வைஃபை ஆன் செய்ததும் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டப் படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 5ஆம் தேதி சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் நடைபெறக்கூடிய கட்சியின் மாநாட்டுக்கான இலச்சினை அறிமுக நிகழ்வும் இந்த கூட்டத்தில் நடந்தது.
மாநாட்டு இலச்சினையில் எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி படங்கள் சம அளவில் இடம்பெற்றுள்ளன. அண்ணாவின் படம் மேல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த இலச்சினையில் தந்தை பெரியாரின் படத்தையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வடிவமைப்பின் போது சி.வி. சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

அண்ணா படத்தோடு பெரியார் படத்தையும் சேர்த்து அச்சிட்டால் பாஜகவுக்கு நாம் உறுதியான மெசேஜ் கொடுக்கும் வகையில் இருக்கும் என்பது அவர்களின் கருத்து.
ஆனால் எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் இந்த லோகோவில் பெரியார் படம் இடம்பெறுவதை தவிர்த்து விட்டார் என்கிறார்கள். இது கூட்டத்தில் லேசான சலசலப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தக்காளி விலை மட்டுமல்ல பல்வேறு காய்கறிகள் மளிகை பொருட்கள் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.
திமுக ஆட்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களே சந்தோஷமாக இல்லை. நாம் ஆட்சியில் இருந்தபோது திமுக எம்எல்ஏக்கள் பெற்ற மகிழ்ச்சியை கூட இப்போது அவர்கள் பெற முடியவில்லை என்ற தகவல் எனக்கு கிடைக்கிறது.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் இன்னும் தேர்தல் கடனையே அடைக்க முடியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே திமுக தலைமையை நாம் கடுமையாக எதிர்ப்போம். அதே நேரம் திமுக சட்டமன்ற உறுப்பினர்களோடு இணக்கமான தொடர்பில் இருங்கள். அது என்றைக்கும் நமக்கு உதவும்.
கவலைப்படாமல் கட்சிப் பணிகளையும் மாநாட்டுப் பணிகளையும் ஆற்றுங்கள். அடுத்து ஆட்சி அமைக்கப் போவது நாம் தான்’ என்று பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் கூட்டணி பற்றி பேசும்போது அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். அதிமுக அணி தான் பிரம்மாண்டமான வெற்றி பெறும். என்றும் பேசி உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
கடந்த எடப்பாடி ஆட்சியில் பல்வேறு திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுகவின் அப்போதைய அமைச்சர்கள் மூலம் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் லாபம் அடைந்தார்கள் என்று பேசப்பட்டது.
அதை நேற்றைய அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு திமுக தலைமையை மட்டும் எதிர்ப்போம் என பேசி இருப்பது கட்சிக்குள் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது”என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.