் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை அணுக வேண்டும். அதாவது திமுக கூட்டணியில் தொடர்வதாக இருந்தால் நமக்கு குறைந்தபட்சம் ஐந்து சட்டமன்ற தொகுதிகள் அளிக்கப்பட வேண்டும். அதற்கு திமுக தலைமை மறுக்கும் பட்சத்தில் இந்த ஆய்வின் அடிப்படையில் நமக்கு வாய்ப்பான சுமார் 50 முதல் 60 சட்டமன்ற தொகுதிகளில் நாம் தனித்து நின்று நமது பலத்தை காட்ட வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தனித்து நின்று இன்று மாநில அங்கீகாரம் பெற்றிருக்கிறது. அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அங்கீகாரம் பெற்றிருக்கிறது. இந்த கட்சிகள் எல்லாம் நமக்கு பிறகு தொடங்கப்பட்டவை. இப்படி இருக்கிற நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் -மனிதநேய மக்கள் கட்சியின் செல்வாக்கை திமுக குறைத்து மதிப்பிடுகிறதோ என்று தோன்றுகிறது.
எனவே, வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகள் அல்லது 50 முதல் 60 சட்டமன்ற தொகுதிகளில் தனித்து நின்று நம் பலத்தை காட்டுவது என்று இந்த நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் தற்போதைய அமைச்சர் உதயநிதியின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, அமைச்சர் சேகர்பாபுவின் துறைமுக தொகுதியும் இடம்பெற்றிருக்கின்றன.
இவ்வாறு விவாதிக்கப்பட்ட நிலையில்தான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு மமக களப் பணியாற்ற புறப்பட்டிருக்கிறது. மமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிற இந்த விவகாரம் திமுக கூட்டணிக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சவாலாக இருக்கும்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடியின் கேரண்டியை நிராகரித்த தமிழக மக்கள்: மக்களவையில் ஆ.ராசா
பெரிய தொகைக்கு ஏலம் போன மம்மூட்டி எடுத்த புகைப்படம்!