டிஜிட்டல் திண்ணை: பட்ஜெட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்- ஸ்டாலின், அமைச்சர்கள் ஆப்சென்ட் ஏன்?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்  மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக நடத்திய ஆர்ப்பாட்ட வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

1 நபர், கூட்டம் மற்றும் உரை படமாக இருக்கக்கூடும்

“இன்று ஜூலை 27ஆம் தேதி டெல்லியில் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில்… தமிழ்நாட்டில் திமுக சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கண்டித்தும் மத்திய அரசின் பழிவாங்கும் பட்ஜெட்டை எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திமுக எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் அவர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினார்கள். மற்ற மாவட்டங்களில் தலைமையில் இருந்து அனுப்பப்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் முதலமைச்சர் ஸ்டாலின், மற்றும் எந்த அமைச்சர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.
மா.செக்களாக இருக்கும் அமைச்சர்கள் ஆர்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்தார்களே தவிர ஆர்பாட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மா.சு. எங்கே என்ற கேள்வியை கட்சி நிர்வாகிகளே ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டனர்.

இதையறிந்த அந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியபோது, ‘இங்கே நமது மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா. சுப்பிரமணியன் அமைச்சராக இருப்பதால் சட்டரீதியான காரணங்களால் கலந்து கொள்ளவில்லையே தவிர, அவர் எப்போதும் ஒரு முன்கள வீரர் தான்’ என்று குறிப்பிட்டு பேசினார்.

6 பேர் மற்றும் உரை படமாக இருக்கக்கூடும்

தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை, தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும், தமிழ்நாட்டிலிருந்து வரி வசூல் செய்கிற மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி பங்கீட்டை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர், அமைச்சர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விசாரித்த போது 2007 ஆம் ஆண்டு நடந்த ஒரு பிளாஷ்பேக்கை சொல்கிறார்கள் திமுக வழக்கறிஞர்கள்.

2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக கலைஞர் இருந்தார். அப்போது மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டிருந்தது.

அந்த நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2007 அக்டோபர் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பந்த் போராட்டத்தை திமுக அறிவித்தது.

அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், அதிமுகவினர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதாவது ஆளுங்கட்சியே பந்த் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அக்டோபர் 1ஆம் தேதி திங்கள்கிழமை போராட்டம் நடக்க இருந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த மனுவை அவசரமாக விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுங்கட்சியே போராட்டம் நடத்துவது சட்டவிரோதமானது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கடுமையான கருத்துக்களை வெளியிட்டது.

இதையடுத்து அக்டோபர் 1ஆம் தேதி முதலமைச்சர் கலைஞர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு… சில மணி நேரங்களில் அங்கிருந்து கோட்டைக்கு சென்று விட்டார்.

இந்த ஃபிளாஷ்பேக்கின் அடிப்படையில் தான் இப்போதும் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில்… அரசாங்கத்தின் அங்கத்தினர்களாக இருக்கும் முதலமைச்சரோ மற்ற அமைச்சர்களோ போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டாம் என்று திமுக தலைமை முடிவெடுத்தது.

5 பேர், நபர்கள் படிக்கின்றனர், மேசை மற்றும் மருத்துவமனை படமாக இருக்கக்கூடும்

மேலும் தமிழ்நாடு முழுவதும் திமுக இந்த போராட்டங்களை நடத்திய அதே நேரம் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களது அரசு பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் கோட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கோவையில் துறை ரீதியான பணிகளை மேற்கொண்டார். அதேபோல அமைச்சர் மா சுப்பிரமணியன் வேறொரு நிகழ்ச்சியில் இருந்தார்.

இவ்வாறு திமுக கட்சி நடத்தும் போராட்டமாகவே இது அறியப்பட வேண்டும், இதில் அரசாங்கத்தின் பங்கு எதுவும் இருக்கக் கூடாது என்ற சட்ட ரீதியான  முன்னெச்சரிக்கை அடிப்படையில் தான் இப்படி ஒரு முடிவெடுக்கப்பட்டது என்கிறார்கள் திமுக வழக்கறிஞர்கள்.

அதேநேரம் திமுகவின் அமைச்சர்கள் இந்த போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் தவிர்த்ததற்கு காரணம் பதவி பயம்தான் என்று விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மக்களுடன் முதல்வர்: கோட்டையில் ரிவ்யூ மீட்டிங்… கேள்விகளால் துளைத்தெடுத்த ஸ்டாலின்

டெட்பூல் & வோல்வரின்: விமர்சனம்!

 

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *