வைஃபை ஆன் செய்ததும் எடப்பாடி- அமித் ஷா சந்திப்பு பற்றிய படங்களும் ஃபேஸ்புக் மெசஞ்சரில் சில குறிப்புகளும் வந்திருந்தன. அவற்றை சீன் செய்த வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அதிமுக அரசியலில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு அரசியலிலும் அடுத்த கட்ட பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது எடப்பாடி– அமித் ஷா சந்திப்பு.
செப்டம்பர் 20 ஆம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் அமித் ஷாவை சந்தித்தார் தமிழக முன்னாள் முதல்வரும் நீதிமன்ற தீர்ப்பின்படி தற்போதைய அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பின் போது அதிமுக உட்கட்சி அரசியலும், தமிழ்நாட்டு அரசியலும் பேசப்பட்டிருக்கின்றன.
அமித் ஷா அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் செய்தது யார்?
சென்னையில் இருந்து செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு புறப்படும் வரை எடப்பாடி பழனிசாமிக்கு அமித் ஷாவின் அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் ஆகவில்லை. ஏற்கனவே பல வழிகளில் அமித் ஷாவையும், பிரதமர் மோடியையும் சந்திக்க எடப்பாடி முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.
இந்த நிலையில்தான் ஹர்திப் ஜெயின் என்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிசினஸ் மேனை தனது பிசினஸ் நண்பர்கள் மூலமாக பிடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த ஹர்திப் ஜெயின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நெருங்கிய நண்பர்.
நெருங்கிய நண்பர் என்றால் எப்போது வேண்டுமானாலும் அமித் ஷாவுடன் அலைபேசியில் பேசும் அளவுக்கு நெருக்கமானவர் ஹர்திப் ஜெயின்.

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் டெல்லியில் எடப்பாடி பழனிசாமிக்கு தேவையான சில வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் சமீப வருடங்களாக செய்து வந்தது அரசியல் வட்டாரங்களில் ஏற்கனவே பேசப்பட்ட விஷயம்தான்.
அவர் மூலமாக முயற்சி செய்தும் அமித் ஷாவிடம் அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் வேலுமணி, தங்கமணி மூலமாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து முயற்சித்தார்கள்.
அப்படியும் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகுதான் பிசினஸ் வட்டார நண்பர்கள் மூலம் ஹர்திப் ஜெயின் பற்றி அறிந்து அவர் மூலம் முயற்சி செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி பற்றி விசாரித்துக் கொண்ட ஹர்திப் ஜெயின் அவரது சந்திப்பு தொடர்பாக அமித் ஷாவிடமும் பேசியிருக்கிறார்.
ஆனபோதும் ‘நீங்க கிளம்பி டெல்லி வந்துவிடுங்கள், பாத்துக்கலாம்’ என்று ஹர்திப் ஜெயினிடம் இருந்து தகவல் கிடைத்த பிறகுதான் செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு டெல்லி புறப்பட்டிருக்கிறார் எடப்பாடி. விமானம் ஏறும்போதே பிரதமர் மோடி சந்திப்புக்கு வாய்ப்பில்லை என்ற தகவல் எடப்பாடிக்கு கிடைத்துவிட்டது.

ஆனபோதும், ஹர்திப் ஜெயின் மீதான நம்பிக்கையோடு அமித் ஷாவை சந்திக்கலாம் என்று நம்பிச் சென்றார் எடப்பாடி.
சபரீசன் -உதயநிதி ஃபைல்: அமித் ஷாவிடம் கொடுத்த எடப்பாடி
அமித் ஷாவுடனான சந்திப்பு முடிந்த பின்னர், “கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் மற்றும் நடந்தாய் வாழி காவேரி திட்டம் ஆகியவற்றை விரைந்து நிறைவேற்ற கோரியும், திமுக அரசின் அலட்சியத்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தமிழகத்தில் பெருகிவிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் வேண்டுகோள் விடுத்தேன்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார்.
ஆனால் இதற்கும் மேல் அமித் ஷாவிடம் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அமித் ஷாவை சந்தித்ததும் நேரம் கொடுத்ததற்கு முதலில் நன்றியை தெரிவித்த எடப்பாடி பழனிசாமி… சில தகவல்கள் அடங்கிய ஃபைலை அமித் ஷாவிடம் கொடுத்தார்.
அதில் தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோரின் செயல்பாடுகள் பற்றியும், திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை வருடங்களில் இவர்களின் பொருளாதார நெட்வொர்க் விரிவடைந்திருப்பது பற்றியும், வெளிநாடுகளில் இவர்களுக்கு தொடர்புகள் இருக்கிறது என்றும் ஒரு ரிப்போர்ட்டை அமித் ஷாவிடம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி.
’இந்த தகவல்களின் அடிப்படையிலும் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையிலும் அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்தார் எடப்பாடி. அப்படி நடவடிக்கை எடுத்தால் வரும் எம்பி தேர்தலில் நம் கூட்டணிக்கு இது அரசியல் ரீதியாக பலன் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார் எடப்பாடி.
தமிழ்நாட்டின் ஆளுங்கட்சிப் புள்ளிகள் பற்றிய எடப்பாடியின் ஃபைலை சீரியசாக பார்த்து எடுத்து வைத்துக் கொண்டார் அமித் ஷா.
அதிமுக அரசியல்- எடப்பாடியிடம் அமித் ஷா சொன்னது என்ன?
தமிழ்நாட்டு அரசியல் பற்றி எடப்பாடியிடம் விசாரித்த அமித் ஷா, ‘தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் அதேநேரம் நம்ம கூட்டணியை நாம் பலப்படுத்திக்க வேண்டாமா? நீங்க, ஓபிஎஸ், சசிகலா-தினகரன் எல்லாம் ஒண்ணாக சேரணும். அப்போதான் எம்பி தேர்தல்ல நம்ம வெற்றிபெற முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக கட்சியில இப்ப எந்த பிளவும் இல்லை. 95% பேர் என் தலைமையிலதான் இருக்காங்க. மீதி பேர்தான் மூணு குரூப்பா இருக்காங்க. அதனால அவங்களால நமக்கு எந்த இழப்பும் வராது. ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு மக்கள்கிட்ட எந்த செல்வாக்கும் இல்லை.
இன்னும் சொல்லப் போனா ஓ.பன்னீர் போன சட்டமன்றத் தேர்தல்ல நம்ம கூட்டணி தோக்கணும்கிறதுக்காக திமுக-காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கணும்குறதுக்காக வேலை பார்த்திருக்காரு. இதுக்காக அவர் திமுக தரப்புக்கு 200 கோடி ரூபாய் தேர்தல் நிதி கொடுத்திருக்காரு.
நான் முதல்வராக இருந்தபோது இந்தத் தகவல் வந்ததும் முதலில் நான் நம்பலை. ஆனால் அதுக்கான ஆதாரங்கள் அப்பவே எனக்கு கிடைச்சது. ஓபிஎஸ் முழுமையாக திமுகவின் ஏஜென்ட்டாகத்தான் செயல்பட்டு வர்றாரு.
அவருக்குனு தனிப்பட்ட பலம் எதுவும் இல்லை. இதேபோலத்தான் சசிகலா, தினகரனுக்கும் பலம் கிடையாது” என்று எடப்பாடி சொல்ல இதை அருகே இருந்த மொழிபெயர்ப்பாளர் அமித் ஷாவிடம் இந்தியில் சொல்லியிருக்கிறார். உடனே, ‘அப்படியா?’ என கேட்டிருக்கிறார் அமித் ஷா.

எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க- அமித் ஷாவிடம் மீண்டும் மீண்டும் கேட்ட எடப்பாடி
தொடர்ந்து அமித் ஷாவிடம் பேசிய எடப்பாடி, ‘கட்சி இப்ப முழுமையா என் கட்டுப்பாட்டுலதான் இருக்கு. அதனால எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க. அவங்க எல்லாம் இல்லாமலே வர்ற எம்பி தேர்தல்ல ஏற்கனவே இருக்கும் நமது தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளோட போட்டியிட்டு வெற்றிபெற வச்சிக் காட்டுறேன்.
நான் என்னை நிரூபிச்சுக் காட்டுறேன். எனக்கு இந்த ஒரு முறை வாய்ப்பு கொடுங்க’ என்று மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறார் எடப்பாடி.

அப்போது அமித் ஷா, ‘தமிழ்நாடு பத்தி இன்னும் எனக்கு நம்பிக்கையான ரிப்போர்ட்ஸ் வந்துக்கிட்டிருக்கு. நம்ம கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கணும். ஏற்கனவே நம்ம கூட்டணியில இடம்பெற்ற கட்சிகளும் நம்மளோட இருக்கணும்.
மத்தபடி இந்த எம்பி தேர்தல் உங்களை நிரூபிக்குறதுக்கான தேர்தல் இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார் அமித் ஷா. இதைக் கேட்ட எடப்பாடி, ‘எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க ஜி’ என்று மீண்டும் மீண்டும் கேட்க அமித் ஷா அதற்கு பதில் சொல்லவில்லை.
இப்படித்தான் அமித் ஷாவுடனான எடப்பாடியின் இருபது நிமிட சந்திப்பு முடிந்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.