வைஃபை ஆன் செய்ததும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் திருச்சி பேட்டி லைவ் லிங்க் வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது. கூடவே, அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கள ஆய்வுக் குழுவினரின் கூட்டப் புகைப்படங்களும் வந்து விழுந்தன.
இவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“நவம்பர் 10 ஆம் தேதி இரவு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையத்தில் கொடுத்த பேட்டி, மீண்டும் பாஜகவோடு அதிமுக கூட்டணி வைக்குமா என்ற விவாதத்தை ஊடகங்களில் எழுப்பியுள்ளது.
விருதுநகரில் தனக்கு எதிராக முதல்வர் கூறிய விமர்சனங்களுக்கு பதிலளித்த எடப்பாடியிடம் செய்தியாளர் ஒருவர், ‘உங்க கூட்டணிக்கு பாமகவையும் பாஜகவையும் வரவேற்க கதவை தெறந்து வச்சிருக்கீங்களா?’ என்று கேட்டார்.
அதற்கு எடப்பாடி சொன்ன பதிலைக் கேட்டுதான் ஊடகங்கள் நேற்று இரவில் இருந்தே மீண்டும் அதிமுகவோடு பாஜக கூட்டணி அமைக்க தயார் என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை முன்னாள் அமைச்சரான ஜெயகுமார் செய்தியாளர்களிடம், ‘பாஜகவோடு கூட்டணி எப்போதும் இல்லை. எடப்பாடி பழனிசாமியின் பேச்சை ஊடகங்கள் திரித்து வெளியிடுகின்றன’ என்று பதிலளித்தார்.
ஏற்கனவே, ‘அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக உறவு இருக்கிறது’ என்று தொடர்ந்து சொல்லி வருகிற திமுக தரப்பினர், பாஜகவோடு கூட்டணி வைக்க எடப்பாடி முயற்சித்து வருகிறார் என்று மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் நவம்பர் 11 ஆம் தேதி அதிமுக கள ஆய்வுக் குழுவினரின் முதல் கூட்டம் நடைபெற்றது. கள ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருக்கிற பத்து பேரையும் ஐந்து குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவினருக்கும் அதிமுகவின் 14 அமைப்பு மாவட்டங்களுக்கான பொறுப்பைக் கொடுத்தார் எடப்பாடி. இவை போக மீதமிருக்கும் சென்னை மாவட்டத்துக்கு கள ஆய்வுக் குழு பொறுப்பாளர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை,
இந்தக் கூட்டத்தில் கள ஆய்வுக் குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று உறுப்பினர் சேர்க்கை, செயல் வீரர் கூட்ட விவரங்கள், ஒவ்வொரு மாவட்ட அமைப்புக்குமான சட்டமன்றத் தொகுதிகள் மறு சீரமைப்பு பற்றிய ஆய்வு செய்து ரிப்போர்ட் அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார் எடப்பாடி.’
இந்த விவாதங்கள் முடிந்த நிலையில் சி.வி. சண்முகம் உள்ளிட்ட சிலர், ‘நீங்க திருச்சியில் கொடுத்த பேட்டிய வச்சி மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணியானு மீடியாக்கள்ல பேச ஆரம்பிச்சிட்டாங்கண்ணே…’ என்று சொல்ல, அதற்கு பதிலளித்துள்ளார் எடப்பாடி.
என்கிட்ட கேட்கப்பட்ட கேள்வியை நீங்க கேட்டீங்களா? என்கிட்ட என்ன கேள்வி கேட்டாங்க அப்டிங்கறதையே மறைச்சு அதை வேற மாதிரியே பரப்பிக்கிட்டிருக்காங்க.
கேள்வி கேட்டவரு, ‘உங்க கூட்டணிக்கு பாமகவையும் பாஜகவையும் வரவேற்க கதவை தெறந்து வச்சிருக்கீங்களா?’ என கேட்டாரு. நான் இதுல பாமகவுக்கு ஒரு பதிலும் பாஜகவுக்கு ஒரு பதிலும் சொல்லியிருந்தா… இன்னமும் அது பெரிசா விவாதிகப்பட்டிருக்கும். அதுமட்டுமில்ல, பாஜகவுக்கு ஒரு பதில், பாமகவுக்கு ஒரு பதில்னு சர்ச்சை கிளம்பியிருக்கும். அந்த சங்கடத்தை தவிர்க்கத்தான் ஒருமித்த கருத்து கொண்டவங்களோட கூட்டணினு பொதுவா சொன்னேன். இதை நாம ஏதோ பாஜகவோடு கூட்டணிக்கு தயாரா இருப்பதாக பரப்பிக்கிட்டிருக்காங்க. அதனாலதான் உடனே ஜெயக்குமாரை விட்டு பாஜகவோடு கூட்டணி இல்லவே இல்லைனும் அறிவிக்க சொன்னேன். அதனால பாஜக பற்றிய நம்ம நிலைப்பாட்ல எந்த மாற்றமும் இல்லை’ என சொல்லியிருக்கிறார் எடப்பாடி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடுத்தடுத்த போராட்டங்கள்… அரசு ஊழியர் சங்கத்தினரின் அதிரடி!
எம்.ஜி.ஆர் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் தலைவராக டிராட்ஸ்கி மருது நியமனம்!