வைஃபை ஆன் செய்ததும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் அதிமுகவினர் நடத்திய போராட்டமும் அதற்கு அண்ணாமலை அதிசயமாக பாராட்டி போட்ட பதிவும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே whatsapp தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இன்று மாநில முழுவதும் இந்த விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதற்கு முன்னர் நேற்று டிசம்பர் 29 இரவு சென்னையில் இருக்கக்கூடிய பிரபல எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் உட்பகுதியில் அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் திடீரென ’யார் அந்த சார்’ என்ற பதாகையை உயர்த்திப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது இணையத்தில் வைரலானது.
இது நடந்த கொஞ்ச நேரத்தில்… பாஜகவின் மாநில தலைவர்கள் கூட்டத்துக்காக டெல்லி சென்றிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், அதிமுக ஐடி விங் நடத்திய இந்த போராட்டத்தை பாராட்டுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

சில மாதங்களாகவே அதிமுகவை மிகக் கடுமையாக தாக்கி வந்த அண்ணாமலை இப்போது என்ன திடீரென பாராட்டு தெரிவிக்கிறார் என அதிமுக தரப்பிலும் பாஜக தரப்பிலும் ஆச்சரியங்கள்.
இதுகுறித்து பாஜக தரப்பில் விசாரித்த போது, ‘இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சித் தேர்தல் குறித்து டிசம்பர் 29ஆம் தேதி டெல்லியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பாஜகவின் தேசியத் தலைவர் நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி. எல். சந்தோஷ் உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பாஜகவின் அனைத்து மாநில தலைவர்களும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மாநிலமாக உறுப்பினர் சேர்க்கை பற்றி ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பாஜக உறுப்பினர் சேர்க்கை குறைவாக நடைபெற்று இருக்கிறது என்று தேசிய தலைவர்கள் அண்ணாமலையிடம் அதிருப்தி தெரிவித்தார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையில் தமிழ்நாட்டில் ஒன்பது லட்சம் புதிய உறுப்பினர்கள் தான் பாஜகவில் சேர்ந்து இருக்கிறார்கள் என்பது தான் தேசியத் தலைமைக்கு கிடைத்திருக்கிற ரிப்போர்ட். மேலும் தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்ட புதிய உறுப்பினர்களில் 70% பேர் சென்னை, கோவை, குமரி ஆகிய மூன்று பகுதிகளை சேர்ந்தவர்கள். மீதி 30 சதவீதம் பேர்தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மற்ற அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சேர்க்கப்பட்டவர்கள் என்பது உறுப்பினர் சேர்க்கை விவரங்களில் இருந்தே தேசியத் தலைமைக்கு தெரிந்திருக்கிறது.
ஏன் இவ்வளவு குறைந்த பர்பாமன்ஸ் என்று அண்ணாமலையிடம் தேசிய தலைவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அண்ணாமலை, ‘நான் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் இல்லை. கட்சியின் அனுமதியோடு லண்டன் சென்று அரசியல் வகுப்பு முடித்து சமீபத்தில் தான் தமிழகத்துக்கு வந்தேன். பாஜகவின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா தலைமையில் தான் உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடந்தன. மீண்டும் அதனை நான் துரிதப்படுத்துகிறேன்’ என கூறியுள்ளார்.
கூட்டத்துக்கு பிறகு டெல்லியில் இருந்தபடியே பல்வேறு மாவட்ட தலைவர்களை ஃபோனில் அழைத்து அண்ணாமலை ஏன் உறுப்பினர் சேர்க்கை இவ்வளவு குறைவாக இருக்கிறது என்று சத்தம் போட்டிருக்கிறார். அதற்கு மாவட்ட தலைவர்கள், ‘நாங்க என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்? மக்கள் பிஜேபியில சேர தயக்கம் காட்டுகிறார்கள். ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து உறுப்பினராக சேர விரும்பியவர்கள் கூட நமது நிர்வாகிகள் நேரில் சென்று கேட்கும் போது பிஜேபியில் சேர விருப்பமில்லை என்று சொல்லிட்டனர். இதுக்கு மேல நாம என்ன பண்றது?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே இந்தக் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பாகவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து பேசி இருக்கிறார்.
அப்போது அண்ணாமலையிடம் அமித்ஷா தெளிவாக ஒரு அறிவுறுத்தலை வழங்கி உள்ளார். ‘2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வர இருக்கிறது. இந்த நிலையில் உங்களால் தமிழ்நாட்டில் எந்த கட்சியுடனும் நமது கூட்டணிக் கதவு அடைபடக்கூடாது. அதைப் போல நீங்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம். வாய்ப்புள்ள எல்லா கூட்டணிக் கதவுகளையும் நாம் திறந்தே வைத்திருக்க வேண்டும்’ என்பதுதான் அமித்ஷா போட்ட ஒன்லைன் உத்தரவு.
ஏற்கனவே டெல்லியில் நடந்த மாநில தலைவர்கள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை போதவில்லை என்ற தேசிய தலைமையின் அதிருப்தி, அதற்கு முன்பு அமித்ஷா போட்ட ஒன் லைன் ஆடர் ஆகியவற்றால் மன உளைச்சலில் இருந்த அண்ணாமலை… அதிமுகவின் போராட்டத்தை பாராட்டி ஒரு பதிவை போட்டிருக்கிறார். இதன் மூலம் உறுப்பினர் சேர்க்கை பற்றிய டெல்லியின் விசாரணையை திசை திருப்பலாம் என்பது கூட காரணமாக இருக்கலாம் என்று பாஜக நிர்வாகிகளே சொல்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லேசர் வெளிச்சத்தில் மின்னும் வள்ளுவர் சிலை… கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்
”சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி கொடுப்பேன்” : நீதிமன்றத்தில் ஆஜரான வருண்குமார் ஐபிஎஸ் உறுதி!